Friday, December 5, 2008

பிறழ்வு

ஜோஸ் அன்றாயின்



நான் என்னிடமிருந்து தொலைவிலிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் அதைவிட மிகத் தொலைவிலுள்ளது. சக மனிதர்கள் என்னைப் பார்த்து முறுவலிப்பது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து நட்சத்திரங்கள் மின்னுவது போலத் தோன்றுகிறது. ஒருநாள் நான் பக்கத்து மேஜையில் இருக்கும் சக ஊழியரைப் பார்த்து 'எப்படி உங்களால் மிகத் தொலைவிலிருந்து அழகாகச் சிரிக்க முடிகிறது?' என்றேன். அவர் தானும் அதேக் கேள்வியை என்னிடம் கேட்க எண்ணியதாகப் பதிலளித்தார். 'சுயத்திலிருந்து விலகியிருக்கும் ஒருவரால் எப்படி ஒழுங்காக அலுவல்களைச் செய்ய முடியும்?' எனக் கேள்வி எழலாம். ஆனால் ஒரு கணினியின் நேர்த்தியுடன் என்னால் வேலையைச் செய்யமுடியும்.

என்னுடைய மேலாளர் குறிப்பிட்ட கோப்பை கேட்டாரென்றால் சற்றும் யோசிக்காமலேயே ஒரு கண நேரத்தில் அதை அவருக்கு எடுத்துக்கொடுக்க முடியும். நான் தட்டச்சுச் செய்யும் வர்த்தகக் கடிதங்கள், அறிக்கைகளிலும் எந்தத் தவறையும் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் அதிலுள்ள வார்த்தைகள் கணினியைப் போலவே எனக்கும் அர்த்தமற்றவைகளாகத் தோன்றுகின்றன. உண்மையில் நானும் என்னுடைய கணினியும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறோம். இதனால் எங்கள் இருவரின் வாழ்வும் பின்னிப்பிணைந்து விட்டன. என் கணினியின் விசைப்பலகையிலுள்ளப் பொத்தான்கள் என் விரல் கணுக்களின் நீட்சியாகவே இருக்கின்றன. நாங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதால் என்னுடைய மூளையும் கணினியின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. என் மனதில் ஏற்படும் பிம்பங்களை, என் கணினி தன்னுடைய திரையில் காட்டுகிறான். நான் என் மனதில் நினைப்பவற்றை என் கணினி உள்வாங்குவது போல் என்னுடைய நண்பர்கள் யாரும் உள்வாங்கியதாக எனக்கு நினைவில்லை. எனக்கும் என் கணினிக்கும் இருக்கும் அந்நியோன்யம் காரணமாக என்னால் எந்தத் தவறுகளும் செய்யாமலேயே வேலை செய்ய முடிகிறது. அப்படியே ஏதாவதுப் பிழை இருந்தாலும் ஒரு நல்ல நண்பனை போல என் கணினி அதைச் சுட்டிக்காட்டுவதோடு அதை திருத்துவதற்கான வழிமுறைகளையும் கொடுக்கிறான். நான் என்னுடைய கணினியை மிகவும் நேசிக்கும் காரணமும் இதுதான்.

நான் மிகவும் நேர்த்தியாக வேலை செய்வதால் என்னுடைய மேலாளருக்கு என்மேல் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் என்ன இருந்தாலும் என்னுடைய செயல்பாடுகளில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாக அவர் கருதினார். ஒருநாள் அவர் என்னை அழைத்து 'உங்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் கணினியைப் போல வேலைகளை எந்த உணர்ச்சியுமில்லாமல் செய்கிறீர்கள். மனிதர்கள் என்றால் உணர்ச்சிகள் வேண்டும். நம்முடைய நிறுவனம் முன்னேற வேண்டுமானால் நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினரைப் போலப் பழக வேண்டும். அதற்கு உணர்ச்சிகள் முக்கியம்' என்றார். எனக்குச் சிரிப்பாக வந்தது. நான் அவருக்கு "உணர்ச்சிகளின் சிகரம்" என பட்டப்பெயர் வைத்துவிட்டேன். சக ஊழியர்களும் அந்தப் பெயரை ஆமோதித்தார்கள்.

நானும் சக ஊழியர்களும் எங்களுக்குள் மேலாளரை பட்டப்பெயரிட்டு குறிப்பிடுவது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். எங்களில் சிலரின் பதவி உயர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவர். எங்களைப் போலவே வேலை செய்த கணினிகளுக்குப் பதவி உயர்வு இல்லை. இது எங்களையும் எங்களின் கணினிகளையும் பிரிக்கச் செய்யப்படும் சதி என எனக்குப்பட்டது. பதவி உயர்வு பெற்ற மற்ற சக ஊழியர்களின் முகங்கள் சோகத்துடன் இருப்பதைப் பார்த்தபோது அவர்களும் அவ்வாறுதான் எண்ணியிருக்க வேண்டும் எனத்தோன்றியது. ஆனால் நான் அவர்களைப்போல அமைதியாக இருக்கத் தயாராக இல்லை. என்னுடையப் பணிவிலகல் கடிதத்தை உடனே மேலாளரிடம் கொண்டு கொடுத்துவிட்டேன். அவர் அதிர்ந்து போனார். 'உங்களுடைய ஆத்திரம் எனக்குப் புரிகிறது. உங்களுடைய திறமைக்கு இந்த உயர்வுப் போதாது என்பது எனக்கு தெரியும். நான் மேலதிகாரிகளிடம் சிபாரிசு செய்து இதைவிட நல்லநிலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.' என்றார். எனக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. கோபத்தில் கட்டிடமே அதிரும்படி கத்திவிட்டேன். ஒரு வழியாக மேலாளர் எனக்கு என்னுடையப் பழைய வேலையையே கொடுத்துவிட்டார். நான் சுயநலவாதியல்ல. மற்றவர்களுடைய நலத்தில் அக்கறை கொண்டவன். எனவே என்னுடைய மற்ற சக ஊழியர்கள் தங்களுடைய நல்ல நண்பனாக இருக்கும் கணினியை இழந்து என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இதை மனதில் கொண்டு என்னுடைய சக ஊழியர்களுக்கும் அவரவர்களின் பழைய வேலையையே திருப்பிக் கொடுக்குமாறு எங்களுடைய மேலாளரைக் கேட்டுக்கொண்டேன். அவர் அவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதாகக் கூறினார். எனக்கும் அதுச் சரியாகப்பட்டது.

மேலாளர் அறையை விட்டு வந்ததும் என்னுடைய சக ஊழியர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். நான் அவர்களுக்காகவும் பரிந்து பேசியதை அவர்கள் எல்லோரும் வெளியிலிருந்து கேட்டிருக்க வேண்டும். எனக்கு என் செயலை குறித்துப் பெருமிதமாக இருந்தது. சந்தோசத்துடன் என்னுடைய நண்பனான என்னுடைய கணினியை தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அன்று எங்கள் நிறுவனத்தை நிறுவியவரின் நினைவு தினம் என்பதால் அரை நாள்தான் வேலை. அதனால் மதியமானதும் வீட்டிற்குப் புறப்பட தயாரானேன். ஒரு சில பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் மட்டும் மேலாளரைச் சந்திக்கும் பொருட்டு அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் என்னைப் போலத் தங்களுக்கும் தங்கள் பழைய வேலையைத் தருமாறு மேலாளரை கேட்கப்போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். அவர்கள் என்னைப் பின்பற்றுவது எனக்கு மிகுந்த சந்தோசமளித்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து பேருந்தில் ஏறிக்கொண்டேன். பேருந்திலிருந்து இறங்கி அறைக்குச் செல்லும் வழியில் உணவுப் பொட்டலம் ஒன்றை வாங்கி என்னுடைய அறையை நோக்கி நடந்தேன்.

அறைக்குள் இரவிற்கான இருள் எல்லாம் பதுங்கி இருப்பதாக உணர்ந்தேன். ஜன்னல்களைத் திறக்க அந்த இருள் பகலில் சென்று கரைந்துவிட்டது. பேரிழப்பு ஏற்பட்டதாக உணர மீண்டும் ஜன்னல்களை மூடிக்கொண்டேன். என் மனம் அமைதியை அடைந்தது. ஆனால் என்னைச் சுற்றியுள்ள சிறு உலகத்துக்கு அது பிடிக்கவில்லை போலும். அவைகள் இருளில் என்மீது மோத ஆரம்பித்தன. வேண்டாவெறுப்புடன் ஜன்னல்களை மீண்டும் திறந்தேன். எலி ஒன்று திறந்த ஜன்னல் வழியாக வெளியே ஓடியது. ஓடிப்போன எலியுடன் உலகத்திற்கும் எனக்குமான உறவு முறிந்து போனதாக எனக்குப்பட்டது. என் அறையிலுள்ள என் புத்தகங்களும், செய்திதாள்களும், தொலைகாட்சிப்பெட்டியும் கூட என்னைவிட்டுப் போய்விடுமோ என்றப் பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. மீண்டும் எழுந்து சென்று ஒரு ஜன்னலை மட்டும் லேசாகத் திறந்திருக்கும்படி செய்துவிட்டு மீதி எல்லா ஜன்னல்களையும் மூடினேன். பயம் நீங்கியது. ஆனாலும், மனமும், வயிறும் வெறுமையாக இருப்பதாக உணர்ந்தேன். வெறுமையிலிருந்து விடுபட ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருக்க நான் வாங்கிவந்த உணவுப் பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். சுவையற்றதாக இருந்த உணவு என்னஎன்றுச் சோதித்துப்பார்க்க, அது தயிர் சாதம் போல தோன்றியது. என் நாக்குக் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். சுவை உணர்ச்சியைத் தூண்ட நல்ல காரத்துடன் கோழிக்கறி சாப்பிட்டால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. அதை நினைக்கும் போதே என் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு நல்ல கோழிக்கறி வாங்குவதற்காகப் புறப்படத் தயாரானேன். அப்போது பல தீயணைப்பு வண்டிகள் பயங்கரச் சத்தத்தை எழுப்பிய வண்ணம் நான் குடியிருக்கும் கட்டிடத்தின் அருகிலிருக்கும் பிரதானச் சாலைக்கு வந்து சேர்ந்தன. வெளியே பயங்கர கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. நான் அறையை விட்டு இறங்கி வெளியே ஓடினேன். எங்கள் பகுதியிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கட்டிடங்களில் தீ பயங்கரமாகப் பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அந்தப் புகை உலகத்தையே இருளாக்கி விடும் போல இருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்க ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தனர். நிலவரத்தைத் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு ஒரு கூட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கு ஒருவர் தீ பக்கத்துப் பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருப்பதாகவும், பலப்பேர் இறந்திருக்கக் கூடும் எனவும் தன் அருகிலிருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவரை பார்த்து ' ஏன் எரிகிறது?' என்றேன். அவர் என்னை ஒருவிதமாக பார்த்தார். எனக்கு என்னுடைய தவறு புரிந்தது. நான் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு தேவையில்லாமல் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்புவதனால்தான் இப்படி நடக்கிறது. ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகப் படுத்துதல் மிகவும் அவசியம் என எனக்கு தோன்றியது. அதனால் நான் ஏற்கனவே செய்ய நினைத்த விசயத்தைச் செயல்படுத்தும் விதமாக 'இங்கே நல்ல கோழிக்கறி எங்கு கிடைக்கும்?' என்று அவரையேத் திருப்பிக் கேட்டேன். அங்கே இருந்த அனைவரும் என்னை எரிச்சலுடன் பார்த்தார்கள். அவ்வளவு கூச்சலும் குழப்பமும் இருந்த இடத்தில் நான் தனியனாக உணர்ந்தேன். பெரும் பீதி என்னைத் தொற்றிக்கொள்ள உடம்பெல்லாம் வேர்த்து போய்விட்டது. அங்கிருந்த அனைவரும் மிருகங்களை விடக் கொடுமையானவர்களாகத் தோன்றினார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமிருக்கவில்லை. எனவே அவ்விடமிருந்து மெதுவாக நழுவி அறையை நோக்கி நடந்தேன். நடக்க நடக்க, உருண்டையான உலகம் என்னை விட்டு என் கைகளிலிருந்து உருண்டோடிக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் அறைக்குத் திரும்பிய போது, என் அறையின் வாசலில் என் பால்ய கால நண்பனொருவன் நின்றுக்கொண்டிருந்தான். நானும் அவனும் சிறு வயதிலிருந்து சேர்ந்தேதான் படித்தோம். பல வருடங்களுக்கு அப்புறம் அவனை அப்போதுதான் பார்த்தேன். அவன், ஆள் மிகவும் மாறிவிட்டிருந்தான். 'என்னை எதிர் பார்க்கவில்லை இல்லியா?' எனச் சிரித்தப்படியே கேட்டான். அவன் எதற்குச் சிரிக்கிறான் என்று எனக்கு புரியவில்லை. 'நான் எதையும் பார்க்கவில்லை' என்று அவனுக்குப் பதிலளித்தேன். அவன் உற்சாகத்துடன் அரசியலைப் பற்றிப்பேச ஆரம்பித்துவிட்டான். இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பொதுவுடமை ஆட்சிதான் நல்லதென்றும். இந்தியாவில் பொதுவுடமை சோவியத் யூனியனைப் போல தோல்வியடைய வாய்ப்பில்லை எனவும் கூறினான். நான் மௌனமாயிருந்தேன். என் மௌனத்தைக் கண்ட அவன் எனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என நினைத்து பேச்சை மாற்றி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விசாரித்தான். 'வாழ்க்கையில் உன்னோட லட்சியம் என்ன? எப்பக் கல்யாணம் பண்ணிக்கப்போற?' என்று கேட்டான். நான் பதில் சொல்லமுடியாமல் விழித்தேன். அவன் தொடர்ந்து "காதல், காமம், கல்யாணம் பற்றி உன்னோட கருத்து என்ன?' என்றுக்கேட்டான். எனக்குப் பதிலளிக்க வேண்டும் எனத்தோன்றியது. வெறும் பதிலல்ல. சரியான இடத்தில் சரியான பதில் சொல்ல வேண்டும் என்று என்னுடைய அலுவலக அனுபவம் காட்டியது. அதனால் மிகுந்த கவனத்துடன் 'தேங்க்ஸ்' என்றேன். என்னுடைய நண்பன் என்னை குறித்து ஏமாற்றம் அடைவதாக கூறினான். எனக்கு அவனைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

நண்பன் சென்ற பிறகு கட்டிலுக்குச் சென்றுப் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. எதையோ நான் இழந்துவிட்டது போலத் தோன்றியது. முயற்சிச் செய்து மெல்லக் கண்களைமூட, பல்வித வண்ண நூலிழைகளால் சேலை ஒன்று நெய்யப்படுவதைக் கண்டேன். அச்சேலைக் காற்றில் படபடக்க ஆரம்பித்தது. மெல்லமெல்ல அந்த சேலையில் ஒரு பெண் உருக்கொள்ள ஆரம்பித்தாள். அவளின் ஒளியுள்ள கண்கள் என்னைப் பார்த்து புன்னகைத்தன. அவளின் அழகிய உடல் என்னில் காம கிளர்ச்சியை ஏற்படுத்தின. அவளின் ஸ்பரிசத்தில் என் இறந்து போன ஆன்மா உயிர்க்கொள்ள, கைமதுனம் செய்ய ஆரம்பித்தேன். என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை, திடீரென அப்பெண் சேலைக்குள்ளிருந்து மறைந்து போனாள். அதிர்ச்சியில் கண்களை திறக்க அந்தச் சேலையும் கூட என் அருகில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். மீண்டும் என் ஆன்மா வறண்டுப்போயிற்று. என் ஆண்குறி என்னிடமிருந்து மிகத் தொலைவிலிருப்பதாகத் தோன்றியது. வெறுப்பு தோன்ற கைமதுனம் செய்வதை விட்டுவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். சாலையில் மனிதர்களும், வாகனங்களும் பொம்மைகள் போல் சென்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அந்த உலகிலிருந்து விலகி வேற்று கிரகத்தில் தனியனாக இருப்பதை போல உணர்ந்தேன். அந்தத் தனிமை என்னை மிகவும் அழுத்தியது. சற்று தூங்கினால் தேவலை எனத்தோன்ற மீண்டும் கட்டிலில் போய் படுத்துக்கொண்டேன். கனவும் நனவும் மாறிமாறி வந்து என்னை ஏதோ ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றது. திடீரென அலாரம் அடித்தது. விடிந்துவிட்டது. தூங்கினேனா? ஆம்/இல்லை. என்னால் தீர்மானகரமாக யோசிக்க முடியவில்லை. இயந்திரக் கதியில் எழுந்துக்கொண்டேன். குளித்து உடைமாற்றித் தொலைக்காட்சிப்பெட்டியை ஆன் செய்ய, அதில் அன்றைய வானிலை அறிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய வெப்பநிலை வெறும் 17 டிகிரிதான் என்பதை அச்செய்தியறிக்கையிலிருந்து தெரிந்துக்கொண்டேன். குளிக்கும் போது நல்ல குளிராக இருந்ததாக இப்போது எனக்குத்தோன்றியது. 'சில இடங்களில் மழைப் பெய்யக்கூடும் எனவும், கடலிலிருந்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்' எனவும் அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது. அந்தச் செய்தியறிக்கை எனக்கு அயர்ச்சி அளிப்பதாகத்தோன்ற தொலைகாட்சிப்பெட்டியை ஆப்ச் செய்துவிட்டேன். மீண்டும் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு எனக்குள் தலைத்தூக்கியது. இழந்தது என்ன என்று எனக்குப் புரியவில்லை. திடீரென்று அலுவலகத்திலுள்ள என் நண்பனான கணினியின் ஞாபகம் வந்தது. அவனை உடனே பார்த்தாக வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. இப்போது எனக்கு எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படுவதன் காரணம் புரிந்தது. என்னால் என் நண்பனான கணினியை ஒரு போதும் பிரிந்திருக்க முடியாது. அவனை பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் என் ஆன்மாவை உந்த, நான் உடனே அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்காக பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
========================================================

புது எழுத்து (ஆடி 2007)

No comments: