Saturday, March 10, 2012

இங்கு மூத்திரம் கழிக்காதீர்

ஜோஸ் அன்றாயின்

(இந்த கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் உண்மையல்ல; வெறும் கற்பனையே.)

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை.” என்று குற்றவாளி கூண்டில் நிற்கும் பத்மநாபன் உறுதிமொழி எடுத்துக்கொண்டான். அவன் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அரசு வழக்கறிஞர் சந்தேகத்துடன் பார்ப்பது போல் தோன்ற மீண்டும், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை.” என்று கூறுகிறான். அதை அவதானித்த நீதிபதி, “எத்தனை தடவை சொன்னாலும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப்படும்.” என்று கூற, “அப்போ... உண்மையின் அடிப்படையில் இல்லியா?” என அதிர்ச்சியுற்ற அவன் திருப்பி கேட்க, நீதிபதி அவனை சட்டை செய்யாமல் அரசு வழக்கறிஞரை பார்த்து “நீங்கள் இப்போது குற்றவாளியை விசாரிக்கலாம்” என்று கூறுகிறார்.

நாட்டில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட அந்த விசாரணை பற்றிய விபரங்களுக்குள் செல்வதற்கு முன்னால் பத்மநாபன் யார்? எந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யப்பட்டான்? என்ற விபரங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

திரும்பும் திசையெல்லாம் மேம்பாலங்களும், அகன்ற சாலைகளும், வானத்தை தொடும் கட்டிடங்களும் நிறைந்திருக்கும் நாட்டின் தலைநகரான சிங்காரப்பட்டினத்திற்கு சில வருடங்களுக்கு முன்னால் வேலைத்தேடி வந்தவன் பத்மநாபன். வேலை எப்போதுமே கிடைத்தது. சம்பளம்தான் எப்போதாவது கிடைக்கும். எப்போதாவது தண்ணீர் வரும் அறைக்கு எப்போதாவது வாடகை கொடுத்துக்கொண்டு தங்கியிருந்தான். துரு கொட்டும் சைக்கிள், சாயம் போன வண்ணத் துணி போல் படம் காட்டும் தொலைகாட்சிப் பெட்டி, இரைச்சலை வீசும் மின்விசிறி என்று அடங்கிவிடும் அவன் சொத்து. அடிநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சூழலில் நடக்கும் எதையும் காணா நம் கால மத்தியத்தர வர்க்கத்தின் எருமைமாட்டு கண்களையும் கொண்டவன் அவன். யாருக்கும் எதுவும் செய்யா குணம். ஆனாலும் சில நேரங்களில் சில விசயங்கள் அத்தகையவர்களையும் கூட அதிர செய்துவிடுகின்றன.ஒருநாள் பத்மநாபன் கம்பெனிக்குப் போகாமல் வெளியே உலாவச் செல்லும் போது மூத்திரம் முட்டிக்கொண்டு வர தோதான இடம் தேடி அலையாய் அலைந்தான். வாகுவான இடம் எங்கும் தென்படாது போக அதற்கு மேலும் அடக்க முடியா நிலையில் அவன் நகரின் பிரதான சாலையிலேயே மூத்திரம் கழிக்க அங்கு அதலப் பாதாளம் போல் மிகப்பெரும் பள்ளம் உண்டாகிவிட்டது. அதிர்ந்து போகிறான். உடனே சுதாரித்துக் கொள்ளவில்லையெனில் அந்தப் பள்ளத்தில் அவனே விழுந்திருப்பான். மேலதிக அதிர்ச்சியாய் சாலையை ஒட்டியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும் அவன் போன்றே அங்கு மூத்திரம் கழிக்க சாலையே மறைந்து பெரும் ஆறாக மாறிவிட்டது. இப்படி நடக்குமென்று எதிர்பாராமல் சாலைக்கு மறுபுறம் சென்ற மாணவர்கள் ஆற்றைத் தாண்டமுடியாமல் அழ ஆரம்பித்தனர். கண்கூடாக தான் கண்ட இந்தக் காட்சியின் மூலம் சாலை போடப்பட்டதில் மிகப் பெரும் ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்துவிட்ட பத்மநாபன் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரி நீதிவண்ணனை தண்டிக்க முடிவு செய்தான்.

அந்த நேரத்தில் நகரின் பிரதான மைதானத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நீதிவண்ணன் கலந்து கொள்ளவிருப்பதைக் கேள்விப்படும் பத்மநாபன் அவரை அங்கேயே கொலை செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான். அவனுக்கு ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே தேவையாயிருந்தது. வெளிமார்க்கெட்டில் துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பதில்லை என்று தெரிந்துகொண்ட அவன் ஆயுத கடத்தல்காரர்களை தொடர்பு கொண்டு விலையை விசாரிக்க ரூபாய் 7500 க்கு குறைவாக எந்த துப்பாக்கியும் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்துகொண்டான். பணத்தை புரட்டுவதற்கான எல்லா வழிகளையும் யோசித்துப் பார்த்தான். சைக்கிளை விற்றால் 600 ரூபாய் கிடைக்கும். தொலைகாட்சிப் பெட்டியை விற்கலாம்தான். ஆனால் அரசு மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக கொடுத்த புது தொலைக்காட்சிப் பெட்டியே 1200 ரூபாய்க்கு கிடைப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. மின்விசிறியை ஏற்கனவே விற்க முயற்சி செய்து தோல்வியடைந்ததால் அதை கணக்கில் எடுப்பதில் எந்த அர்த்தமுமில்லாதிருந்தது. இதனால் கத்தியைக் கொண்டே அவன் தன்னுடைய வேலையை முடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான். கத்தியை வாங்கும் எண்ணத்துடன் கடையொன்றினுள் நுழைந்து கத்தியின் விலையை கேட்க, கடைக்காரர் “கொறஞ்ச வெலைல வேணும்னா 35 ரூபாய்க்கு இத எடுத்துக்கோங்க.” என்றவண்ணம் ஒரு கத்தியை காட்டுகிறார். பள பளவெனக் கூர்மையாக இருந்த அந்தக் கத்தி பத்மநாபனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஆனால் அவனிடம் மொத்தமே 23 ரூபாய்தான் இருந்தது. கத்தியை வாங்கியும் ஆகவேண்டும். இல்லையென்றால் அவனுடைய திட்டத்தைச் செயல்படுத்த முடியாமலே போகும். அவன் கடைக்காரரைப் பார்த்து, “23 ரூபாய்க்கு அந்தக் கத்தியை தர முடியுமா?” என்று கேட்க கடைக்காரர், “ஒரு பைசா குறையாது.” என்கிறார். பத்மநாபன் தளர்ந்துவிடாமல், “இந்த கத்தியை வச்சு நான் செய்யப் போற காரியத்தைக் கேள்விப்படும் போது நீங்க ரொம்ப பெருமை படுவீங்க.” என்று கூறுகிறான். எச்சரிக்கையான கடைக்காரர், “ஒனெக்கெல்லாம் கத்தி கெடையாது. வெளிய போயா மொதல்ல.” என்று துரத்திவிடுகிறான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறும் பத்மநாபன் ஒரு பெட்டிக்கடையிலிருந்து கில்லெட் ப்ளேடு ஒன்றை வாங்கிக்கொள்கிறான்.

மந்திரி நீதிவண்ணன் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான இடத்தில் நின்றுகொண்டான் பத்மநாபன். ஆள்காட்டி, நடு மற்றும் கட்டை விரல்களால் ப்ளேடை லாவகமாக பிடித்துக்கொண்டு குரல்வளையில் அரைவட்டமாக அரை அங்குல ஆழத்திற்கு ப்ளேடை இறக்கினால் மந்திரி உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று கணக்கிட்டிருந்த அவன், நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகும் சமயம் பார்த்து நீதிவண்ணனை நோக்கி பறக்கும் பாம்பு போல் பாய்ந்தான். ஆனால் எப்போதுமே விழிப்புடன் இருக்கும் பச்சைப் பூனைப் படையினர் அவனை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மிகுந்த வீரத்துடன் செயல்பட்டு மந்திரி நீதிவண்ணனைக் காப்பாற்றிய பச்சை பூனைப் படையினருக்கு உடனடியாக பதவி உயர்வு அளிக்கப்படுவதாக அரசு உடனே அறிவித்தது.

இந்தக் கொலை முயற்சிக்காகத்தான் பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளான். விசாரணையில் அரசு வழக்கறிஞர், “இந்த ப்ளேடின் மூலம் மந்திரியை கொல்ல முடியும் என்ற நம்பிக்கை உனக்கு நீ கொலை முயற்சி செய்த அன்று இருந்ததா?” என்று கேட்க, “முழு நம்பிக்கை எல்லாம் இல்ல. ஏன்னா மந்திரியை சுத்தி காவல் காக்குற பச்சை பூனைப்படையினர் அதற்குள்ளால என்ன துப்பாக்கியால சல்லடையாக்கும் வாய்ப்பு அதிகம்னு எனக்கு தெரியும். இருந்தாலும் கருத்தா செயல்பட்டா என்னோட முயற்சி ஒருவேளை வெற்றியடையலாம்னு தோணிச்சு.” என்றான். அதைக் கேட்ட அரசு வழக்கறிஞர், “அப்போ சம்பவம் நடந்த அன்று உங்களுக்கு மந்திரியைக் கொலை செய்ற எண்ணம் இருந்தது?” என்று கேட்க பத்மநாபன், “ஆமாம் இருந்தது.” என்று பதில் கூற உடனே அரசு வழக்கறிஞர், “யுவர் ஆனர் குற்றம் சாட்டப்பட்டுள்ள கைதி மந்திரியைக் கொலை செய்யும் எண்ணத்துடன்தான் ப்ளேடால் அவரைத் தாக்க முயற்சித்திருக்கிறார். அதனால் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். அதைக் கேட்டு பயந்து போன பத்மநாபன், “இல்ல. எனக்கு அப்படி ஒண்ணும் எண்ணம் இல்லை. நான் சும்மாதான் சொன்னேன்.” என்று கூறினான். உடனே நீதிபதி “ஆடர்... ஆடர்...” என்று சுத்தியலால் அடித்துக் கூறினார்.

பத்மநாபனை விசாரித்த நேரத்தில்தான் குற்றம் நடந்த பிண்ணனி சம்பவங்கள் நீதிமன்றத்தத்தின் பார்வைக்கு வந்தது. சாலைகளுக்கு சேதம் விளைவித்த விசயத்தில் மெத்தன போக்கை கடைபிடித்ததற்காக அரசை கண்டனம் செய்த நீதிபதி, அரசு நீதிமன்றத்தில் அதைக் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவு படி சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. நாட்டின் மிகச் சிறந்த நிபுணர்களைக் கொண்ட அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பித்தது. அதில் மூத்திரம் பெய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும், அது நடந்த பிண்ணணியைப் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை படித்த நீதிபதி பத்மநாபன் தவிர சாலை காணாமல் போவதற்கு காரணமான அரசு பள்ளி மாணவர்கள் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு உத்தரவிட்டதோடு, பொது சொத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சாலையோரம் இருக்கும் பள்ளிக்கூடத்தையும் உடனே இடிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

நிதிமன்ற உத்தரவிற்கிணங்க அரசு அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் எல்லோரையும் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியது. மேலும் பள்ளிக்கூடத்தை இடித்து தொழில் வளைச்சியை பெருக்கும் பொருட்டு ஒரு சர்வதேச கம்பெனிக்கு அந்த இடத்தை விற்றது. அதன் மூலம் ஏற்படும் முதலீட்டால் மூன்று பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் ஒன்பது பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசு தெரிவித்தது. ஆறாகிப் போன சாலையின் இருபுறமும் இருந்த நிலத்திற்கும், கட்டிடங்களுக்கும் சொந்தக்காரர்கள் அனைவரும் ஆற்றங்கரையிlள்ள பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் காரணம் காட்டப்பட்டு அங்கிருந்து அப்புறபடுத்தப்பட்டனர். கையகபடுத்தப்பட்ட நிலத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவற்றை தனியாருக்கு விற்பதற்கு அரசு முடிவு செய்தது. டெண்டர் மூலம் விற்பனை செய்வதால் ஏற்படும் ஊழலை தடுக்கும் பொருட்டு நிலமனைத்தையும் நாட்டின் அதிபருக்கே விற்பது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மந்திரி நீதிவண்ணன் உயிர் தப்பிய பின்னும் நீதிமன்றமும், அரசும் பத்மநாபனை தண்டிப்பதற்கு ஏன் இவ்வளவு வேகம் காட்டியது என்பது சிலருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் பத்மநாபனின் செயலின் பின்விளைவுகள் எந்த அளவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை கவனித்தால் அதற்கான நியாயத்தை கண்டுகொள்ள முடியும்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கையில் பத்மநாபனையும் அரசு பள்ளி மாணவர்களையும் பின்பற்றி சில விசமிகள் நகரத்தின் மையப்பகுதியிலுள்ள ஒரு அரசு அலுவலக கட்டிட சுவர் மீது மூத்திரம் பெய்ய அந்த கட்டிடம் இடிந்து போனது. உடனே பொது சொத்தை சேதம் விளைவிக்கும் விசமிகளை தடுக்க பாலங்கள், ரோடுகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் மூத்திர கலகக்காரர்களின் செயலால் மேம்பாலங்கள், சாலைகள், அரசு கட்டிடங்கள் என பலவும் இடிந்தும், கரைந்தும் போயின. வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை பாலங்களின் மேல் ஓட்டிச் செல்ல மறுத்தனர். ஸ்தம்பித்துப் போன அரசு நகரெங்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. வெளியிடங்களில் மூத்திரம் பெய்வதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அதை மீறி மூத்திரம் பெய்பவர்களை கண்டதும் சுடுவதற்கு காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து தடையுத்தரவை மீறி பொது இடங்களில் மூத்திரம் கழித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த 4759 பேர் உயிரிழந்தனர். கோபமடைந்த மூத்திர கலகக்காரர்கள் அதிரடி படையினர் தங்கியிருக்கும் கட்டிடத்தை சுற்றி மூத்திரம் கழிக்க அது இடிந்து 3821 அதிரடி படையினர் இறந்து போயினர். நிலமையை சமாளிக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. பீரங்கி வண்டிகள் நகரை சுற்றி வந்தவண்ணமிருந்தன. விசமிகளென்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில் வாழும் தெய்வங்களான தலைவர்களின் சிலைகளை மூத்திரம் கழித்து தகர்க்க விசமிகள் திட்டமிட்டிருப்பது தெரியவர, அதை தடுக்கும் விதமாக அங்கும் போலீஸ் பந்தோபஸ்து போடுவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தலைவர்களை பாதுகாப்பதற்கு தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கையே குறைவாயிருக்கும் போது அவர்களின் சிலைகளை பாதுகாப்பிற்கு போலீசாரை பயன்படுத்துவது சரியல்ல என்று உயரதிகாரிகள் வாதிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நாட்டு அதிபர் தலைவர்கள் சிலைகள் இருக்கும் இடங்களில் மூத்திரம் கழிக்க முயற்சிப்பவர்கள் நாணும்படி, “நாய்கள் மூத்திரம் கழிக்கும் இடம்.” என்ற அறிவிப்பு பலகை நாட்டுவதற்கு ஆலோசனைக் கூற, அதை அப்படியே அதிகாரிகள் அமுல் படுத்தினர். விசயத்தை எப்படியோ தெரிந்துகொண்ட நாய்கள் தலைவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்று மூத்திரம் கழிக்க நகரத்திலிலுள்ள பல தலைவர்களின் சிலைகள் உருதெரியாமல் சிதைந்து போக, அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகைகளை அப்புறபடுத்த வேண்டியதாயிற்று. பின்னர் புதிதாக பயிற்சிப் பெற்ற போலீசாரை கொண்டு தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்த எத்தனிக்கும் நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன. ஒரு நாளில் மட்டும் 1218 நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. வாயில்லா ஜீவன்களை சுட்டுக்கொல்வதற்கு மனித உரிமை போராளிகள் கடும் கண்டனம் தெரிவிக்க, வாயில்லா ஜீவன்களை ரப்பர் தோட்டாக்களை கொண்டு சுடுமாறும் வாய்கொழுப்பு பிடித்த மனிதர்களை மட்டும் நிஜ தோட்டாக்களைக் கொண்டு சுடுமாறும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டன.

நகரை மூத்திரக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளை கண்டறிவதற்காக ஆய்வுக் குழுவொன்றை அரசு நியமித்தது. கீழ்மட்டத்து மக்களான சேரிவாசிகள், பிச்சைகாரர்கள், கூலி வேலை செய்வோர் ஆகிய விசமிகள்தான் பொதுவாக பொது இடங்களில் மூத்திரம் கழித்து பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர் என்றும், நிலமையை சமாளிக்க ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறைகள்’ கட்டப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் ஆய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில் கூறியது. மேலும் தூபம் நதிக்கரையிலிருக்கும் சேரிவாசிகள் மூத்திரம் பெய்வது நதியில் கலப்பதால் சிங்காரப்பட்டினம் முழுவதுதிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சேரிகளை எல்லாம் அப்புறபடுத்துவது நலம் என்றும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை தெரிவித்தது. ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை எல்லாம் அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தது. சுமார் 30,000 கோடிச் செலவில் ஜெர்மானிய தொழில்நுட்பத்துடன் ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறைகள்’ நகரெங்கும் கட்டப்பட்டு மூத்திரம் கழிப்பதற்கு 20 ரூபாய், மலம் கழிப்பதற்கு 50 ரூபாய் என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் சில விசமிகள் கழிவறை கட்டிடங்களில் எழுதப்பட்டிருக்கும் ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறை’ என்ற சொற்றொடரிலுள்ள ‘கழிவறை’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘கல்லறை’ என்று எழுதி வைக்க, அதன் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட மக்கள் ஒருவரும் அந்த கழிவறைகளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பின்னடைவுகள் இருந்தாலும் அரசு ஆய்வுக்குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அமுல் படுத்த முனைந்தது. சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூபம் நதிக்கரையில் குடியிருப்போர் எல்லோரும் பதினைந்து தினங்களுக்குள் அங்கிருந்து இடத்தை காலிசெய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. வசிப்பதற்கு வேறு இடங்கள் இல்லாத சேரிவாசிகள் யாரும் தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயரவில்லை. மாற்று வசிப்பிடம் இல்லாததால்தான் சேரிவாசிகள் சேரிகளிலிருந்து வெளியேறவில்லை என்பதை புரிந்துகொண்ட அரசு அவர்களுக்காக அதிநவீன முள்வேலி முகாம்களை ஏற்படுத்தியது. இருப்பினும் யாரும் நகருவதாக தெரியவில்லை. கடைசியில் விமானங்கள் மூலம் குண்டு வீசி அவர்களை அப்புறபடுத்துவது என்ற முடிவுக்கு அரசு வர நடுங்கிப் போன சேரிவாசிகள் எல்லோரும் தாங்களாகவே முள்வேலி முகாம்களுக்குள் சென்று தங்களை அடைத்துக்கொண்டனர். முள்வேலி முகாம்களுக்குள் இருப்பவர்களுக்கு பொழுது போவதற்கு வசதியாக ஒரு குடும்பத்திற்கு 2 தொலைகாட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. மனித உரிமை போராளிகளின் கோரிக்கைக்கு இணங்க அதிநவீன சொகுசு முள்வேலி முகாமிற்குள் அடையுண்டிருக்கும் மக்கள் அனைவரையும் 3015 கடைசிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக நாட்டு அதிபர் உறுதியளித்தார். அதிபரின் இந்த தியாகத்தை புகழ்ந்து புலவர் மன்றாடிமுத்து புகழ்ப்பா ஒன்றை இயற்றினார். அது ஒளி ஓவியமாக எல்லா தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

தூய்மை படுத்தப்பட்ட தூபம் நதிக்கரையெங்கும் உல்லாச விடுதிகளும் நடன அரங்குகளும் அமைத்து கொள்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு அனுமதி கொடுத்தது. அதன் விளைவாக சிங்காரபட்டினத்தை சுற்றி ஓடும் தூபம் நதிக்கரை எங்கும் கேளிக்கை விடுதிகளும், நட்சத்திர விடுதிகளும், நடன கூடங்களும் எழுப்பப்பட்டன. உல்லாச பயணிகளை நன்கு கவனிக்கும் பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்த அழகிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அழகிகள் கேளிக்கைக்கு வருவோரை எப்படி கவனித்துக்கொள்வது என்று சிறப்பு பயிற்சிகள் கொடுத்தார்கள்.

பத்மநாபனின் செயலால் ஏராளமான பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவன் அதிக தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்றுதான் பெருவாரியான மக்கள் நம்பினார்கள். ஆனால் அவன் சிறைக்குள் முன் யோசனையின்றி செய்த செயல் அவனுக்கு எதிராக வந்து முடிந்தது.

சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரி எதிர்கட்சித் தலைவரின் சவாலை ஏற்று தன்னால் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்தில் பயணம் செய்ய முடியும் என்று கூறினார். பிறகுதான் தன்னுடைய செயலாளர் சொன்னதிலிருந்து பேருந்தில் அதுவும் காலையில் பயணம் செய்வது என்பது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்தார். இருந்தாலும் தன்னுடைய செயலாளர் சொல்வதில் உண்மையிருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. அந்நேரத்தில் எதேச்சையாக அங்கிருந்த தன்னுடைய துணை மந்திரி மாயவாணனை பார்க்க அவரின் கண்கள் சந்தோசத்தில் மின்னுவதை கவனித்தார். தான் இறந்தால் தன்னுடைய பதவியை அடைய முடியும் என்ற நினைப்புதான் அவருடைய சந்தோசத்திற்கு காரணம் என்று தெரிந்துகொண்டார். உடனே தான் ஏற்றுக்கொண்ட சவாலிலிருந்து பின்வாங்கி தன்னுடைய செயலாளர் மூலம், “உடல் நலமில்லாத காரணத்தால் மந்திரி நீதிவண்ணனால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முடியாது.” என்று அறிக்கை கொடுக்குமாறு பணித்தார். செயலாளர் அவருக்கான அறிக்கையை தயாரித்து நாட்டு அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பினார். அறிக்கையை கண்ட அதிபர் உள்துறை செயலாளரிடம் அது பற்றி விவாதித்தார். அவர், உளவுத்துறை கொடுத்த தகவலின் படி முதலில் எதிர்கட்சி தலைவர் அதிபரைத்தான் பேருந்தில் பயணம் செய்யுமாறு கேட்க விரும்பியதாகவும், ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல அவர் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரிக்கு சவால் விட்டதாகவும், மந்திரி குறிப்பிட்ட நாளில் பேருந்தில் பயணம் செய்யத் தவறினால் அவர் மீண்டும் அதிபரையே பேருந்தில் பயணம் செய்து பார்க்குமாறு கோரக் கூடும் என்றும், அது மரணத் தண்டனைக்கு சமம் என்றும் கூறினார். அது எந்த அளவுக்கு உறுதியாக நடக்கக் கூடிய விசயம் என்பதற்கு சாட்சியாக பத்திரிகைகள் இரண்டு தினங்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் விளைவை முன்கூட்டியே கணித்து அன்று வெளிவரும் செய்தித்தாள் பதிவுடன் மந்திரி நீதிவண்ணனின் இறப்பை கொண்டாடும் இரங்கல் குறிப்புகளையும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு இணைப்பு பகுதியையும் அச்சிட்டி வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலமையை புரிந்துகொண்ட நாட்டு அதிபர் மந்திரி நீதிவண்ணனை தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக திட்டமிட்ட படி அவர் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார். மந்திரி அதிபரிடம் தான் இறந்தால் தான் வகிக்கும் பதவியை தன்னுடைய மனைவியிடம் ஒப்படைக்குமாறு வேண்டினார். மூத்திர கலகத்தால் சாலைகளும், மேம்பாலங்களும் சேதபட்டிருக்கும் விதத்திலிருந்து அது எவ்வளவு பணம் சம்பாதிக்கக் கூடிய இலாகா என்று ஏற்கனவே உணர்ந்திருந்த அதிபர் அந்த இலாகாவை தன் குடும்பத்திலுள்ளவரைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாதென்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார். இருப்பினும் சாகப்போகும் தன்னுடைய மந்திரிக்கு நம்பிக்கையூட்டுவதற்காக அவர், “கண்டிப்பா. நீ கட்சிக்கு செய்ற தியாகத்துக்காக அது கூட செய்யலன்னா எப்படி?” என்று கூறினார். தன் மனைவிக்கு தான் வகிக்கும் இலாகா கிடைக்கும் என்ற நம்பிக்கை மந்திரி நீதிவண்ணனுக்கு இருந்தாலும் அவர் மரணத்தை நினைத்து மிகவும் நடுங்கிப் போனார். தனக்குப் பதிலாக தன்னுடைய இலாகாவிலிருந்து வேறு யாரையாவது பயணம் செய்ய சொல்லலாமா என்ற யோசனை ஓடியது அவருக்கு. பதவி ஆசைக்கொண்ட தன்னுடைய துணை மந்திரி ஒருபோதும் பேருந்தில் பயணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார் என்று அவருக்கு தெரிந்திருந்தது. அதனால் அவரிடம் எதுவும் கேட்காமல், தன்னுடைய செயலாளர் ஒருவேளை ஒத்துக்கொள்ளக் கூடும் என்ற அசட்டு நம்பிக்கையில் அவரிடம், “நீங்க எனக்குப் பதிலா பேருந்துல பயணம் செய்ய முடியுமா?” என்று கேட்க அவர், “நான் புள்ளக் குட்டிக் காரன் சார். என்னால எல்லாம் முடியாது.” என்று மறுத்துவிடுகிறார். கடைசியாக தன்னுடைய மனைவியிடம், “நீயாவது எனக்காக பேருந்துல பயணம் செய்யமாட்டியா?” என்று கேட்க அவள், “நானா ஒங்கள பேருந்துல போகச் சொல்லி சொன்னேன்? முடிவெடுக்கும் போதே யோசித்திருக்கணும்” என்று கழண்டு கொண்டாள். வேறு வழி தெரியாத மந்திரி தன்னுடைய வழக்கறிஞரை வரவழைத்து தன்னுடைய சொத்துக்கள் யார் யாருக்கு போக வேண்டுமென்று உயில் எழுதினார்.

எதிர்கட்சித் தலைவர் விட்டிருந்த சவாலின் படி குறிப்பிட்ட தினத்தன்று காலையில் 8 மணியிலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஏதாவது ஒரு பேருந்தில் ஏறுவதற்காக மந்திரி நீதிவண்ணன் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசியாக அதிக கூட்டம் இல்லாதது போல் தோற்றமளித்த பேருந்தில் ஏற அது வெறும் மாயத்தோற்றம் என்பதை உணர்ந்துகொண்டார். அந்த பேருந்தில் ஏறுவதற்காக ஒன்றே முக்கால் மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்த பயணிகளும், மந்திரியின் இறுதி மூச்சு நிற்பதை நேரில் பார்ப்பதற்காக காத்திருந்தப்வர்களும், பேருந்தின் ஒவ்வொரு துவாரங்களின் வழியாகவும் தங்களை சொருகிக்கொண்டனர். ஒரு பக்கமாக சாய்தே செல்லும் அளவுக்கு பேருந்து நிரம்பி வழிந்தது. பேருந்தின் எடையினால் அதுச் செல்லும் பாதையெங்கும் சாலைகள் உடையும் சத்தம் கேட்க, அந்த சத்தத்தினுள் மந்திரியின் எலும்புகள் உடைபடும் ஓசை யாருக்கும் கேட்காமல் அமிழ்ந்து போயிற்று.மந்திரி ஏறியிருந்த பேருந்தை தொடர்ந்த பயணிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அந்த பேருந்தையே அமரர் ஊர்தியாகக் கொண்டு அது செல்லும் இடங்களெல்லாம் பூக்களை சொரிந்தனர். அவர்கள் பின்னால் ஏராளமானோர் சாவு மேளத்துக்கு ஏற்ப சாவு நடனமாடியபடி சென்றனர். மந்திரியின் இறுதி ஊர்வலமானது பத்மநாபன் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வழியாக கடந்து செல்ல, அவன் அவனையறியாது உணர்ச்சி வசத்தில் தான் களைத்து கீழே விழுமளவிற்கு நடனமாடினான். அதை போலீசார் ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடித்து அதை நீதிமன்றத்தில் அவனுக்கு எதிரான சாட்சியமாக சமர்பித்தனர்.

தீர்ப்பு நாளும் வந்தது. அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மூத்திர கலகக்காரர்களுக்கு பயந்து தண்ணீர் விற்பனையும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. நகரிலுள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழ்நிலையில் நீதிபதி தன்னுடைய தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார். “குற்றவாளி பத்மநாபனின் கொலை முயற்சி வெற்றி பெறாமல் போனாலும், அவனுக்கு கொலை செய்யும் எண்ணம் இருந்தது என்பது மந்திரியின் மரணத்தை தொடர்ந்து அவன் சிறையில் சந்தோசத்துடன் நடனமாடியதிலிருந்து உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.” நீதிபதியின் வார்த்தைகளைக் கேட்ட பத்மநாபன் குறுக்கிட்டு, “ஐயா நான் வெளில கேட்ட சாவு மேளத்துக்குதான் நடனமாடினேனேத் தவிர மந்திரி செத்ததுக்காக ஆடல.” என்று கூறினான். கோபமடைந்த நீதிபதி மேசையின் மீதிருந்த மர சுத்தியலை எடுத்து பத்மநாபன் மீது வீசினார். பத்மநாபன் தலையை சரித்துவிடவே அது ஒரு போலீஸ்காரன் தலையில் பட அவன் அப்படியே செத்து கீழே விழுந்தான். நீதிபதி அசராமல் தொடர்ந்து தன்னுடைய தீர்ப்பை படித்தார். “மேலும் குற்றவாளி பயன்படுத்திய ப்ளேடின் பெயர் ப்ரெஞ்சு புரட்சியின் போது சிரச்சேதம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கில்லெட்டின் இயந்திரத்தின் பெயரை ஒத்திருப்பதால் அவனுடைய குற்றம் ஐயமற நிரூபிக்கபட்டிருக்கிறது.” நீதிபதியை மீண்டும் இடைமறித்த பத்மநாபன், “ஐயா, எனக்கு கில்லெட்டின் இயந்திரம்னா என்னன்னே தெரியாது.” என்று கூறினான். “விட்டா இந்த தேவடியாப்பய நம்மளையே குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருவான் போல இருக்கு.” என தனக்குள் முனகிய நீதிபதி, “அந்த நாயோட வாய பிளாஸ்திரி போட்டு ஒட்டுங்க.” என்று கத்த அங்கிருந்த போலீசார் கண நேரத்தில் அவனுடைய வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டினர். திருப்தியடைந்த நீதிபதி தொண்டையை செருமிக்கொண்டு தீர்ப்பை மீண்டும் வாசித்தார். “இந்த மாதிரியான சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்காவிடில் மக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். அதனால் குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறேன்.” தீர்ப்பைக் கேட்ட பத்மநாபன் பயத்தில் கால்வழியாக மூத்திரம் பெய்துவிட நீதிமன்ற கட்டிடம் நிலநடுக்கம் வந்தது போல் அதிர்வுடன் இடிய தொடங்கியது. பயந்துபோன போலீசாரும், அரசு அலுவலகர்களும், நீதிபதியும் நீதிமன்றத்திலிருந்து உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பியோடினர். பத்மநாபனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.


---------------------------

நன்றி: அடவி
ஜனவரி, 2012

Thursday, January 26, 2012

Petty Intellectuals and Gramsci


Jose Antoin

Reading Antonio Gramsci’s work demands extra care from the reader. There are two major reasons for that. 1. Gramsci avoided using some specific words to evade censorship. (For example he uses the word ‘strata’ to denote ‘class’.) 2. Most of his works are fragmentary in nature. This leaves much room for reinterpretation and misinterpretation. He generally discusses the ‘functional aspects’ of the ‘state’ rather than ‘systematically defining’ it. Only in few places he concretely defines ‘state’.

Now coming to the discussion on the statement of SLDF titled ‘An appeal to the Tamil community and its Civil and Political Representatives’ (on Deepam TV), one hears Nirmala asking Tu. Senan to read Antonio Gramsci to know about the structure of the ‘state’. Tu. Senan asked her the reason for directing the appeal to the Tamil civil society. Through her statement she implies that the Tamils do have state power in Gramscian sense. Senan did not have time to answer her as the discussion came to an end after her grotesque misinterpretations.

According to Gramsci, state is not only sustained by the ‘political class’; but also by the ‘civil society’. So, it is necessary for the proletariat (oppressed) to attain ‘cultural hegemony’ to overthrow the capitalist society (oppressors). In the Sri Lankan scenario the ‘racial contradiction’ is the prominent issue. Here ‘oppressive’ Sinhala state is sustained by the ‘Singalese civil society’ through its ‘consent’. And the ‘oppressed’ Tamils are marginalized in the political sphere. Tamils did attain cultural hegemony for the formation of an independent state; but so far they have failed to achieve their goal. Tamils don’t have equal constitutional rights. They are politically and /or economically dispossessed and at the end of Eelam War 4 lost whatever (de facto) state power they had. The Sinhala forces forcefully occupy their lands. Many have become refugees in their own land. Their cultural tradition is trampled down by the oppressors. In such a situation how can they enjoy state power? Without state power, what they can do for the aggrieved Muslim community? After all the Sinhala state is not even ready to negotiate about the devolution of police and land power to the Tamils. No, Tamils do not enjoy ‘state power’ in Gramscian sense. Then why do they direct the appeal to the Tamil civil society and its civil and political representatives? Senan says their intention is not genuine. Nirmala answers ‘it is a lie’? It is non answer. She can’t answer. So she just jumps from one issue to another which is irrelevant to the questions raised.

Nirmala tells that the ‘appeal’ should be accepted on its face value. Thus she wants us to isolate the ‘appeal’ from the major political issues confronting the ‘whole’ Tamil community. No, we can’t accept it on its face value. We all know it is a divisionary act; an act which will divide Tamils and Muslims; an act the racist Sinhala government itself would love to employ. The British used the same divide and rule policy in India. Just as the Justice Party which wanted to perpetuate the British rule in India, these vested interests want to perpetuate the Sinhala rule in Eelam. Like SLDF the Justice Party tried to portray certain issues in isolation and the British supported them to the hilt. In Nirmala’s view Sinhala racism can not be countered by Tamil nationalism. She does not offer any alternative. But she vouches for the ‘appeal’ which narrows down the focus. Now we get the real picture. Their intention is suspect. They just want to ease out the Sri Lankan government at a time when the international pressure is mounting to investigate war crimes and settle the Tamil issue.

It is time we expose these petty intellectuals and their petty politicking.


Links:

http://www.youtube.com/watch?v=f6dpcfv0cS4&feature=related

http://www.youtube.com/watch?v=s_1mP7vGdi0&feature=related

http://www.youtube.com/watch?v=jYIDZ6bs9dc&feature=related

http://www.youtube.com/watch?v=W08QxE_Ampw&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=1&feature=plcp