Tuesday, September 22, 2009

நெஞ்சழுத்தம்

ஜோஸ் அன்றாயின்

சோவியத் யூனியன் உடைந்து போனவுடன் கேசவனும் உடைந்து போனான். சோசலிசம் உலகமெங்கும் மலர்ந்து சமூகத்தையே மாற்றியமைக்க போகிறது என்ற அவனது கனவு உடைந்து போனதுதான் காரணம். சோசலிச கனவை மெய்யாக்க இயக்கத்தில் சேர்ந்து அவன் ஆற்றிய பணிகள் அளப்பரியது என்பதை அவனை அறிந்த யாவரும் அறிவர். விலைவாசி உயர்வை எதிர்த்தப் போராட்டமாகட்டும், அரசின் பொருளாதரக்கொள்கைக்கு எதிரான போராட்டமாகட்டும் அவன் முன்னின்று போராடினான். போராட்டங்களை கட்டுபடுத்த போலீஸ் படைகள் குவிக்கப்பட்டாலும் “உங்களால் எங்களை என்ன பண்ண முடியும்” என்று நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டான். அதற்காவே மேலதிகாரிகளிடமிருந்து லத்தி சார்ஜ் செய்ய உத்தரவு கிடைத்ததும் போலீஸார் அவனைத் தனியாக கவனிப்பதுண்டு. இருந்தாலும் ஓடிவிடமாட்டான். அடிவாங்கிக்கொண்டே போலீஸ் அராஜகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பான். ஆனால் சோவியத் யூனியன் உடைந்ததும் அவன் முன்னால் உள்ள கனவுப்பாதை உடைந்து போயிற்று. உடைந்தே போய்விட்டான்.

அப்போதுதான் அவன் ரிச்சர்ட் டாக்கின்ஸின் “சுயநலமிக்க மரபணுக்கள்” என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. மனிதனின் சுயநலமானது அவனுடைய மரபணுக்களின் உள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அந்தப் புத்தகத்தை படித்ததன் மூலம் தெரிந்துகொண்டான். அப்படியானால் முதலாளித்துவ கொள்கை தூக்கிபிடிக்கும் சுயநலம் சார்ந்த தனியார் உடமை இயல்பானது என்றும் முதலாளித்துவ பொருளாதாரமானது போட்டியை ஏற்படுத்தி சமூகத்தின் செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும் என்றும் முடிவுக்கு வந்தான். சோசலிச தத்துவத்தின் தோல்வி  என்பது முதலாளித்துவ தத்துவத்தின் வெற்றியென்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவனுடைய சகத் தோழன் ராகவன் எச்சரித்தான். முதலாளித்துவ தத்துவம் மேலை நாடுகளை எந்த அளவுக்கு செல்வச் செழிப்புள்ள நாடுகளாக மாற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அவனுடைய வாயை அடைத்துவிட்டான் கேசவன். அன்றிலிருந்து முதலாளித்துவ ஜனநாயகம்தான் மனித குலத்தின் செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அந்தத் தத்துவத்தை மனதார ஏற்றுக்கொண்டான். உடைந்து போன அவன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினான். உற்சாகத்துடன் முதலாளித்துவ உலகத்தில் புகுந்தான். ஒரு பெரிய கம்பெனியில் பொதுமேலாளராக வேலைக்கு சேர்ந்துகொண்டான். நிறுவனம் வளர்ச்சியடைந்தது. சோசலிசவாதியாக இருந்து முதலாளித்துவவாதியாக மாறிய கேசவனை பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதின.

ஆனால் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த முதலாளித்துவ உலக பொருளாதாரம் தேக்கமடைந்ததும் இவனும் தேக்கமடைந்து போனான். வேலையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பர்ந்தத்திற்கு ஆளானான். முதலாளித்துவக்கொள்கையை பின்பற்றி கட்டப்பட்ட பெரிய பெரிய வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் பொருளாதார தேக்கத்தில் மாட்டிக்கொண்டு திவாலாகிப் போனதும் வேறு வழி இல்லாது முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறுவதற்கான அரசியல் தத்துவம் தன் கையில் இல்லாதிருப்பதை உணர்ந்தான். அவனுடைய அரசியல் ஞானம் அவனை கைவிட்டது. தேக்கமடைந்துபோனான். தூக்கமில்லாமல் போனது, எப்போதும் நெஞ்சு படபடத்தது, படுத்தாலே மாரடைப்பு வருவதாகத் தோன்றியது. டாக்டரை சந்தித்தான். நன்றாக பரிசோதித்தார். நோயில்லை என்றார். ஆனாலும் அவனுக்கு அந்தப் பிரச்னைகளோ தொடர்ந்து இருந்தன. அந்த டாக்டர் சரியில்லை என நினைத்தான். டாக்டருமே தேக்கமடைந்துவிட்டதாக தோன்றியது. தன் நிலைமையை தனக்கு மிக நெருங்கிய டாக்டர் நண்பனிடம் தெரிவித்தான். அவன் பொதுமருத்துவத்தில் மட்டுமல்ல மனநல மருத்துவத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். தன் நண்பனால் மட்டுமே சிறந்த மருத்துவம் செய்யமுடியும் என்று நம்பி அவன் வேலை பார்க்கும் அரசு மனநல மருத்துவமனைக்குச் சென்றான்.

நண்பன் கேசவன் சொன்ன எல்லா விசயங்களையும் கூர்ந்து கவனித்த பிறகு கேசவனுக்கு உடல் நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். “உனக்கு உடல் ரீதியா எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா மன அழுத்தம் இருக்குது. அதனாலதான் உனக்கு தூக்கம் வரல. மாரடைப்பு வர்றது மாதிரி எல்லாம் தோணுது.” என்றான். கேசவன் கொந்தளித்துப் போய்விட்டான். மன அழுத்தத்தால் சுகவீனமானதாகக்கொண்டால் தனக்கு மனநோய் இருக்கிறது என்றாகிவிடும். பள்ளிகூடத்தில் படிக்கும்போது சிஸ்டர் லிகோரியா மேரி அவனை பார்த்து “உனக்கு நெஞ்சழுத்தம் ரொம்ப அதிகம்டா.” என்று கூறியது ஞாபகம் வந்தது. நண்பன் கூறுவதை ஒத்துக்கொண்டால் தனக்கு மனநோய் சிறுவயதிலிருந்தே இருக்கிறதாக மாறிவிடும். “எனக்கு மனநோய் எல்லாம் இருக்க வாய்ப்பில்ல. ஒனக்கு சரியா நோய பரிசோதிச்சு சொல்லத் தெரியல அதனாலத்தான் நீ இப்படிப் பேசற.” என்றான் கேசவன். “மன அழுத்தம் ஒரு நோய் கெடையாது. அத கம்மி பண்றதுக்கு மாத்திரை தர்றேன். அத நீ ஒரு வாரம் சாப்பிட்டாலே போதும்.” அதற்கு கேசவன், “ஆனா எனக்கு மன அழுத்தம் கெடையாது. நீ சிஸ்டர் லிகோரியா மேரிய பாத்து பேசிருக்க. அவங்கதா எனக்கு நெஞ்சழுத்தம் இருக்குன்னு உங்கிட்ட போட்டு குடுத்திருக்காங்க.” என்றான். “சிஸ்டர் லிகோரியா மேரி இறந்து ஒரு வருசத்துக்கு மேல ஆகுது. அதுக்கப்புறம் நான் எப்படி அவங்ககிட்ட பேசமுடியும்.” “அப்படீன்னா நீ அவங்க பள்ளிகொடத்துல சொன்னத ஞாபகம் வச்சிகிட்டு பேசுற.” “நான் எதையும் மனசுல வச்சுகிட்டு பேசல. உண்மையத்தான் சொல்றேன். நீ நம்புன சித்தாந்தம் தோத்து போச்சு. உன் மொதலாளி ஒன்ன முதுகுல குத்திட்டாரு. அதுதான் ஒனக்கு மன அழுத்தம் வரக்காரணம்.” என நண்பன் கூற, “என்ன யாரும் முதுகுல குத்த முடியாது. குத்துனா நான் வயித்துல குத்திருவேன். பள்ளிக்கூடத்துல போட்ட பழைய சண்டை எல்லாத்தையும் மனசுல வச்சுகிட்டு இப்போ நீதான் என்ன முதுகுல குத்துற.” என்றான் கேசவன். அவனை டாக்டர் நண்பன் தான் அணிந்திருந்த கண்ணாடிகளுக்கு ஊடே கூர்ந்து கவனித்தான். கேசவனுக்கு கோபம் மேலும் அதிகரித்தது. அவன் கண்ணாடி மேலேயே ஒரு குத்துவிடலாம் என்று முஷ்டியை கொண்டுசென்றான். ஆனால் பழைய கோபத்திலேயே தனக்கு மனநோய் இருக்கிறது என்று கூறுகிறான் என்றால், இப்போது சண்டையிட்டால் தன்னை மனநோய் முற்றியவன் என்று முத்திரை குத்தி வார்டுக்குள் அடைத்துவிடுவான். கேசவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. குத்துவதற்கு நீட்டிய கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.

டாக்டர் நண்பன் எதையுமே கண்டுகொள்ளாமல் மீண்டும் “நீ இந்த மாத்திரைகளை சாப்பிட்டா போதும். ஒனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.” என்றான். கேசவன் “நான் மனநோய்க்கான மாத்திரைகளை சாப்பிடவேண்டிய எந்த அவசியமுமில்லை.” என கத்தினான். “இது மனநோய்க்கான மாத்திரை இல்லை.” என உறுதி கூறினான் நண்பன். கேசவன் மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று, “இது மனநோய்க்கான மருந்தா?” எனக் கேட்க, மருந்துக்கடை பணியாளன் “இதை மனநோய்க்கான மருந்து எனக் கூறமுடியாது.” எனக் கூற அந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டான்.

மனநோய் இல்லாமலேயே ஏன் டாக்டர் நண்பன் தனக்கு மனநோய் இருப்பதுபோல் வியாக்கியானங்கள் பண்ணினான் என்று கேசவன் இரவு முழுக்க தூங்காமல் யோசித்தான். அப்போதுதான் சிஸ்டர் லிகோரியா மேரி பள்ளிக்கூடத்தில் சொன்ன வார்த்தைகளை வைத்துகொண்டு அவனுக்கு மனநோய் இருப்பதாக நம்பி அவனுடைய சொத்து முழுவதையும் கையெழுத்திட்டு வாங்கி அபகரித்துக்கொள்ள சுயநலமிக்க நண்பன் முயற்சி செய்வது புரிந்தது. “அது நடக்கப்போவதில்லை. ஏன்னா நான் எவ்வளவு தெளிவான ஆள் என்று அவன் கையெழுத்து வாங்க வரும்போது காட்டுகிறேன்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான் கேசவன். அதன் பிறகு பல தடவை டாக்டரை கேசவன் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவன் கேசவனிடம் எங்கும் கையெழுத்து போடுமாறு கேட்கவேயில்லை. கேசவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும் டாக்டர் தன்னிடம் கையெழுத்து வாங்க வராத காரணம் தான் மிகவும் தெளிவாக இருப்பதுதான் என்பதை உணர்ந்தான். அப்படியென்றால் அவன் தன்னை மனநோயாளி என்று முத்திரை குத்த முயற்சிக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணி குழம்பிப்போனான். ஒருவேளை சிறுவயதில் இருவருக்கும் இருந்த பகையை டாக்டர் இப்போதும் வெளிபடுத்துகிறான் என அவனுக்கு யோசிக்கத் தோன்றியது. காரணம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அவன் தன்னை மனநோயாளியாக சித்தரித்து மொட்டையடித்து சிறைபோலிருக்கும் வார்டுக்குள் அடைத்துவிட முயற்சி செய்வான் என்பதை உணர்ந்துகொண்டான். எந்த விளைவுகளைப் பற்றியும் கேசவனுக்கு கவலையுமில்லைதான். ஆனால் மனநோயாளி என்று முத்திரை குத்தி மொட்டையடிக்கப்பட்டால் தன் காதலி தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயம் மட்டும்தான் அவனை வாட்டியது. “நான் மொட்டைத்தலையுடன் இருந்தால் உனக்கு பிடிக்குமா.?” என்று முன்னெச்சரிக்கையாகவே காதலியிடம் கேட்டான். அவள், “ஒனக்கு மொட்டை நல்லா இருக்காது.” என்று கூறினாள். கேசவன் பயம் மேலும் கூடியது.

இப்போது டாக்டரின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பி காதலியுடன் வெளியூருக்கு சென்றுவிட வேண்டுமென்று அதற்கான வழிகளை தேட ஆரம்பித்தான் கேசவன். டாக்டர் தன்னை ஒரு ஆபத்தான மனநோயாளி என்ற பொய்த் தகவலை போலீஸுக்கு கொடுத்து தான் எங்கும் தப்பியோட முடியாதபடி பஸ் நிலையங்கள் ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் கண்காணிக்க ஏற்பாடு செய்தால் நிலைமை ரொம்பவும் சிக்கலாகிவிடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகவே காதலியிடம் சிறுவயதிலிருந்தே டாக்டர் விரோதியாக நடந்துகொண்டதை விளக்கி, தற்போது மனநோய் டாக்டராக இருக்கும் அவன் சொல்வதை எளிதில் மற்றவர்கள் நம்புவார்கள் என்பதால் மனநோயாளியாக தன்னை முத்திரை குத்தி மொட்டையடித்து வார்டுக்குள் தள்ள எள்ளளவும் தயங்கமாட்டான் என்பதை தெளிவாகப் புரியவைத்தான். கேட்ட காதலி அதிர்ந்துவிட்டாள். “போலீஸிடம் டாக்டருக்கு எதிராக கம்ளெயிண்ட் கொடுக்கலாமா?” என்றாள். கேசவன் சம்மதிக்கவில்லை. அது மேலும் பிரச்னையை சிக்கலாக்கும் என்று கருதினான். அதனால் இருவரும் வேறு நகருக்கு தப்பிப்போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வாழ்வதென்று தீர்மானித்தனர். அதற்காய் இருவரும் தீவிரமாய் ஆயத்தமாயினர். அவர்கள் வெளியூருக்கு கிளம்பவேண்டிய அன்று கேசவன் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக கதவைத் திறக்க வாசலில் டாக்டர் நின்றிருந்தான். கேசவன் அதிர்ந்துபோனான். டாக்டரால் முற்றிலும் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதாக தோன்றியது. அவனுக்கு தப்பிப்பதற்கு வேறு வழி தெரியாததால் அவனுடைய காலில் விழுந்து அழ ஆரம்பித்தான். காதலியுடன் வெளியூர் சென்று வாழ அனுமதிக்குமாறு கெஞ்சினான். டாக்டரோ திருமணம் செய்துகொண்டு வாழ வெளியூர் செல்லவேண்டிய அவசியமில்லை என்றும் உள்ளூரிலேயே திருமணத்தை நடத்த தானே எல்லா ஏற்பாடுகளைச் செய்வதாகவும் சிகிச்சையை மட்டும் நிப்பாட்ட வேண்டாமென்றும் கூறினான். கேசவனுக்கு டாக்டர் மீது சந்தேகம் வலுத்தது. என்னவிருந்தாலும் இப்போது டாக்டர் சொல்வதையே கேட்கும்படியாயிற்று.

அடுத்தமுறை வரும்போது கேசவன் காதலியை கூட்டிவரவேண்டுமென்று டாக்டர் நண்பன் நிர்பந்தித்தான். அந்த வேண்டுகோளே தப்பான எண்ணத்துடன்தான் எழுப்பப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள கேசவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. ஆனால் அவனால் எதுவும் இப்போது செய்யமுடியாது. முரண்டுபிடித்தால் டாக்டர் கண்டிப்பாக தன்னை வார்டுக்குள் அடைத்துவிட்டு காதலியை அவன் வசம் வைத்துக்கொள்ள முயற்சிசெய்வான் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அதனால் மறுமுறை மனநல மருத்துவமனைக்கு போகும்போது காதலியையும் கூட்டிப்போக வேண்டியதாயிற்று. டாக்டர் அறையில் காதலி செலவு செய்த ஒவ்வொரு கணமும் கேசவனுக்கு ஒரு யுகமாக தோன்றியது. ஒரு வழியாக அவள் டாக்டரின் அறையிலிருந்து வெளிவந்தாள். “ஏன் மூணு மணிநேரமாச்சு?” என கேசவன் கேட்க அவள், “மூணு மணிநேரமாச்சா... அரை மணிநேரந்தானே ஆச்சு?” “என்ன அர மணிநேரந்தான் ஆச்சா...? என்ன எனக்கு கணக்குத் தெரியாதுனு நெனைக்கிறியா? நான் 10வதுல கணக்குக்கு நூத்துக்கு நூறு மார்க்கு வாங்கியிருக்கேன்.” “நான் உள்ள போனது 2.10க்கு. இப்ப மணி என்னன்னு கடிகாரத்தை பாரு.” என கேசவன் கைக்கடிகாரத்தை பார்க்க முள் 5.20ல் நின்றுபோயிருந்தது. அது அப்போதுதான் நின்று போயிருந்ததா அல்லது காலை 5.20க்கே நின்றுபோனதா என்று அவனுக்கு பிடிபடவில்லை. வெளியே எட்டிப்பார்த்தபோது மேகமூட்டமாய் இருந்ததால் நேரத்தை அவனால் கணிக்கமுடியவில்லை. அவள் அப்போதுதான் டாக்டர் அறையிலிருந்து வந்திருக்கிறாள். அவன் கண்டிப்பாக தனக்கு மனநோய் உள்ளதாக காதலியிடம் கதை கட்டியிருப்பான். இனிமேலும் நேரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தை சொன்னால் காதலியும் கூட தனக்கு மனநோய் இருக்கிறது என்று சந்தேகிக்கக்கூடும் என பயந்த கேசவன் மேலும் பேச்சை வளர்க்காமல் விட்டுவிட்டான். கேசவன் உள்ளே சென்றதும் டாக்டர் ஏற்கனவே கொடுத்த மாத்திரைகளோடு வேறு இரண்டு மாத்திரைகளையும் வாங்குவதற்கு மருந்து சீட்டு எழுதிகொடுத்தான். காதலியிடம் அவன் மனநோயாளி என்று நிரூபிக்கும் பொருட்டுதான் அதிக மருந்துகளை எழுதிகொடுக்கிறான் என்பதை அறிவான் கேசவன். இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கோபத்தில் தனக்கு மனநோய் உள்ளது என்று பொய்த் தகவலை பரப்புவதாய் டாக்டரிடம் சண்டையிட்டால் அந்தச் சண்டையையே சாதகமாக பயன்படுத்தி மனநோய் இருக்கிறது என்று அடித்து கூறி காதலியை பிரித்துவிடுவான். எந்தக் காரணத்தைக்கொண்டும் அதற்கு இடம் தரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் கேசவன். ஆனால் எதிர்பார்த்தற்கு நேர்மாறாக டாக்டர் கேசவனின் திருமணத்தை தனக்கு தெரிந்த கல்யாணமண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்தலாம் என்று கூறினான். நல்லவனாய் நடந்துகொள்கிறான். பின்னர் ஏன் மனநோய் இருக்கிறது என கதைகட்டுகிறான் இவன்? கேசவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் டாக்டர் தனக்கு மனநோய் இருக்கிறது என்று கதைகட்டுவதற்கு ஏதோ பெரிய உள்நோக்கம் இருக்கிறது என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. அந்த உள்நோக்கம் என்னவென்றுதான் புலப்படாமலிருந்தது.

இப்படி விசயங்கள் இருக்க, ஒருநாள் டாக்டரை பார்க்கப்போகும்போது, டாக்டரை பார்க்க காத்திருக்கும் நோயாளிகளின் வரிசையில் தன்னுடைய பழைய அரசியல் நண்பன் ராகவனும் இருப்பதை பார்த்தான் கேசவன். அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. டாக்டர் தன்னை மனநோயாளி என்று கூறுவதற்கு பின்னால் அரசியல் கோணம் இருப்பதை கண்டுகொண்டான். ஒருமுறை டாக்டரிடம் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முறைகேடுகளைப் பற்றி விவாதிக்கும் போது அவன், “இந்த மாதிரி முறைகேடுகள் நடக்காம இருக்கணும்னா மொதல்ல அரசியலில் களையெடுப்பதற்கான பெரிய இயக்கம் ஒண்ணு நடத்தணும்.” எனக்கூற, டாக்டர் “ஒனக்கு இன்னும் சோசலிசத்தின் பாதிப்பு இன்னும் இருக்கிறது.” என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ஆக சமூக பொறுப்புள்ள யாரையும் மனநோயாளி என்று முத்திரை குத்தி அவர்களை வேண்டுமென்றால் வார்டுக்குள்ளேயே தள்ளி போராட்டங்களை முறியடிப்பதுதான் இந்த மனநோய் டாக்டர்களின் வேலை. அதற்காகத்தான் அவர்களுக்கு அரசாங்க சம்பளம் கொடுக்கப்படுகிறது. கேசவனுக்கு அது அதிர்ச்சியூட்டும் விசயமாக இருந்தது. ராகவனிடம் இதுபற்றி விவாதிக்கும்போது கேசவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த சந்தேகங்களும் தீர்ந்துபோயின. ராகவன், தான் டாக்டரிடம் ஒருமுறை, “ஈழ தமிழரோட படுகொலைக்கு காரணமாக இருந்ததுக்காக ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தூக்கிலிடவேண்டும்.” என்று கூறியதற்காய் அவன் இரண்டு மாதக்காலம் வார்டில் தங்கி சிகிச்சை பெறவெண்டும் என்று கூறி தன்னை வார்டுக்குள் அடைத்ததை கேசவனிடம் கூறினான். மற்றொருமுறை வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் பற்றி விவாதிக்கும்போது, “வக்கீல்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் நடந்துக்கறத பாத்தா அவங்க நார்மலா இருக்கறது மாதிரி தெரியல.” என்று டாக்டர் கூறியதையும் கேசவனிடம் சொன்னான் ராகவன். “அப்படீன்னா அவங்க அப்நார்மல்னு டாக்டர் சொல்ல வர்றானா...?” என்று கேசவன் கேட்க, “ஆமா... அப்நார்மலனா ஈசியா மனநோயாளிகள்னு முத்திரகுத்திரலாம்ல...? ஆனா சமூக பொறுப்புள்ள நம்ம எல்லாம் அரசாங்கத்தின் பெரிய சதிக்கு பலியாகிடக்கூடாது. அதனாலத்தான் அரசாங்கம் இத மாதிரி டாக்டர்கள் மூலமா என்ன கண்காணிச்சாலும், உள்ள அடைச்சாலும் என் வேலய செய்திட்டுதான் இருக்கேன்.” என்றான் ராகவன் பெருமிதத்துடன்.

டாக்டர் தன்னுடைய திருமணத்தில் ஏன் அக்கறை செலுத்துகிறான் என்று கேசவனுக்கு விளங்கியது. தான் சமூக அக்கறையுள்ளவனாக இருப்பது அவனுக்கு பிரச்னையாக இருக்கிறது. திருமணம் முடிந்த பின் தன்னுடைய மனைவியின் மூலமே தன்னை கொலை செய்வதற்கு டாக்டர் முயற்சி செய்கிறான். மனைவிகள் மூலமும் காதலிகள் மூலமும் நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறான் கேசவன். தேர்தலில் நடந்த முறைகேடுகளை அம்பலபடுத்துவதற்காக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து சமூகத்திலுள்ள களைகளை அகற்றுவதற்கு முயற்சி செய்வதை தடுப்பதற்காகவே தன்னை கொலைசெய்ய அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் டாக்டர் முயற்சி செய்கிறான் என்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவனை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. அவன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்று டாக்டரிடமும் காதலியிடமும் சொல்லிவிட்டான். ஆனால் பிரிவு என்பது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. காதலியிடம் தன்னுடைய முடிவை சொல்லும்போது அழுதுவிட்டான். காதலியோ என்ன நடந்தாலும் அவனை விட்டுப் விலகப்போவதில்லையென்று கூறி தானும் அழுதுகொண்டாள்.

முடிவெடுத்தபடியே பொதுநல வழக்கு தொடர்ந்து முறைகேடுகள் நடந்த எல்லாத் தொகுதிகளிலும் திரும்பவும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதுதான் தன்னுடைய முதல் சமூக கடமையாக கருதினான் கேசவன். முதலில் ஒரு தொகுதியில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு காட்டுவது எளிதாக இருக்கும் என்பதால் சொம்பையூர் தொகுதியில் மறுதேர்தல் நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தான். அங்கு நடந்த முறைகேடுகள் பரவலாக பத்திரிகைகள் மூலம் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. எதிர்கட்சி வேட்பாளருக்கு வீட்டிற்குள்ளேயே 6 ஓட்டுகள் இருந்தும் அவர் மொத்தம் 1 ஓட்டுதான் வாங்கியுள்ளார் என்ற ஒரு விசயம் மட்டுமே தேர்தலில் எந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். முறைகேடு நடந்திருப்பதை நிரூபித்து அந்த தொகுதியில் மறுபடியும் தேர்தல் நடத்த செய்துவிட்டால், முறைகேடுகள் நடந்த மற்ற எல்லாத் தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தும் பொருட்டு பொதுநல வழக்கு தொடருவது எளிதாக இருக்கும் என்பது கேசவனின் அனுமானம்.

வழக்கை சிறப்பாக எடுத்துச்செல்வதற்காக சின்ன சின்ன தகவல்களையும், சான்றுகளையும் சேகரித்தான் கேசவன். ஏராளமானோர் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு வருதற்கு தயாராக இருந்தனர். தான் மின்னணு பொறியியல் படித்தவன் என்பதால் எப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒரே கட்சி சின்னத்திற்கு ஓட்டுவிழுமாறு செய்யமுடியும் என்பதை விளக்குவதற்காக மிக விவரமான விவரணைகளுடனும், விளக்கப் படங்களுடனும் அறிக்கையொன்றை தயார் செய்தான். ஆனால் அரசு வழக்கறிஞரோ, “பொதுநல வழக்கை தொடர்ந்த மனுதாரர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்று வாதிட்டார்.” நீதிபதி மனுதாரர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருப்பதால் அரசு மனநோய் டாக்டரிடமிருந்து அவருடைய மனநிலை பற்றிய அறிக்கையை சமர்பிக்கவேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்தின் அடுத்த அமர்வில் அரசு மனநோய் டாக்டரான கேசவனின் நண்பன் கேசவனை பற்றி அளித்த அறிக்கையை போலீஸார் சமர்பித்தனர். அதில், “மனஅழுத்தம் அதிகம். அது அன்றாட வாழ்க்கையில் சரியான முடிவகள் எடுப்பதை பாதிக்காலாம்.” என்று குறிப்பிட்டிருந்தது. அறிக்கையை படித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து கேசவனுக்கு அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு தீர்ப்பளித்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த அவனுடைய காதலி அவனைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்களில் உண்மையிருந்தது. அவள் மீதிருந்த சந்தேகம் கலைந்து காதல் மீண்டும் ஊற்றெடுத்தது. ஆனாலும் காதலுக்காய் பொதுநலனை விட்டுகொடுக்கக்கூடாது என்று தீர்மானித்தான் கேசவன். அவளைப் பார்த்து அவன், “நீ எனக்காக அழுற. நாட்டு மக்களுக்காக நான் அழுறேன். நீ எவ்வளவு அழுதாலும் என்னோட கொள்கை பிடிப்ப நான் விடப்போறதில்ல. இனிமே என்ன சந்திக்க வராதே.” என்று கூறினான்.

டாக்டர் செய்த துரோகத்தால் கேசவனுடைய அரசியல் களையெடுப்பு முயற்சிக்கு எந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்குமென்று உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். வழக்கின் முடிவு கேசவனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் டாக்டரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் பள்ளியில் படிக்கும்போதே ஒருமுறை சிஸ்டர் லிகோரியா மேரி, “இந்த கம்யூனிஸ்ட்காரனுகதான் நாட்டையே குட்டிச்சொவாராக்குறானுக.” என்று கூற “சிஸ்டர், கேசவன் கம்யூனிஸ்ட்காரன்.” என்று யூதாஸ் போல போட்டுகொடுத்தவன்தான் இந்த டாக்டர். வழக்கம்போல் வார்டுகளிலிருக்கும் நோயாளிகளை பரிசோதிக்க வரும்போது டாக்டர் கேசவன் இருக்கும் வார்டுக்கும் வந்தான். அவன் முகத்தை பார்ப்பதற்கே கேசவனுக்கு அருவருப்பாக இருந்தது. அப்படியொரு துரோகியை அவன் பார்க்க விரும்பவில்லை. டாக்டரிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டான். டாக்டர் போகாமல் அங்கயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து “சொகுசு வாழ்க்கைக்காக மக்களோட நலத்த காலுலயே போட்டு மிதிச்சிட்டியேடா...” என்று கத்தினான் கேசவன். டாக்டர் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பேச ஆரம்பித்தான். “நான் செய்தது ஒனக்கு கோபமாத்தான் இருக்கும். ஆனா நான் அப்படி ரிப்போட் கொடுக்காம இருந்தா என்ன தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவாங்க. அதுமட்டுமில்ல ஒன்ன இப்ப இருக்கற சொம்பையூர் M.P. மொக்கையன் ஆள வச்சு கொலைச்செய்யக் கூடிய வாய்ப்புக்கூட இருக்கு. நான் ஒங்க அம்மா கையால அவ்வளவு நாள் சாப்பிட்டிருக்கேன். ஒன்ன பாதுகாக்கறது என்னோட கடமைனு நெனைக்கிறேன்.” மொக்கையனிடமிருந்து காசு வாங்காமல் டாக்டர் அப்படி பேசுவானா என்ன? “மரியாதையா இங்க இருந்து போயிடு. ஒன்னோட வேசமெல்லாத்தையும் வேற யாருகிட்டயாது காட்டு.” என்று அதி கோபத்தில் கத்தினான் கேசவன். டாக்டர் வேறுவழியில்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

மனநோய் மருத்துவமனையிலிருந்து வெளிவந்ததும் தன்னுடைய சமூகப்பணியை தொடரவேண்டுமென்று கேசவன் முடிவு செய்தான். முதலில் சொம்பையூர் M.P. மொக்கையனை கொலைசெய்வதுதான் சரியாக இருக்கும் என அவன் தீர்மானித்தான். அந்தக் கொலையை மிகவும் கவனமாக திட்டமிட்டு எல்லாப் பாதுகாப்பு வளையங்களையும் மீறி எந்த ஆர்பாட்டாமுமில்லாமல் கச்சிதமாக செய்துமுடிக்கும் போது நாட்டுமக்கள் தான் அரசாங்கம் சொல்வதுபோல் ஒரு மனநோயாளியல்ல ஒரு சமூக புரட்சியாளன் என்பதை உணர்ந்து தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதையும் அதன் மூலம் அந்தத் திருடர்களின் ஆட்சியைக் கவிழ்த்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே கொண்டுவரமுடியும் என்பதையும் உணர்ந்திருந்தான். தான் கையிலெடுத்திருந்த சமூகப்பணியிலிருந்து சற்றும் விலகிவிடக்கூடாது என்பதற்காக காதலியைச் சந்திப்பதை கூட முற்றிலுமாக தவிர்த்து வந்ததிலிருந்து அவனுடைய கொள்கைப் பிடிப்பு விளங்கும்.

கேசவன் மொக்கையன் செல்லுமிடங்கள், அவர் தங்கும் ஹோட்டல்கள், அவர் செல்லும் வாகனங்கள், உறங்கும் நேரம், பாதுகாவலுக்காக உடனிருப்பவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து எப்படி பாதுகாப்பு வளையங்களை மீறி மொக்கையன் இருக்குமிடத்துக்குள் ஊடுருவி கொலை செய்துவிட்டு யாருடைய கைகளிலும் சிக்காமல் தப்பிப்பது என்பதை திட்டமிட்டான். அவன் திட்டம் தோல்வியடையவில்லை. ஒரே ஒரு துப்பாக்கிக்குண்டினால் மொக்கையனை சுட்டுக் கொன்றுவிட்டு யாருடைய கைகளிலும் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டான். பத்திரிகைகளெல்லாம் கேசவனின் திறமையைப் பற்றியும் அவனுக்கு கம்யூஸ்டுகளுடனிருந்த தொடர்பைப் பற்றியும் விரிவாக எழுதின. சொம்பையூர் தொகுதி மக்கள் மீண்டும் தேர்தல் வருவதால் மீண்டும் தங்களுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து காசு கிடைக்குமென்று சந்தோசத்தில் திளைத்தனர்.

கொலைசெய்வது மட்டுமல்ல கேசவனின் எண்ணம் என்பது உங்களனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விசயம்தான். கொள்கைப் பிடிப்புள்ள அவன் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது அந்த நீதிமன்றத்தையே தன்னுடைய பிரச்சார மேடையாக்கி மக்களை தன் பின்னால் திரட்டி சமூக மாற்றத்தை கொண்டுவரும் பொருட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தான். வழக்கு விவாதத்தின்போது அரசு வழக்கறிஞர் கேசவனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை வழங்கவேண்டுமென்று வாதிட்டார். கேசவன் தானே தன்னுடைய வழக்கை வாதிடுவேன் என்றாலும் காதலி அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் அவன் ஒரு மனநோயாளி என்று கூறி அவனுக்கு பதிலாக வாதிட்டார். நீதிமன்றத்தையே தன்னுடைய அரசியல் மேடையாக்க முடியும் என்ற கேசவனின் எண்ணம் சுக்குநூறாக உடைந்தது. அவனுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேசவன் ஒரு மனநோயாளியென்றும் மனம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் அந்தக் கொலையை செய்தான் என்றும் கூறி கேசவனின் நண்பனான அரசு மனநோய் டாக்டர் கொடுத்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில், “கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளானவர். வன்முறையான காரியங்களில் ஈடுபடுவதற்கான மனநிலை மிகவும் அதிகமாக உள்ளது.” என்று குறிப்பிடபட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கேசவனின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால் வழக்கிலிருந்து விடுவித்து அவனுக்கு அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.

மனநோய் மருத்துவமனை வார்டில் அடைக்கப்பட்டிருந்த கேசவன் கூண்டிலடைக்கப்பட்ட புலி போல் வெறியுடனிருந்தான். காதலியும் டாக்டரும் சேர்ந்து தனக்கும் சமூகத்துக்கும் பெரும் துரோகமிழைத்துவிட்டதாக நினைத்தான். “நீதிமன்றத்தை பிரச்சார மேடையாக்கி ஒரு புரட்சியையே நடத்தியிருப்பேன். நீ சதிசெய்து அதை தடுத்திட்டே துரோகி... இதுக்காக நீ அரசாங்கத்துகிட்ட எவ்வளவு காசு வாங்குன...?” என டாக்டரை பார்த்து கத்தினான். டாக்டர், “நான் அப்படி அறிக்கை கொடுக்காம இருந்தா நீ புரட்சியெல்லாம் பண்ணியிருக்க முடியாது. தூக்குலதான் தொங்கியிருப்பே.” என்று கூற, “ஒரு புரட்சியாளன் ஒருபோதும் சாகறதில்ல. விதைக்கபடுகிறான். நான் ஜூலியஸ் பூசிக் மாதிரி என்னோட தூக்குமேடை குறிப்புகள எழுதி இந்தச் சமூகத்தையே விழிப்படைய வச்சிருப்பேன். நானெல்லாம் தூக்குமேடைய பாத்து பயப்படுறவன் கெடையாது தெரிஞ்சுக்கோ.” என கேசவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டர் நண்பன் அடுத்த வார்டை நோக்கி நகர ஆரம்பித்தான். அவன் பின்னால் “துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை.” என்ற வீரப்பாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் வசனத்தை கேசவன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.
--------------------------------------------------------------------------------
அடவி அக்டோபர் 2009

1 comment:

சில்வியா said...

இன்னும் கதையைப் படிக்கவில்லை. அது தவிர, 'அடவி'யில் அக்டோபர் 2009 என்று போட்டிருக்கிறீர்கள். கதையில் வந்த ஆள்போல (மேலோட்டமாகப் படித்தேன்) மனக்குழப்பமா:)