ஜோஸ் அன்றாயின்
வனிதாவிற்கு பறவைகளின் உலகம் மிகவும் ஆச்சர்யமூட்ட கூடியதாக இருந்தது. அவைகள்தான் எவ்வளவு சுதந்திரமானவை! நிலவெளியெங்கும் பறந்து திரியும் அந்த பறவைகளை போல மாற வேண்டும் என ஆசைப்பட்டாள். அதனால் அவள் இளங்கலை பட்ட படிப்பு முடித்தவுடன் ‘திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று அம்மா கேட்டதற்கு, ‘இல்லை நான் பறவையியல் படிக்க போகிறேன்.’ என்று பதிலளித்தாள். பறவைகளின் உலகினுள் நுழைந்த அவள் பிரமித்துதான் போனாள். தளைகளற்ற காற்றில் உலாவும் பாடும் பறவைகள் தங்கள் உள்ளுணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிபடுத்துமாம். அவற்றின் குரலின் மூலம் தன் காதலனை அல்லது காதலியை அழைத்து தான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியபடுத்துமாம். சுதந்திரத்தில் அவைகளின் காதல் மலருவதால் அவற்றின் பிணைப்பு அவ்வளவு நெருக்கமாகவும் தூய்மையானதாகவும் இருக்கிறது போலும். அதிசயம் என்னவென்றால் அடைகாக்கும் வேலையை ஆண் புறாவும், பெண்புறாவும் மாறி மாறிதான் செய்யுமாம். புறாக்களின் தூய்மையான காதல் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட காதலர்கள்தான் முதன் முதலாக புறாக்கள் மூலம் கடிதங்கள் பரிமாறும் முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். பறவைகளின் காதல் வாழ்க்கையில் லயித்து போன அவளது இதயம் பறவைகள் பறந்து திரியும் வெளி போல் விசாலமானது. கனவுகளின் வாசல்கள் திறந்துக்கொண்டன. ஆண் பறவையொன்று அவளின் கனவுலகத்துக்குள் நுழைந்தது. காதலில் விழுந்துவிட்டாள். அந்த காதல் பறவைகள் வெளியெங்கும் பறந்து திரிந்தன. சமூக விழுமங்களின் கட்டுகளின்றி பறவைகளின் சுதந்திரம் அவர்களின் காதலில் நிறைந்திருந்தது. அவள் பறவைகளின் இசையில் காதல் பாடல்களைப் பாடினாள். அவள் காதலின் அழகு அவள் முகத்தில் மலர்ந்து பிரகாசித்தது. அவள் கண்களிலுள்ள கனவுகளை சுற்றியுள்ள உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் தங்கை சங்கீதா ‘கனவுலகத்தினுள் சிறகடிக்கும் காதலை உன் கண்களில் பார்க்கிறேன்.’ என்றாள். ‘பறவைகளிடமிருந்து கற்றுக்கொண்டேன்.’ என்றாள் வனிதா. தானும் பறவைகளை பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டாள் சங்கீதா.
பறவைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள புறப்பட்ட சங்கீதா பறவையாகவே மாறிவிட்டாள். பறவையாகி அவள் இசைத்த இசையில் மயங்கி எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் அவளுக்கென்று ஒரு காதலன். ‘எப்படி என்னிடம் வந்து சேர்ந்தாய்?’ என்று கேட்டதற்கு அவன், ‘பறவைகளின் இசையிலுள்ள அர்த்தங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியும். அதனால் உன் குரலை கேட்டதும் வந்தேன்.’ என்றான். ‘அது எப்படி?’ என்றாள் இவள். அவன் ‘நான் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்பவன். என்னதான் ஆய்வாளன் என்றாலும் பறவைகளின் காதல் வாழ்க்கை என்னை கவர்ந்துவிட்டது. அதனால் நானும் பறவையாகிப் போனேன். பறவையாகிவிட்ட உன்னையும் கண்டடைந்தேன்.’ என்று கூறினான்.
இரு சகோதரிகளின் காதல் வீடு முழுவதும் கனவுகளையும், இசையையும் கொண்டு நிறைத்தன. அவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் குடிகொண்டு காதலிசையை இசைத்தன. அம்மா சாந்தா தன் மகள்கள் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்தாள். பெரியவள் பறந்து போக எத்தனிப்பதையும் அவள் கவனித்தாள். அதனால் அவள் அவளைத் தனியாக அழைத்து, ‘வேண்டாம்... பறந்து போய்விடாதே. நான் சொல்வதை கேள். தாய் சொல் கேளாத வௌவால் தலை கீழாகத் தொங்கும்.’ என்றாள். வனிதா, ‘அம்மா பயப்படாதே. நான் பறந்து போக மாட்டேன்.’ என்றாள். ஆனால் அவை அவள் நாக்கிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளேயன்றி உள்ளத்திலிருந்து புறப்பட்டவையல்ல. உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் காதலை வெறும் வார்த்தைகளால் கட்டி போட இயலாது. வார்த்தைகளை மீறி அவள் பறந்து போனாள் காதலனுடன்.
தாய் காதலால் தனக்கு விளைந்த வாழ்வை நினைத்துப் பார்த்தாள். ஓடிப் போன மகளின் எதிர்காலத்தைக் குறித்து அவளினுள் பயம் எழுந்தது. விழுமங்கள் எனும் சகதியில் புரளும் சமூகத்தின் வாயோ அவர்களின் மேல் சேற்றைத் துப்பியது. தாய் துவண்டு போனாள். மகளின் எதிர்காலத்தையும் இழந்த பெருமையையும் மீட்கும் எண்ணத்துடன் உறவினர்களின் உதவியுடன் ஓடிப் போனவளை காதலனிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்து மாடியிலுள்ள கூண்டில் அடைத்தாள். கூண்டில் அடைக்கப்பட்டப் பறவை வாடி வதங்கி போனது. உணவு உட்கொள்ள மறுத்தது. எவ்வளவு கெஞ்சியும் அவள் இசைவதாக இல்லை. தாய் அவளைப் பார்த்து, ‘இரையில்லா தன் குஞ்சுகளுக்கு தன் இரத்தத்தையே உணவாக கொடுத்த பெலிகான் பறவையைப் போல நான் உங்களை வளர்த்துள்ளேன். அப்படி வளர்த்த உங்களை நான் கழுகுகளுக்கு இரையாக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் உன் நன்மைக்காகத்தான் செய்கிறேன் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.’ என்றாள். சாந்தா சொன்னது உண்மைதான் என்று அவள் கதையை அறிந்தவர்களுக்குத் தெரியும்.
சாந்தா ஒரு பருவ மங்கையாக இருந்த போது எங்கேயோ இருந்து வந்த வளையல் விற்கும் ஒரு வாலிபன் அவளை சுற்றி வளைய வளைய வந்தான். அவனிடம் அவள் மனதைப் பறிகொடுத்தாள். அவளின் குயில் போன்ற குரலைக் கேட்டு மயங்கி நின்றான் அவன். காதல் கருவாகி வயிற்றில் வளர்ந்தது. அவள் காதலன் மற்ற பகுதிகளில் வியாபாரம் செய்து திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். நாட்கள் சென்றன. அவன் வரவில்லை. அவளின் பெற்றோர், ‘அவன் வரமாட்டான். கருவைக் கலைத்துவிடு.’ என்று கூறினர். அவள், ‘இல்லை. அவன் என்னைப் பார்க்கக் கண்டிப்பாக வருவான்.’ என்று கூறி மறுத்துவிட்டாள். குழந்தை பிறந்த பிறகு ஒரு நாள் அவன் அவளைப் பார்ப்பதற்காக வந்தான். அவன் கண்களில் காதலின் தகிப்பு இருந்தது. அவன் உள்ளத்தில் காதலின் உயிருள்ள ஊற்று இன்னும் வற்றவில்லை என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் அவன், ‘என் தாய் தந்தையர் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதுவும் கையில் ஒரு குழந்தையுடன்.’ என்று கூறிச் சென்றுவிட்டான். அவள் தவித்துப் போனாள். சமூக விழுமங்கள் மற்றும் தாய் தந்தைப் பற்றிய பயம்தான் வளையல்களிட்ட தன் கையை அவன் பிடிப்பதற்குத் தடையாயிருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். அந்த தடைகளைத் தாண்டிவிட்டால் தான் தன் காதலனை அடைந்துவிட முடியும் என அவள் நம்பினாள்.
முடிவெடுத்தவள் கையில் குழந்தையுடன் வழியெங்கும் அவன் விற்ற வளையல்களின் ஓசைகளை பின் தொடர்ந்து அவன் ஊருக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தாள். ஊரின் மையத்திலுள்ள கோவிலில் குழந்தையைக் கிடத்தி, அங்கு குழுமிய ஊராரிடம் ‘இது விமலனுடைய குழந்தை. எனக்கு நியாயம் சொல்லுங்கள்.’ என்றாள். அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தனர். வேறு வழியில்லாமல் விமலனின் பெற்றோர் அவளை ஏற்றுக்கொண்டனர். அவன் மகிழ்ந்து போனான். தூய்மையான காதலின் முழுமையை அவள் முகத்தில் கண்டான். இணைந்த காதல் உள்ளங்களுக்கு காதலின் கொடையாக வந்து பிறந்தது இன்னொரு குழந்தை. பிறக்கும் போது அவள் அழவில்லையாம், பாடினாளாம். சங்கீதா என்று பெயரிட்டனர்.
இயற்கையின் போக்கு எப்போதுமே மனித விருப்பங்களுக்கேற்ப வளைந்து கொடுப்பதில்லை. எவ்வளவு முயன்றாலும் இயற்கையை மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை. மாறாக மனிதர்கள்தான் அதன் விதிமுறைக்குள் இயங்க வேண்டியுள்ளது. விமலனும் சாந்தாவும் சேர்ந்து உன்னதமான கனவுலகத்தைப் படைத்து அதில் வாழ விரும்பினாலும் இயற்கை காசநோய்க்கு விமலனை இரையாக்கி அவர்களின் கனவை கலைத்தது.
கலைந்த கனவுகளுடன் நிர்கதியாய் நின்ற அவளையும் அவளது குழந்தைகளையும் மாமனாரும், மாமியாரும் மோசமாக நடத்தினர். அவர்களின் துன்பத்தை கேள்வியுற்ற அவளது பெற்றோர் அவளைஅழைத்து போக வந்தனர். ‘காக்கை கூட்டில் தனியாக விடப்பட்டு பரிதவிக்கும் குயில் குஞ்சுகளை போன்று அவள் மற்றும் அவள் குழந்தைகளின் நிலை இருந்தது.’ என்று சாந்தாவின் அம்மா கூறினாள். தாய் தந்தையின் அரவணைப்பில் சாந்தா குழந்தைகளுடன் தன் வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்தாள். வேதனையில் உழன்றவர்கள் என்பதற்காகத் தன்னை இயக்கும் விதிகளை நிறுத்தி வைத்து இயற்கை யாருக்கும் கருணை காட்டுவதில்லை. அது தொடர்ந்து தன் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. பட்ட காலில்தான் படும். இயற்கை அதன் விஷச் சுழியில் வயதான அவளின் பெற்றோர்களை ஒவ்வொருவர்களாக அமிழ்த்தி சாவைத் தழுவச் செய்ததது. தன் குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டாள் சாந்தா. ஆம், தியாகம் நிறைந்த அந்த பெலிகான் பறவையை போலத்தான் தன் குழந்தைகளை வளர்த்தாள் அவள்.
கூண்டிலடைக்கப்பட்ட பறவைக்கோ தன் தாயின் துன்பத்தைவிட தன் காதலன் படும் துன்பம் பெரிதாகத் தெரிந்தது. உணவு உட்கொள்ளாமல் இருந்தாலும் காதல் அவளினுள் கனன்று கொண்டுதானிருந்தது. கனன்று கொண்டிருந்த காதலால் உருவான வெம்மை கூண்டு முழுவதும் பரவியது. அந்த வெம்மையின் மிகுதியால் ஜன்னல் கம்பிகள் வளைந்து கொடுத்தன. பறவை வெளியே பறந்து போயிற்று. வெளியே அவள் காதலன் அவளுக்காக காத்திருந்தான். பறவைகள் இரண்டும் எங்கோ கண் தெரியாத தேசத்திற்கு பறந்து சென்றுவிட்டன.
பெரியவளைத் தொடர்ந்து இளையவளும் பறந்து போய்விடப் போகிறாள் என்பதை அவள் கண்களைப் பார்த்தே கண்டுபிடித்தாள் தாய். இதற்கெல்லாம் காரணம் பறவைகள்தான் என்று எண்ணி வீட்டு தோட்டத்திலுள்ள மரங்களில் குடியிருந்த எல்லா பறவைகளையும் துரத்திவிட்டாள். தாய் வீசிய விழுமங்களால் பின்னப்பட்ட வலையில் சங்கீதா மாட்டிக்கொண்டாள். எவ்வளவு எத்தனித்தும் அவளால் அதிலிருந்து விடுபட்டு பறந்து போக முடியவில்லை. அவளுடைய நிலைமையை பறவைகள் அவளுடைய காதலனுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அவன் எங்கிருந்தோ பறந்து வந்தான் அவளுக்காக. ஆனால் தாயோ, துரத்தி வரும் பருந்திடம் போரிட்டும், சிறகுகளுக்குள் மறைத்தும் தன் குஞ்சை பாதுகாக்கும் தாய்க் கோழியைப் போல அவனிடம் இருந்து அவளைப் பாதுகாத்துக்கொண்டாள். அவனுடன் எப்படியாவது பறந்து போக வேண்டும் என முட்டி மோதிய சங்கீதா இதயத்தில் அடிபட்டு கீழே விழுந்தாள். இசை வற்றிப்போன அவளிடம் வெறும் அழுகைதான் எஞ்சியிருந்தது. அந்த அழுகை வீடு முழுவதையும் நிறைத்து துக்கத்தை பரவவிட்டது. அந்தத் துக்கத்தில் அமிழ்ந்து போனாள் தாய். ‘பறக்க கற்றுக்கொண்ட பறவைகள் பறந்து தனித்துப் போவதை போல் அவளை பறந்து போக விட்டு விழுமங்களென்னும் வெள்ளை அங்கியை உடுத்திக்கொண்டிருக்கும் சமூகத்தை எள்ளி நகையாடினால் என்ன?’ என்ற எண்ணம் திடீரென்று அவளினுள் எழுந்தது. ஆனால் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவளை பிடித்து வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். ஒருவேளை அவ்வாறு செய்வதன் மூலம் இழந்த தன் குலப் பெருமையை சமூகத்தில் அவள் நிலைநாட்ட எண்ணியிருக்கலாம்.
சிதைந்து போன கனவுகளுடன் சங்கீதா தன் கணவனுடன் சென்றாள். பறவைகளுடைய சுதந்திரம் அவர்களின் உறவில் இருக்கவில்லை. விழுமங்களின் கட்டுகளுக்குள் தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அவளினுள் இருந்த காதலின் உயிரூற்று வற்றிப் போயிற்று. அடிபட்ட நொண்டிப் பறவை போலானாள் அவள். எப்படியேனும் தன் காதலனுடனான காதல் வாழ்வின் கனவுகளுடனும், நினைவுகளுடனும் வாழ்ந்துவிடலாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவள் கணவன் அவளைத் தொடுகிற ஒவ்வொரு முறையும் அந்தக் கனவுகளும், நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக கருகுவதை உணர்ந்தாள். அத்துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவள் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள். அவள் மாண்டு போய்விட்டாள் என்பதை அறிந்த அவள் காதலனும் தன்னை மாய்த்துக்கொண்டான்.
மகளின் இறப்பால் தாய் உடைந்து போனாள். புத்தி பேதலித்து போன அவள், ‘நான் கொலைகாரி அல்ல... நான் கொலைகாரி அல்ல...’ என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்பச் சொன்னாள். தாயின் ஓலத்தைக் கேட்ட வனிதா தன் கணவனுடன் எங்கிருந்தோ பறந்து வந்தாள். சிறகுடைந்து படுக்கையில் விழுந்துவிட்ட தாயை ஆறுதல் படுத்த முற்பட்டாள். தாய் அவளிடம், ‘அவள் காதலன் நல்லவனல்ல. அதனால்தான் நான் அவளைத் தடுத்தேன். என் மகள் இறந்ததும் அவன் தன்னை மாய்த்துக்கொண்டது அவள் மேலுள்ள காதலால் அல்ல. மாறாக தான் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியினால்தான். இப்போது சொல் நான் மகளையே கொன்ற கொலைகாரியா என்று?.’ என கேட்டாள். அவள், ‘அம்மா தங்கை சாகவில்லை. அவள் வானுலகில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அதனால் இனி அவளைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டாம்.’ என்றாள். உடனே தாய், ‘ஆம் என் மகள் விண்ணுலகத்துக்கானவள். அதனால்தான் அங்கு அவள் பறந்து சென்றுவிட்டாள்.’ என்று கூறினாள். நாளடைவில் தாய் தூங்குவதையே நிறுத்திக் கொண்டாள். நடு நிசியில் எழுந்து தன் மகளைப் பற்றி அரற்ற ஆரம்பித்தாள். வனிதாவும் அவளது கணவனும் மருத்துவரை அழைத்து வந்து அவளுக்கு மருத்துவம் செய்தனர். மருந்துகளை உட்கொண்ட அவள் அயர்ந்து தூங்கிப் போனாள். மறுநாள் காலையில் எழுந்தவுடன் அவள், தான் விண்ணகத்திலிருக்கின்ற, பறவைகளும், தும்பிகளும் பறந்து திரியும் ஒரு பூந்தோட்டத்தில் சங்கீதா விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், தானும் அதனுள் போக முயற்சித்ததாகவும், ஆனால் பூந்தோட்டத்தைச் சுற்றியுள்ள முள் வேலி அவளை உள்ளே போகவிடாமல் தடுத்ததாகவும், என்ன வந்தாலும் தான் அந்த பூந்தோட்டத்தினுள் செல்வதற்கான முயற்சியை ஒரு போதும் கைவிடப்போவதில்லை என்றும் கூறினாள். ஒரு வழியாகத் தாயை தேற்றித் தன் மடியில் தூங்க வைத்தாள் வனிதா.
மகளின் மடியில் தூங்கிப் போன தாய் மீண்டும் கனவு கண்டாள். அதே விண்ணகத் தோட்டத்தில் சங்கீதா அவள் காதலனுடன் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்தாள். இவள் மனம் குதூகலமடைந்தது. தானும் உள்ளே சென்று அவர்களுடன் கலந்துவிட வேண்டும் என நினைத்து முள்வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட முயற்சித்தாள். அது அவளுக்கு மிகவும் சிரமமாயிருந்தது. அப்போது அவளைப் பார்த்த சங்கீதாவும் அவளது காதலனும் அன்புடன் ஓடிவந்து அவளை உள்ளே இழுத்துக்கொண்டனர்.
வனிதாவின் அழுகையை கேட்டு ஓடி வந்தான் அவளது கணவன். அவள் தன் தாயின் பிணத்தின் மீது விழுந்து அழுதுகொண்டிருந்தாள். அவளைத் தேற்ற முற்பட்டவன் தானும் உடைந்து அழ ஆரம்பித்தான். அக்கம் பக்கத்திலுள்ள மனித முதலைகள் அவர்கள் துக்கத்தில் பங்குக்கொள்ளும் பொருட்டு அங்கு குழும ஆரம்பித்தனர் கண்களில் கண்ணீருடன்.
======================================
புதிய பார்வை நவம்பர் 16-30 2007

No comments:
Post a Comment