Tuesday, September 22, 2009

நெஞ்சழுத்தம்

ஜோஸ் அன்றாயின்

சோவியத் யூனியன் உடைந்து போனவுடன் கேசவனும் உடைந்து போனான். சோசலிசம் உலகமெங்கும் மலர்ந்து சமூகத்தையே மாற்றியமைக்க போகிறது என்ற அவனது கனவு உடைந்து போனதுதான் காரணம். சோசலிச கனவை மெய்யாக்க இயக்கத்தில் சேர்ந்து அவன் ஆற்றிய பணிகள் அளப்பரியது என்பதை அவனை அறிந்த யாவரும் அறிவர். விலைவாசி உயர்வை எதிர்த்தப் போராட்டமாகட்டும், அரசின் பொருளாதரக்கொள்கைக்கு எதிரான போராட்டமாகட்டும் அவன் முன்னின்று போராடினான். போராட்டங்களை கட்டுபடுத்த போலீஸ் படைகள் குவிக்கப்பட்டாலும் “உங்களால் எங்களை என்ன பண்ண முடியும்” என்று நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டான். அதற்காவே மேலதிகாரிகளிடமிருந்து லத்தி சார்ஜ் செய்ய உத்தரவு கிடைத்ததும் போலீஸார் அவனைத் தனியாக கவனிப்பதுண்டு. இருந்தாலும் ஓடிவிடமாட்டான். அடிவாங்கிக்கொண்டே போலீஸ் அராஜகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பான். ஆனால் சோவியத் யூனியன் உடைந்ததும் அவன் முன்னால் உள்ள கனவுப்பாதை உடைந்து போயிற்று. உடைந்தே போய்விட்டான்.

அப்போதுதான் அவன் ரிச்சர்ட் டாக்கின்ஸின் “சுயநலமிக்க மரபணுக்கள்” என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. மனிதனின் சுயநலமானது அவனுடைய மரபணுக்களின் உள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அந்தப் புத்தகத்தை படித்ததன் மூலம் தெரிந்துகொண்டான். அப்படியானால் முதலாளித்துவ கொள்கை தூக்கிபிடிக்கும் சுயநலம் சார்ந்த தனியார் உடமை இயல்பானது என்றும் முதலாளித்துவ பொருளாதாரமானது போட்டியை ஏற்படுத்தி சமூகத்தின் செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும் என்றும் முடிவுக்கு வந்தான். சோசலிச தத்துவத்தின் தோல்வி  என்பது முதலாளித்துவ தத்துவத்தின் வெற்றியென்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவனுடைய சகத் தோழன் ராகவன் எச்சரித்தான். முதலாளித்துவ தத்துவம் மேலை நாடுகளை எந்த அளவுக்கு செல்வச் செழிப்புள்ள நாடுகளாக மாற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அவனுடைய வாயை அடைத்துவிட்டான் கேசவன். அன்றிலிருந்து முதலாளித்துவ ஜனநாயகம்தான் மனித குலத்தின் செல்வ செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அந்தத் தத்துவத்தை மனதார ஏற்றுக்கொண்டான். உடைந்து போன அவன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினான். உற்சாகத்துடன் முதலாளித்துவ உலகத்தில் புகுந்தான். ஒரு பெரிய கம்பெனியில் பொதுமேலாளராக வேலைக்கு சேர்ந்துகொண்டான். நிறுவனம் வளர்ச்சியடைந்தது. சோசலிசவாதியாக இருந்து முதலாளித்துவவாதியாக மாறிய கேசவனை பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதின.

ஆனால் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த முதலாளித்துவ உலக பொருளாதாரம் தேக்கமடைந்ததும் இவனும் தேக்கமடைந்து போனான். வேலையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பர்ந்தத்திற்கு ஆளானான். முதலாளித்துவக்கொள்கையை பின்பற்றி கட்டப்பட்ட பெரிய பெரிய வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் பொருளாதார தேக்கத்தில் மாட்டிக்கொண்டு திவாலாகிப் போனதும் வேறு வழி இல்லாது முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறுவதற்கான அரசியல் தத்துவம் தன் கையில் இல்லாதிருப்பதை உணர்ந்தான். அவனுடைய அரசியல் ஞானம் அவனை கைவிட்டது. தேக்கமடைந்துபோனான். தூக்கமில்லாமல் போனது, எப்போதும் நெஞ்சு படபடத்தது, படுத்தாலே மாரடைப்பு வருவதாகத் தோன்றியது. டாக்டரை சந்தித்தான். நன்றாக பரிசோதித்தார். நோயில்லை என்றார். ஆனாலும் அவனுக்கு அந்தப் பிரச்னைகளோ தொடர்ந்து இருந்தன. அந்த டாக்டர் சரியில்லை என நினைத்தான். டாக்டருமே தேக்கமடைந்துவிட்டதாக தோன்றியது. தன் நிலைமையை தனக்கு மிக நெருங்கிய டாக்டர் நண்பனிடம் தெரிவித்தான். அவன் பொதுமருத்துவத்தில் மட்டுமல்ல மனநல மருத்துவத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். தன் நண்பனால் மட்டுமே சிறந்த மருத்துவம் செய்யமுடியும் என்று நம்பி அவன் வேலை பார்க்கும் அரசு மனநல மருத்துவமனைக்குச் சென்றான்.

நண்பன் கேசவன் சொன்ன எல்லா விசயங்களையும் கூர்ந்து கவனித்த பிறகு கேசவனுக்கு உடல் நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். “உனக்கு உடல் ரீதியா எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா மன அழுத்தம் இருக்குது. அதனாலதான் உனக்கு தூக்கம் வரல. மாரடைப்பு வர்றது மாதிரி எல்லாம் தோணுது.” என்றான். கேசவன் கொந்தளித்துப் போய்விட்டான். மன அழுத்தத்தால் சுகவீனமானதாகக்கொண்டால் தனக்கு மனநோய் இருக்கிறது என்றாகிவிடும். பள்ளிகூடத்தில் படிக்கும்போது சிஸ்டர் லிகோரியா மேரி அவனை பார்த்து “உனக்கு நெஞ்சழுத்தம் ரொம்ப அதிகம்டா.” என்று கூறியது ஞாபகம் வந்தது. நண்பன் கூறுவதை ஒத்துக்கொண்டால் தனக்கு மனநோய் சிறுவயதிலிருந்தே இருக்கிறதாக மாறிவிடும். “எனக்கு மனநோய் எல்லாம் இருக்க வாய்ப்பில்ல. ஒனக்கு சரியா நோய பரிசோதிச்சு சொல்லத் தெரியல அதனாலத்தான் நீ இப்படிப் பேசற.” என்றான் கேசவன். “மன அழுத்தம் ஒரு நோய் கெடையாது. அத கம்மி பண்றதுக்கு மாத்திரை தர்றேன். அத நீ ஒரு வாரம் சாப்பிட்டாலே போதும்.” அதற்கு கேசவன், “ஆனா எனக்கு மன அழுத்தம் கெடையாது. நீ சிஸ்டர் லிகோரியா மேரிய பாத்து பேசிருக்க. அவங்கதா எனக்கு நெஞ்சழுத்தம் இருக்குன்னு உங்கிட்ட போட்டு குடுத்திருக்காங்க.” என்றான். “சிஸ்டர் லிகோரியா மேரி இறந்து ஒரு வருசத்துக்கு மேல ஆகுது. அதுக்கப்புறம் நான் எப்படி அவங்ககிட்ட பேசமுடியும்.” “அப்படீன்னா நீ அவங்க பள்ளிகொடத்துல சொன்னத ஞாபகம் வச்சிகிட்டு பேசுற.” “நான் எதையும் மனசுல வச்சுகிட்டு பேசல. உண்மையத்தான் சொல்றேன். நீ நம்புன சித்தாந்தம் தோத்து போச்சு. உன் மொதலாளி ஒன்ன முதுகுல குத்திட்டாரு. அதுதான் ஒனக்கு மன அழுத்தம் வரக்காரணம்.” என நண்பன் கூற, “என்ன யாரும் முதுகுல குத்த முடியாது. குத்துனா நான் வயித்துல குத்திருவேன். பள்ளிக்கூடத்துல போட்ட பழைய சண்டை எல்லாத்தையும் மனசுல வச்சுகிட்டு இப்போ நீதான் என்ன முதுகுல குத்துற.” என்றான் கேசவன். அவனை டாக்டர் நண்பன் தான் அணிந்திருந்த கண்ணாடிகளுக்கு ஊடே கூர்ந்து கவனித்தான். கேசவனுக்கு கோபம் மேலும் அதிகரித்தது. அவன் கண்ணாடி மேலேயே ஒரு குத்துவிடலாம் என்று முஷ்டியை கொண்டுசென்றான். ஆனால் பழைய கோபத்திலேயே தனக்கு மனநோய் இருக்கிறது என்று கூறுகிறான் என்றால், இப்போது சண்டையிட்டால் தன்னை மனநோய் முற்றியவன் என்று முத்திரை குத்தி வார்டுக்குள் அடைத்துவிடுவான். கேசவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. குத்துவதற்கு நீட்டிய கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.

டாக்டர் நண்பன் எதையுமே கண்டுகொள்ளாமல் மீண்டும் “நீ இந்த மாத்திரைகளை சாப்பிட்டா போதும். ஒனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.” என்றான். கேசவன் “நான் மனநோய்க்கான மாத்திரைகளை சாப்பிடவேண்டிய எந்த அவசியமுமில்லை.” என கத்தினான். “இது மனநோய்க்கான மாத்திரை இல்லை.” என உறுதி கூறினான் நண்பன். கேசவன் மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று, “இது மனநோய்க்கான மருந்தா?” எனக் கேட்க, மருந்துக்கடை பணியாளன் “இதை மனநோய்க்கான மருந்து எனக் கூறமுடியாது.” எனக் கூற அந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டான்.

மனநோய் இல்லாமலேயே ஏன் டாக்டர் நண்பன் தனக்கு மனநோய் இருப்பதுபோல் வியாக்கியானங்கள் பண்ணினான் என்று கேசவன் இரவு முழுக்க தூங்காமல் யோசித்தான். அப்போதுதான் சிஸ்டர் லிகோரியா மேரி பள்ளிக்கூடத்தில் சொன்ன வார்த்தைகளை வைத்துகொண்டு அவனுக்கு மனநோய் இருப்பதாக நம்பி அவனுடைய சொத்து முழுவதையும் கையெழுத்திட்டு வாங்கி அபகரித்துக்கொள்ள சுயநலமிக்க நண்பன் முயற்சி செய்வது புரிந்தது. “அது நடக்கப்போவதில்லை. ஏன்னா நான் எவ்வளவு தெளிவான ஆள் என்று அவன் கையெழுத்து வாங்க வரும்போது காட்டுகிறேன்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான் கேசவன். அதன் பிறகு பல தடவை டாக்டரை கேசவன் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவன் கேசவனிடம் எங்கும் கையெழுத்து போடுமாறு கேட்கவேயில்லை. கேசவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும் டாக்டர் தன்னிடம் கையெழுத்து வாங்க வராத காரணம் தான் மிகவும் தெளிவாக இருப்பதுதான் என்பதை உணர்ந்தான். அப்படியென்றால் அவன் தன்னை மனநோயாளி என்று முத்திரை குத்த முயற்சிக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணி குழம்பிப்போனான். ஒருவேளை சிறுவயதில் இருவருக்கும் இருந்த பகையை டாக்டர் இப்போதும் வெளிபடுத்துகிறான் என அவனுக்கு யோசிக்கத் தோன்றியது. காரணம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அவன் தன்னை மனநோயாளியாக சித்தரித்து மொட்டையடித்து சிறைபோலிருக்கும் வார்டுக்குள் அடைத்துவிட முயற்சி செய்வான் என்பதை உணர்ந்துகொண்டான். எந்த விளைவுகளைப் பற்றியும் கேசவனுக்கு கவலையுமில்லைதான். ஆனால் மனநோயாளி என்று முத்திரை குத்தி மொட்டையடிக்கப்பட்டால் தன் காதலி தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயம் மட்டும்தான் அவனை வாட்டியது. “நான் மொட்டைத்தலையுடன் இருந்தால் உனக்கு பிடிக்குமா.?” என்று முன்னெச்சரிக்கையாகவே காதலியிடம் கேட்டான். அவள், “ஒனக்கு மொட்டை நல்லா இருக்காது.” என்று கூறினாள். கேசவன் பயம் மேலும் கூடியது.

இப்போது டாக்டரின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பி காதலியுடன் வெளியூருக்கு சென்றுவிட வேண்டுமென்று அதற்கான வழிகளை தேட ஆரம்பித்தான் கேசவன். டாக்டர் தன்னை ஒரு ஆபத்தான மனநோயாளி என்ற பொய்த் தகவலை போலீஸுக்கு கொடுத்து தான் எங்கும் தப்பியோட முடியாதபடி பஸ் நிலையங்கள் ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் கண்காணிக்க ஏற்பாடு செய்தால் நிலைமை ரொம்பவும் சிக்கலாகிவிடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகவே காதலியிடம் சிறுவயதிலிருந்தே டாக்டர் விரோதியாக நடந்துகொண்டதை விளக்கி, தற்போது மனநோய் டாக்டராக இருக்கும் அவன் சொல்வதை எளிதில் மற்றவர்கள் நம்புவார்கள் என்பதால் மனநோயாளியாக தன்னை முத்திரை குத்தி மொட்டையடித்து வார்டுக்குள் தள்ள எள்ளளவும் தயங்கமாட்டான் என்பதை தெளிவாகப் புரியவைத்தான். கேட்ட காதலி அதிர்ந்துவிட்டாள். “போலீஸிடம் டாக்டருக்கு எதிராக கம்ளெயிண்ட் கொடுக்கலாமா?” என்றாள். கேசவன் சம்மதிக்கவில்லை. அது மேலும் பிரச்னையை சிக்கலாக்கும் என்று கருதினான். அதனால் இருவரும் வேறு நகருக்கு தப்பிப்போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வாழ்வதென்று தீர்மானித்தனர். அதற்காய் இருவரும் தீவிரமாய் ஆயத்தமாயினர். அவர்கள் வெளியூருக்கு கிளம்பவேண்டிய அன்று கேசவன் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக கதவைத் திறக்க வாசலில் டாக்டர் நின்றிருந்தான். கேசவன் அதிர்ந்துபோனான். டாக்டரால் முற்றிலும் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதாக தோன்றியது. அவனுக்கு தப்பிப்பதற்கு வேறு வழி தெரியாததால் அவனுடைய காலில் விழுந்து அழ ஆரம்பித்தான். காதலியுடன் வெளியூர் சென்று வாழ அனுமதிக்குமாறு கெஞ்சினான். டாக்டரோ திருமணம் செய்துகொண்டு வாழ வெளியூர் செல்லவேண்டிய அவசியமில்லை என்றும் உள்ளூரிலேயே திருமணத்தை நடத்த தானே எல்லா ஏற்பாடுகளைச் செய்வதாகவும் சிகிச்சையை மட்டும் நிப்பாட்ட வேண்டாமென்றும் கூறினான். கேசவனுக்கு டாக்டர் மீது சந்தேகம் வலுத்தது. என்னவிருந்தாலும் இப்போது டாக்டர் சொல்வதையே கேட்கும்படியாயிற்று.

அடுத்தமுறை வரும்போது கேசவன் காதலியை கூட்டிவரவேண்டுமென்று டாக்டர் நண்பன் நிர்பந்தித்தான். அந்த வேண்டுகோளே தப்பான எண்ணத்துடன்தான் எழுப்பப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள கேசவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. ஆனால் அவனால் எதுவும் இப்போது செய்யமுடியாது. முரண்டுபிடித்தால் டாக்டர் கண்டிப்பாக தன்னை வார்டுக்குள் அடைத்துவிட்டு காதலியை அவன் வசம் வைத்துக்கொள்ள முயற்சிசெய்வான் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அதனால் மறுமுறை மனநல மருத்துவமனைக்கு போகும்போது காதலியையும் கூட்டிப்போக வேண்டியதாயிற்று. டாக்டர் அறையில் காதலி செலவு செய்த ஒவ்வொரு கணமும் கேசவனுக்கு ஒரு யுகமாக தோன்றியது. ஒரு வழியாக அவள் டாக்டரின் அறையிலிருந்து வெளிவந்தாள். “ஏன் மூணு மணிநேரமாச்சு?” என கேசவன் கேட்க அவள், “மூணு மணிநேரமாச்சா... அரை மணிநேரந்தானே ஆச்சு?” “என்ன அர மணிநேரந்தான் ஆச்சா...? என்ன எனக்கு கணக்குத் தெரியாதுனு நெனைக்கிறியா? நான் 10வதுல கணக்குக்கு நூத்துக்கு நூறு மார்க்கு வாங்கியிருக்கேன்.” “நான் உள்ள போனது 2.10க்கு. இப்ப மணி என்னன்னு கடிகாரத்தை பாரு.” என கேசவன் கைக்கடிகாரத்தை பார்க்க முள் 5.20ல் நின்றுபோயிருந்தது. அது அப்போதுதான் நின்று போயிருந்ததா அல்லது காலை 5.20க்கே நின்றுபோனதா என்று அவனுக்கு பிடிபடவில்லை. வெளியே எட்டிப்பார்த்தபோது மேகமூட்டமாய் இருந்ததால் நேரத்தை அவனால் கணிக்கமுடியவில்லை. அவள் அப்போதுதான் டாக்டர் அறையிலிருந்து வந்திருக்கிறாள். அவன் கண்டிப்பாக தனக்கு மனநோய் உள்ளதாக காதலியிடம் கதை கட்டியிருப்பான். இனிமேலும் நேரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தை சொன்னால் காதலியும் கூட தனக்கு மனநோய் இருக்கிறது என்று சந்தேகிக்கக்கூடும் என பயந்த கேசவன் மேலும் பேச்சை வளர்க்காமல் விட்டுவிட்டான். கேசவன் உள்ளே சென்றதும் டாக்டர் ஏற்கனவே கொடுத்த மாத்திரைகளோடு வேறு இரண்டு மாத்திரைகளையும் வாங்குவதற்கு மருந்து சீட்டு எழுதிகொடுத்தான். காதலியிடம் அவன் மனநோயாளி என்று நிரூபிக்கும் பொருட்டுதான் அதிக மருந்துகளை எழுதிகொடுக்கிறான் என்பதை அறிவான் கேசவன். இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கோபத்தில் தனக்கு மனநோய் உள்ளது என்று பொய்த் தகவலை பரப்புவதாய் டாக்டரிடம் சண்டையிட்டால் அந்தச் சண்டையையே சாதகமாக பயன்படுத்தி மனநோய் இருக்கிறது என்று அடித்து கூறி காதலியை பிரித்துவிடுவான். எந்தக் காரணத்தைக்கொண்டும் அதற்கு இடம் தரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் கேசவன். ஆனால் எதிர்பார்த்தற்கு நேர்மாறாக டாக்டர் கேசவனின் திருமணத்தை தனக்கு தெரிந்த கல்யாணமண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்தலாம் என்று கூறினான். நல்லவனாய் நடந்துகொள்கிறான். பின்னர் ஏன் மனநோய் இருக்கிறது என கதைகட்டுகிறான் இவன்? கேசவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் டாக்டர் தனக்கு மனநோய் இருக்கிறது என்று கதைகட்டுவதற்கு ஏதோ பெரிய உள்நோக்கம் இருக்கிறது என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. அந்த உள்நோக்கம் என்னவென்றுதான் புலப்படாமலிருந்தது.

இப்படி விசயங்கள் இருக்க, ஒருநாள் டாக்டரை பார்க்கப்போகும்போது, டாக்டரை பார்க்க காத்திருக்கும் நோயாளிகளின் வரிசையில் தன்னுடைய பழைய அரசியல் நண்பன் ராகவனும் இருப்பதை பார்த்தான் கேசவன். அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. டாக்டர் தன்னை மனநோயாளி என்று கூறுவதற்கு பின்னால் அரசியல் கோணம் இருப்பதை கண்டுகொண்டான். ஒருமுறை டாக்டரிடம் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முறைகேடுகளைப் பற்றி விவாதிக்கும் போது அவன், “இந்த மாதிரி முறைகேடுகள் நடக்காம இருக்கணும்னா மொதல்ல அரசியலில் களையெடுப்பதற்கான பெரிய இயக்கம் ஒண்ணு நடத்தணும்.” எனக்கூற, டாக்டர் “ஒனக்கு இன்னும் சோசலிசத்தின் பாதிப்பு இன்னும் இருக்கிறது.” என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ஆக சமூக பொறுப்புள்ள யாரையும் மனநோயாளி என்று முத்திரை குத்தி அவர்களை வேண்டுமென்றால் வார்டுக்குள்ளேயே தள்ளி போராட்டங்களை முறியடிப்பதுதான் இந்த மனநோய் டாக்டர்களின் வேலை. அதற்காகத்தான் அவர்களுக்கு அரசாங்க சம்பளம் கொடுக்கப்படுகிறது. கேசவனுக்கு அது அதிர்ச்சியூட்டும் விசயமாக இருந்தது. ராகவனிடம் இதுபற்றி விவாதிக்கும்போது கேசவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த சந்தேகங்களும் தீர்ந்துபோயின. ராகவன், தான் டாக்டரிடம் ஒருமுறை, “ஈழ தமிழரோட படுகொலைக்கு காரணமாக இருந்ததுக்காக ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தூக்கிலிடவேண்டும்.” என்று கூறியதற்காய் அவன் இரண்டு மாதக்காலம் வார்டில் தங்கி சிகிச்சை பெறவெண்டும் என்று கூறி தன்னை வார்டுக்குள் அடைத்ததை கேசவனிடம் கூறினான். மற்றொருமுறை வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் பற்றி விவாதிக்கும்போது, “வக்கீல்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் நடந்துக்கறத பாத்தா அவங்க நார்மலா இருக்கறது மாதிரி தெரியல.” என்று டாக்டர் கூறியதையும் கேசவனிடம் சொன்னான் ராகவன். “அப்படீன்னா அவங்க அப்நார்மல்னு டாக்டர் சொல்ல வர்றானா...?” என்று கேசவன் கேட்க, “ஆமா... அப்நார்மலனா ஈசியா மனநோயாளிகள்னு முத்திரகுத்திரலாம்ல...? ஆனா சமூக பொறுப்புள்ள நம்ம எல்லாம் அரசாங்கத்தின் பெரிய சதிக்கு பலியாகிடக்கூடாது. அதனாலத்தான் அரசாங்கம் இத மாதிரி டாக்டர்கள் மூலமா என்ன கண்காணிச்சாலும், உள்ள அடைச்சாலும் என் வேலய செய்திட்டுதான் இருக்கேன்.” என்றான் ராகவன் பெருமிதத்துடன்.

டாக்டர் தன்னுடைய திருமணத்தில் ஏன் அக்கறை செலுத்துகிறான் என்று கேசவனுக்கு விளங்கியது. தான் சமூக அக்கறையுள்ளவனாக இருப்பது அவனுக்கு பிரச்னையாக இருக்கிறது. திருமணம் முடிந்த பின் தன்னுடைய மனைவியின் மூலமே தன்னை கொலை செய்வதற்கு டாக்டர் முயற்சி செய்கிறான். மனைவிகள் மூலமும் காதலிகள் மூலமும் நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறான் கேசவன். தேர்தலில் நடந்த முறைகேடுகளை அம்பலபடுத்துவதற்காக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து சமூகத்திலுள்ள களைகளை அகற்றுவதற்கு முயற்சி செய்வதை தடுப்பதற்காகவே தன்னை கொலைசெய்ய அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் டாக்டர் முயற்சி செய்கிறான் என்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவனை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. அவன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்று டாக்டரிடமும் காதலியிடமும் சொல்லிவிட்டான். ஆனால் பிரிவு என்பது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. காதலியிடம் தன்னுடைய முடிவை சொல்லும்போது அழுதுவிட்டான். காதலியோ என்ன நடந்தாலும் அவனை விட்டுப் விலகப்போவதில்லையென்று கூறி தானும் அழுதுகொண்டாள்.

முடிவெடுத்தபடியே பொதுநல வழக்கு தொடர்ந்து முறைகேடுகள் நடந்த எல்லாத் தொகுதிகளிலும் திரும்பவும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதுதான் தன்னுடைய முதல் சமூக கடமையாக கருதினான் கேசவன். முதலில் ஒரு தொகுதியில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு காட்டுவது எளிதாக இருக்கும் என்பதால் சொம்பையூர் தொகுதியில் மறுதேர்தல் நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தான். அங்கு நடந்த முறைகேடுகள் பரவலாக பத்திரிகைகள் மூலம் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. எதிர்கட்சி வேட்பாளருக்கு வீட்டிற்குள்ளேயே 6 ஓட்டுகள் இருந்தும் அவர் மொத்தம் 1 ஓட்டுதான் வாங்கியுள்ளார் என்ற ஒரு விசயம் மட்டுமே தேர்தலில் எந்த அளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். முறைகேடு நடந்திருப்பதை நிரூபித்து அந்த தொகுதியில் மறுபடியும் தேர்தல் நடத்த செய்துவிட்டால், முறைகேடுகள் நடந்த மற்ற எல்லாத் தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தும் பொருட்டு பொதுநல வழக்கு தொடருவது எளிதாக இருக்கும் என்பது கேசவனின் அனுமானம்.

வழக்கை சிறப்பாக எடுத்துச்செல்வதற்காக சின்ன சின்ன தகவல்களையும், சான்றுகளையும் சேகரித்தான் கேசவன். ஏராளமானோர் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு வருதற்கு தயாராக இருந்தனர். தான் மின்னணு பொறியியல் படித்தவன் என்பதால் எப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒரே கட்சி சின்னத்திற்கு ஓட்டுவிழுமாறு செய்யமுடியும் என்பதை விளக்குவதற்காக மிக விவரமான விவரணைகளுடனும், விளக்கப் படங்களுடனும் அறிக்கையொன்றை தயார் செய்தான். ஆனால் அரசு வழக்கறிஞரோ, “பொதுநல வழக்கை தொடர்ந்த மனுதாரர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்று வாதிட்டார்.” நீதிபதி மனுதாரர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருப்பதால் அரசு மனநோய் டாக்டரிடமிருந்து அவருடைய மனநிலை பற்றிய அறிக்கையை சமர்பிக்கவேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்தின் அடுத்த அமர்வில் அரசு மனநோய் டாக்டரான கேசவனின் நண்பன் கேசவனை பற்றி அளித்த அறிக்கையை போலீஸார் சமர்பித்தனர். அதில், “மனஅழுத்தம் அதிகம். அது அன்றாட வாழ்க்கையில் சரியான முடிவகள் எடுப்பதை பாதிக்காலாம்.” என்று குறிப்பிட்டிருந்தது. அறிக்கையை படித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து கேசவனுக்கு அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு தீர்ப்பளித்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த அவனுடைய காதலி அவனைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்களில் உண்மையிருந்தது. அவள் மீதிருந்த சந்தேகம் கலைந்து காதல் மீண்டும் ஊற்றெடுத்தது. ஆனாலும் காதலுக்காய் பொதுநலனை விட்டுகொடுக்கக்கூடாது என்று தீர்மானித்தான் கேசவன். அவளைப் பார்த்து அவன், “நீ எனக்காக அழுற. நாட்டு மக்களுக்காக நான் அழுறேன். நீ எவ்வளவு அழுதாலும் என்னோட கொள்கை பிடிப்ப நான் விடப்போறதில்ல. இனிமே என்ன சந்திக்க வராதே.” என்று கூறினான்.

டாக்டர் செய்த துரோகத்தால் கேசவனுடைய அரசியல் களையெடுப்பு முயற்சிக்கு எந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்குமென்று உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். வழக்கின் முடிவு கேசவனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் டாக்டரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் பள்ளியில் படிக்கும்போதே ஒருமுறை சிஸ்டர் லிகோரியா மேரி, “இந்த கம்யூனிஸ்ட்காரனுகதான் நாட்டையே குட்டிச்சொவாராக்குறானுக.” என்று கூற “சிஸ்டர், கேசவன் கம்யூனிஸ்ட்காரன்.” என்று யூதாஸ் போல போட்டுகொடுத்தவன்தான் இந்த டாக்டர். வழக்கம்போல் வார்டுகளிலிருக்கும் நோயாளிகளை பரிசோதிக்க வரும்போது டாக்டர் கேசவன் இருக்கும் வார்டுக்கும் வந்தான். அவன் முகத்தை பார்ப்பதற்கே கேசவனுக்கு அருவருப்பாக இருந்தது. அப்படியொரு துரோகியை அவன் பார்க்க விரும்பவில்லை. டாக்டரிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டான். டாக்டர் போகாமல் அங்கயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து “சொகுசு வாழ்க்கைக்காக மக்களோட நலத்த காலுலயே போட்டு மிதிச்சிட்டியேடா...” என்று கத்தினான் கேசவன். டாக்டர் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பேச ஆரம்பித்தான். “நான் செய்தது ஒனக்கு கோபமாத்தான் இருக்கும். ஆனா நான் அப்படி ரிப்போட் கொடுக்காம இருந்தா என்ன தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவாங்க. அதுமட்டுமில்ல ஒன்ன இப்ப இருக்கற சொம்பையூர் M.P. மொக்கையன் ஆள வச்சு கொலைச்செய்யக் கூடிய வாய்ப்புக்கூட இருக்கு. நான் ஒங்க அம்மா கையால அவ்வளவு நாள் சாப்பிட்டிருக்கேன். ஒன்ன பாதுகாக்கறது என்னோட கடமைனு நெனைக்கிறேன்.” மொக்கையனிடமிருந்து காசு வாங்காமல் டாக்டர் அப்படி பேசுவானா என்ன? “மரியாதையா இங்க இருந்து போயிடு. ஒன்னோட வேசமெல்லாத்தையும் வேற யாருகிட்டயாது காட்டு.” என்று அதி கோபத்தில் கத்தினான் கேசவன். டாக்டர் வேறுவழியில்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

மனநோய் மருத்துவமனையிலிருந்து வெளிவந்ததும் தன்னுடைய சமூகப்பணியை தொடரவேண்டுமென்று கேசவன் முடிவு செய்தான். முதலில் சொம்பையூர் M.P. மொக்கையனை கொலைசெய்வதுதான் சரியாக இருக்கும் என அவன் தீர்மானித்தான். அந்தக் கொலையை மிகவும் கவனமாக திட்டமிட்டு எல்லாப் பாதுகாப்பு வளையங்களையும் மீறி எந்த ஆர்பாட்டாமுமில்லாமல் கச்சிதமாக செய்துமுடிக்கும் போது நாட்டுமக்கள் தான் அரசாங்கம் சொல்வதுபோல் ஒரு மனநோயாளியல்ல ஒரு சமூக புரட்சியாளன் என்பதை உணர்ந்து தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதையும் அதன் மூலம் அந்தத் திருடர்களின் ஆட்சியைக் கவிழ்த்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே கொண்டுவரமுடியும் என்பதையும் உணர்ந்திருந்தான். தான் கையிலெடுத்திருந்த சமூகப்பணியிலிருந்து சற்றும் விலகிவிடக்கூடாது என்பதற்காக காதலியைச் சந்திப்பதை கூட முற்றிலுமாக தவிர்த்து வந்ததிலிருந்து அவனுடைய கொள்கைப் பிடிப்பு விளங்கும்.

கேசவன் மொக்கையன் செல்லுமிடங்கள், அவர் தங்கும் ஹோட்டல்கள், அவர் செல்லும் வாகனங்கள், உறங்கும் நேரம், பாதுகாவலுக்காக உடனிருப்பவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து எப்படி பாதுகாப்பு வளையங்களை மீறி மொக்கையன் இருக்குமிடத்துக்குள் ஊடுருவி கொலை செய்துவிட்டு யாருடைய கைகளிலும் சிக்காமல் தப்பிப்பது என்பதை திட்டமிட்டான். அவன் திட்டம் தோல்வியடையவில்லை. ஒரே ஒரு துப்பாக்கிக்குண்டினால் மொக்கையனை சுட்டுக் கொன்றுவிட்டு யாருடைய கைகளிலும் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டான். பத்திரிகைகளெல்லாம் கேசவனின் திறமையைப் பற்றியும் அவனுக்கு கம்யூஸ்டுகளுடனிருந்த தொடர்பைப் பற்றியும் விரிவாக எழுதின. சொம்பையூர் தொகுதி மக்கள் மீண்டும் தேர்தல் வருவதால் மீண்டும் தங்களுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து காசு கிடைக்குமென்று சந்தோசத்தில் திளைத்தனர்.

கொலைசெய்வது மட்டுமல்ல கேசவனின் எண்ணம் என்பது உங்களனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விசயம்தான். கொள்கைப் பிடிப்புள்ள அவன் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது அந்த நீதிமன்றத்தையே தன்னுடைய பிரச்சார மேடையாக்கி மக்களை தன் பின்னால் திரட்டி சமூக மாற்றத்தை கொண்டுவரும் பொருட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தான். வழக்கு விவாதத்தின்போது அரசு வழக்கறிஞர் கேசவனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை வழங்கவேண்டுமென்று வாதிட்டார். கேசவன் தானே தன்னுடைய வழக்கை வாதிடுவேன் என்றாலும் காதலி அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் அவன் ஒரு மனநோயாளி என்று கூறி அவனுக்கு பதிலாக வாதிட்டார். நீதிமன்றத்தையே தன்னுடைய அரசியல் மேடையாக்க முடியும் என்ற கேசவனின் எண்ணம் சுக்குநூறாக உடைந்தது. அவனுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேசவன் ஒரு மனநோயாளியென்றும் மனம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் அந்தக் கொலையை செய்தான் என்றும் கூறி கேசவனின் நண்பனான அரசு மனநோய் டாக்டர் கொடுத்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில், “கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளானவர். வன்முறையான காரியங்களில் ஈடுபடுவதற்கான மனநிலை மிகவும் அதிகமாக உள்ளது.” என்று குறிப்பிடபட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கேசவனின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால் வழக்கிலிருந்து விடுவித்து அவனுக்கு அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.

மனநோய் மருத்துவமனை வார்டில் அடைக்கப்பட்டிருந்த கேசவன் கூண்டிலடைக்கப்பட்ட புலி போல் வெறியுடனிருந்தான். காதலியும் டாக்டரும் சேர்ந்து தனக்கும் சமூகத்துக்கும் பெரும் துரோகமிழைத்துவிட்டதாக நினைத்தான். “நீதிமன்றத்தை பிரச்சார மேடையாக்கி ஒரு புரட்சியையே நடத்தியிருப்பேன். நீ சதிசெய்து அதை தடுத்திட்டே துரோகி... இதுக்காக நீ அரசாங்கத்துகிட்ட எவ்வளவு காசு வாங்குன...?” என டாக்டரை பார்த்து கத்தினான். டாக்டர், “நான் அப்படி அறிக்கை கொடுக்காம இருந்தா நீ புரட்சியெல்லாம் பண்ணியிருக்க முடியாது. தூக்குலதான் தொங்கியிருப்பே.” என்று கூற, “ஒரு புரட்சியாளன் ஒருபோதும் சாகறதில்ல. விதைக்கபடுகிறான். நான் ஜூலியஸ் பூசிக் மாதிரி என்னோட தூக்குமேடை குறிப்புகள எழுதி இந்தச் சமூகத்தையே விழிப்படைய வச்சிருப்பேன். நானெல்லாம் தூக்குமேடைய பாத்து பயப்படுறவன் கெடையாது தெரிஞ்சுக்கோ.” என கேசவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டர் நண்பன் அடுத்த வார்டை நோக்கி நகர ஆரம்பித்தான். அவன் பின்னால் “துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை.” என்ற வீரப்பாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் வசனத்தை கேசவன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.
--------------------------------------------------------------------------------
அடவி அக்டோபர் 2009

பறவைகள்

ஜோஸ் அன்றாயின்வனிதாவிற்கு பறவைகளின் உலகம் மிகவும் ஆச்சர்யமூட்ட கூடியதாக இருந்தது. அவைகள்தான் எவ்வளவு சுதந்திரமானவை! நிலவெளியெங்கும் பறந்து திரியும் அந்த பறவைகளை போல மாற வேண்டும் என ஆசைப்பட்டாள். அதனால் அவள் இளங்கலை பட்ட படிப்பு முடித்தவுடன் ‘திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று அம்மா கேட்டதற்கு, ‘இல்லை நான் பறவையியல் படிக்க போகிறேன்.’ என்று பதிலளித்தாள். பறவைகளின் உலகினுள் நுழைந்த அவள் பிரமித்துதான் போனாள். தளைகளற்ற காற்றில் உலாவும் பாடும் பறவைகள் தங்கள் உள்ளுணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிபடுத்துமாம். அவற்றின் குரலின் மூலம் தன் காதலனை அல்லது காதலியை அழைத்து தான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியபடுத்துமாம். சுதந்திரத்தில் அவைகளின் காதல் மலருவதால் அவற்றின் பிணைப்பு அவ்வளவு நெருக்கமாகவும் தூய்மையானதாகவும் இருக்கிறது போலும். அதிசயம் என்னவென்றால் அடைகாக்கும் வேலையை ஆண் புறாவும், பெண்புறாவும் மாறி மாறிதான் செய்யுமாம். புறாக்களின் தூய்மையான காதல் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட காதலர்கள்தான் முதன் முதலாக புறாக்கள் மூலம் கடிதங்கள் பரிமாறும் முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். பறவைகளின் காதல் வாழ்க்கையில் லயித்து போன அவளது இதயம் பறவைகள் பறந்து திரியும் வெளி போல் விசாலமானது. கனவுகளின் வாசல்கள் திறந்துக்கொண்டன. ஆண் பறவையொன்று அவளின் கனவுலகத்துக்குள் நுழைந்தது. காதலில் விழுந்துவிட்டாள். அந்த காதல் பறவைகள் வெளியெங்கும் பறந்து திரிந்தன. சமூக விழுமங்களின் கட்டுகளின்றி பறவைகளின் சுதந்திரம் அவர்களின் காதலில் நிறைந்திருந்தது. அவள் பறவைகளின் இசையில் காதல் பாடல்களைப் பாடினாள். அவள் காதலின் அழகு அவள் முகத்தில் மலர்ந்து பிரகாசித்தது. அவள் கண்களிலுள்ள கனவுகளை சுற்றியுள்ள உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் தங்கை சங்கீதா ‘கனவுலகத்தினுள் சிறகடிக்கும் காதலை உன் கண்களில் பார்க்கிறேன்.’ என்றாள். ‘பறவைகளிடமிருந்து கற்றுக்கொண்டேன்.’ என்றாள் வனிதா. தானும் பறவைகளை பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டாள் சங்கீதா.

பறவைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள புறப்பட்ட சங்கீதா பறவையாகவே மாறிவிட்டாள். பறவையாகி அவள் இசைத்த இசையில் மயங்கி எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் அவளுக்கென்று ஒரு காதலன். ‘எப்படி என்னிடம் வந்து சேர்ந்தாய்?’ என்று கேட்டதற்கு அவன், ‘பறவைகளின் இசையிலுள்ள அர்த்தங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியும். அதனால் உன் குரலை கேட்டதும் வந்தேன்.’ என்றான். ‘அது எப்படி?’ என்றாள் இவள். அவன் ‘நான் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்பவன். என்னதான் ஆய்வாளன் என்றாலும் பறவைகளின் காதல் வாழ்க்கை என்னை கவர்ந்துவிட்டது. அதனால் நானும் பறவையாகிப் போனேன். பறவையாகிவிட்ட உன்னையும் கண்டடைந்தேன்.’ என்று கூறினான்.

இரு சகோதரிகளின் காதல் வீடு முழுவதும் கனவுகளையும், இசையையும் கொண்டு நிறைத்தன. அவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் குடிகொண்டு காதலிசையை இசைத்தன. அம்மா சாந்தா தன் மகள்கள் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்தாள். பெரியவள் பறந்து போக எத்தனிப்பதையும் அவள் கவனித்தாள். அதனால் அவள் அவளைத் தனியாக அழைத்து, ‘வேண்டாம்... பறந்து போய்விடாதே. நான் சொல்வதை கேள். தாய் சொல் கேளாத வௌவால் தலை கீழாகத் தொங்கும்.’ என்றாள். வனிதா, ‘அம்மா பயப்படாதே. நான் பறந்து போக மாட்டேன்.’ என்றாள். ஆனால் அவை அவள் நாக்கிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளேயன்றி உள்ளத்திலிருந்து புறப்பட்டவையல்ல. உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் காதலை வெறும் வார்த்தைகளால் கட்டி போட இயலாது. வார்த்தைகளை மீறி அவள் பறந்து போனாள் காதலனுடன்.

தாய் காதலால் தனக்கு விளைந்த வாழ்வை நினைத்துப் பார்த்தாள். ஓடிப் போன மகளின் எதிர்காலத்தைக் குறித்து அவளினுள் பயம் எழுந்தது. விழுமங்கள் எனும் சகதியில் புரளும் சமூகத்தின் வாயோ அவர்களின் மேல் சேற்றைத் துப்பியது. தாய் துவண்டு போனாள். மகளின் எதிர்காலத்தையும் இழந்த பெருமையையும் மீட்கும் எண்ணத்துடன் உறவினர்களின் உதவியுடன் ஓடிப் போனவளை காதலனிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்து மாடியிலுள்ள கூண்டில் அடைத்தாள். கூண்டில் அடைக்கப்பட்டப் பறவை வாடி வதங்கி போனது. உணவு உட்கொள்ள மறுத்தது. எவ்வளவு கெஞ்சியும் அவள் இசைவதாக இல்லை. தாய் அவளைப் பார்த்து, ‘இரையில்லா தன் குஞ்சுகளுக்கு தன் இரத்தத்தையே உணவாக கொடுத்த பெலிகான் பறவையைப் போல நான் உங்களை வளர்த்துள்ளேன். அப்படி வளர்த்த உங்களை நான் கழுகுகளுக்கு இரையாக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் உன் நன்மைக்காகத்தான் செய்கிறேன் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.’ என்றாள். சாந்தா சொன்னது உண்மைதான் என்று அவள் கதையை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

சாந்தா ஒரு பருவ மங்கையாக இருந்த போது எங்கேயோ இருந்து வந்த வளையல் விற்கும் ஒரு வாலிபன் அவளை சுற்றி வளைய வளைய வந்தான். அவனிடம் அவள் மனதைப் பறிகொடுத்தாள். அவளின் குயில் போன்ற குரலைக் கேட்டு மயங்கி நின்றான் அவன். காதல் கருவாகி வயிற்றில் வளர்ந்தது. அவள் காதலன் மற்ற பகுதிகளில் வியாபாரம் செய்து திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். நாட்கள் சென்றன. அவன் வரவில்லை. அவளின் பெற்றோர், ‘அவன் வரமாட்டான். கருவைக் கலைத்துவிடு.’ என்று கூறினர். அவள், ‘இல்லை. அவன் என்னைப் பார்க்கக் கண்டிப்பாக வருவான்.’ என்று கூறி மறுத்துவிட்டாள். குழந்தை பிறந்த பிறகு ஒரு நாள் அவன் அவளைப் பார்ப்பதற்காக வந்தான். அவன் கண்களில் காதலின் தகிப்பு இருந்தது. அவன் உள்ளத்தில் காதலின் உயிருள்ள ஊற்று இன்னும் வற்றவில்லை என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனால் அவன், ‘என் தாய் தந்தையர் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதுவும் கையில் ஒரு குழந்தையுடன்.’ என்று கூறிச் சென்றுவிட்டான். அவள் தவித்துப் போனாள். சமூக விழுமங்கள் மற்றும் தாய் தந்தைப் பற்றிய பயம்தான் வளையல்களிட்ட தன் கையை அவன் பிடிப்பதற்குத் தடையாயிருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். அந்த தடைகளைத் தாண்டிவிட்டால் தான் தன் காதலனை அடைந்துவிட முடியும் என அவள் நம்பினாள்.

முடிவெடுத்தவள் கையில் குழந்தையுடன் வழியெங்கும் அவன் விற்ற வளையல்களின் ஓசைகளை பின் தொடர்ந்து அவன் ஊருக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தாள். ஊரின் மையத்திலுள்ள கோவிலில் குழந்தையைக் கிடத்தி, அங்கு குழுமிய ஊராரிடம் ‘இது விமலனுடைய குழந்தை. எனக்கு நியாயம் சொல்லுங்கள்.’ என்றாள். அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தனர். வேறு வழியில்லாமல் விமலனின் பெற்றோர் அவளை ஏற்றுக்கொண்டனர். அவன் மகிழ்ந்து போனான். தூய்மையான காதலின் முழுமையை அவள் முகத்தில் கண்டான். இணைந்த காதல் உள்ளங்களுக்கு காதலின் கொடையாக வந்து பிறந்தது இன்னொரு குழந்தை. பிறக்கும் போது அவள் அழவில்லையாம், பாடினாளாம். சங்கீதா என்று பெயரிட்டனர்.

இயற்கையின் போக்கு எப்போதுமே மனித விருப்பங்களுக்கேற்ப வளைந்து கொடுப்பதில்லை. எவ்வளவு முயன்றாலும் இயற்கையை மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை. மாறாக மனிதர்கள்தான் அதன் விதிமுறைக்குள் இயங்க வேண்டியுள்ளது. விமலனும் சாந்தாவும் சேர்ந்து உன்னதமான கனவுலகத்தைப் படைத்து அதில் வாழ விரும்பினாலும் இயற்கை காசநோய்க்கு விமலனை இரையாக்கி அவர்களின் கனவை கலைத்தது.

கலைந்த கனவுகளுடன் நிர்கதியாய் நின்ற அவளையும் அவளது குழந்தைகளையும் மாமனாரும், மாமியாரும் மோசமாக நடத்தினர். அவர்களின் துன்பத்தை கேள்வியுற்ற அவளது பெற்றோர் அவளைஅழைத்து போக வந்தனர். ‘காக்கை கூட்டில் தனியாக விடப்பட்டு பரிதவிக்கும் குயில் குஞ்சுகளை போன்று அவள் மற்றும் அவள் குழந்தைகளின் நிலை இருந்தது.’ என்று சாந்தாவின் அம்மா கூறினாள். தாய் தந்தையின் அரவணைப்பில் சாந்தா குழந்தைகளுடன் தன் வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்தாள். வேதனையில் உழன்றவர்கள் என்பதற்காகத் தன்னை இயக்கும் விதிகளை நிறுத்தி வைத்து இயற்கை யாருக்கும் கருணை காட்டுவதில்லை. அது தொடர்ந்து தன் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. பட்ட காலில்தான் படும். இயற்கை அதன் விஷச் சுழியில் வயதான அவளின் பெற்றோர்களை ஒவ்வொருவர்களாக அமிழ்த்தி சாவைத் தழுவச் செய்ததது. தன் குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டாள் சாந்தா. ஆம், தியாகம் நிறைந்த அந்த பெலிகான் பறவையை போலத்தான் தன் குழந்தைகளை வளர்த்தாள் அவள்.

கூண்டிலடைக்கப்பட்ட பறவைக்கோ தன் தாயின் துன்பத்தைவிட தன் காதலன் படும் துன்பம் பெரிதாகத் தெரிந்தது. உணவு உட்கொள்ளாமல் இருந்தாலும் காதல் அவளினுள் கனன்று கொண்டுதானிருந்தது. கனன்று கொண்டிருந்த காதலால் உருவான வெம்மை கூண்டு முழுவதும் பரவியது. அந்த வெம்மையின் மிகுதியால் ஜன்னல் கம்பிகள் வளைந்து கொடுத்தன. பறவை வெளியே பறந்து போயிற்று. வெளியே அவள் காதலன் அவளுக்காக காத்திருந்தான். பறவைகள் இரண்டும் எங்கோ கண் தெரியாத தேசத்திற்கு பறந்து சென்றுவிட்டன.

பெரியவளைத் தொடர்ந்து இளையவளும் பறந்து போய்விடப் போகிறாள் என்பதை அவள் கண்களைப் பார்த்தே கண்டுபிடித்தாள் தாய். இதற்கெல்லாம் காரணம் பறவைகள்தான் என்று எண்ணி வீட்டு தோட்டத்திலுள்ள மரங்களில் குடியிருந்த எல்லா பறவைகளையும் துரத்திவிட்டாள். தாய் வீசிய விழுமங்களால் பின்னப்பட்ட வலையில் சங்கீதா மாட்டிக்கொண்டாள். எவ்வளவு எத்தனித்தும் அவளால் அதிலிருந்து விடுபட்டு பறந்து போக முடியவில்லை. அவளுடைய நிலைமையை பறவைகள் அவளுடைய காதலனுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அவன் எங்கிருந்தோ பறந்து வந்தான் அவளுக்காக. ஆனால் தாயோ, துரத்தி வரும் பருந்திடம் போரிட்டும், சிறகுகளுக்குள் மறைத்தும் தன் குஞ்சை பாதுகாக்கும் தாய்க் கோழியைப் போல அவனிடம் இருந்து அவளைப் பாதுகாத்துக்கொண்டாள். அவனுடன் எப்படியாவது பறந்து போக வேண்டும் என முட்டி மோதிய சங்கீதா இதயத்தில் அடிபட்டு கீழே விழுந்தாள். இசை வற்றிப்போன அவளிடம் வெறும் அழுகைதான் எஞ்சியிருந்தது. அந்த அழுகை வீடு முழுவதையும் நிறைத்து துக்கத்தை பரவவிட்டது. அந்தத் துக்கத்தில் அமிழ்ந்து போனாள் தாய். ‘பறக்க கற்றுக்கொண்ட பறவைகள் பறந்து தனித்துப் போவதை போல் அவளை பறந்து போக விட்டு விழுமங்களென்னும் வெள்ளை அங்கியை உடுத்திக்கொண்டிருக்கும் சமூகத்தை எள்ளி நகையாடினால் என்ன?’ என்ற எண்ணம் திடீரென்று அவளினுள் எழுந்தது. ஆனால் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவளை பிடித்து வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். ஒருவேளை அவ்வாறு செய்வதன் மூலம் இழந்த தன் குலப் பெருமையை சமூகத்தில் அவள் நிலைநாட்ட எண்ணியிருக்கலாம்.

சிதைந்து போன கனவுகளுடன் சங்கீதா தன் கணவனுடன் சென்றாள். பறவைகளுடைய சுதந்திரம் அவர்களின் உறவில் இருக்கவில்லை. விழுமங்களின் கட்டுகளுக்குள் தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அவளினுள் இருந்த காதலின் உயிரூற்று வற்றிப் போயிற்று. அடிபட்ட நொண்டிப் பறவை போலானாள் அவள். எப்படியேனும் தன் காதலனுடனான காதல் வாழ்வின் கனவுகளுடனும், நினைவுகளுடனும் வாழ்ந்துவிடலாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவள் கணவன் அவளைத் தொடுகிற ஒவ்வொரு முறையும் அந்தக் கனவுகளும், நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக கருகுவதை உணர்ந்தாள். அத்துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவள் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள். அவள் மாண்டு போய்விட்டாள் என்பதை அறிந்த அவள் காதலனும் தன்னை மாய்த்துக்கொண்டான்.

மகளின் இறப்பால் தாய் உடைந்து போனாள். புத்தி பேதலித்து போன அவள், ‘நான் கொலைகாரி அல்ல... நான் கொலைகாரி அல்ல...’ என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்பச் சொன்னாள். தாயின் ஓலத்தைக் கேட்ட வனிதா தன் கணவனுடன் எங்கிருந்தோ பறந்து வந்தாள். சிறகுடைந்து படுக்கையில் விழுந்துவிட்ட தாயை ஆறுதல் படுத்த முற்பட்டாள். தாய் அவளிடம், ‘அவள் காதலன் நல்லவனல்ல. அதனால்தான் நான் அவளைத் தடுத்தேன். என் மகள் இறந்ததும் அவன் தன்னை மாய்த்துக்கொண்டது அவள் மேலுள்ள காதலால் அல்ல. மாறாக தான் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியினால்தான். இப்போது சொல் நான் மகளையே கொன்ற கொலைகாரியா என்று?.’ என கேட்டாள். அவள், ‘அம்மா தங்கை சாகவில்லை. அவள் வானுலகில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அதனால் இனி அவளைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டாம்.’ என்றாள். உடனே தாய், ‘ஆம் என் மகள் விண்ணுலகத்துக்கானவள். அதனால்தான் அங்கு அவள் பறந்து சென்றுவிட்டாள்.’ என்று கூறினாள். நாளடைவில் தாய் தூங்குவதையே நிறுத்திக் கொண்டாள். நடு நிசியில் எழுந்து தன் மகளைப் பற்றி அரற்ற ஆரம்பித்தாள். வனிதாவும் அவளது கணவனும் மருத்துவரை அழைத்து வந்து அவளுக்கு மருத்துவம் செய்தனர். மருந்துகளை உட்கொண்ட அவள் அயர்ந்து தூங்கிப் போனாள். மறுநாள் காலையில் எழுந்தவுடன் அவள், தான் விண்ணகத்திலிருக்கின்ற, பறவைகளும், தும்பிகளும் பறந்து திரியும் ஒரு பூந்தோட்டத்தில் சங்கீதா விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், தானும் அதனுள் போக முயற்சித்ததாகவும், ஆனால் பூந்தோட்டத்தைச் சுற்றியுள்ள முள் வேலி அவளை உள்ளே போகவிடாமல் தடுத்ததாகவும், என்ன வந்தாலும் தான் அந்த பூந்தோட்டத்தினுள் செல்வதற்கான முயற்சியை ஒரு போதும் கைவிடப்போவதில்லை என்றும் கூறினாள். ஒரு வழியாகத் தாயை தேற்றித் தன் மடியில் தூங்க வைத்தாள் வனிதா.

மகளின் மடியில் தூங்கிப் போன தாய் மீண்டும் கனவு கண்டாள். அதே விண்ணகத் தோட்டத்தில் சங்கீதா அவள் காதலனுடன் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்தாள். இவள் மனம் குதூகலமடைந்தது. தானும் உள்ளே சென்று அவர்களுடன் கலந்துவிட வேண்டும் என நினைத்து முள்வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட முயற்சித்தாள். அது அவளுக்கு மிகவும் சிரமமாயிருந்தது. அப்போது அவளைப் பார்த்த சங்கீதாவும் அவளது காதலனும் அன்புடன் ஓடிவந்து அவளை உள்ளே இழுத்துக்கொண்டனர்.

வனிதாவின் அழுகையை கேட்டு ஓடி வந்தான் அவளது கணவன். அவள் தன் தாயின் பிணத்தின் மீது விழுந்து அழுதுகொண்டிருந்தாள். அவளைத் தேற்ற முற்பட்டவன் தானும் உடைந்து அழ ஆரம்பித்தான். அக்கம் பக்கத்திலுள்ள மனித முதலைகள் அவர்கள் துக்கத்தில் பங்குக்கொள்ளும் பொருட்டு அங்கு குழும ஆரம்பித்தனர் கண்களில் கண்ணீருடன்.

======================================
புதிய பார்வை நவம்பர் 16-30 2007
இலங்கை இனப்பிரச்சினை ஒரு சோம்பேறியின் கண்ணோட்டத்தில்


ஜோஸ் அன்றாயின்இந்த கட்டுரைக்குள் போகு முன்பாக நீங்கள் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தேயாக வேண்டும். நான் மிகப்பெரும் சோம்பேறி. இந்தக் கட்டுரை எழுதுவதற்கு தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது மட்டுமல்ல, என்னுடைய சோம்பேறி வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கமும் கூடத்தான் காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக சோம்பேறிகள் கோழைகளாகவும் இருக்கிறார்கள் என் போல. நான் படிப்பதாலும், கேட்பதாலும், பார்ப்பதாலும் தெரிந்துகொண்ட சமூக அவலங்களை எதிர்ப்பது என்பதை என் மனதிற்குள்ளேயே முடித்துவிட்டு அவைகள் செயல் வடிவம் பெறாத வண்ணம் பார்த்துக்கொள்வது வழக்கம். அந்த வேலைகளைச் செய்யத்தான் செயல் வீரர்கள் வெளியுலகில் நிறைய பேர் இருக்கிறார்களே! என் இந்த மத்தியத்தர வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளும் எண்ணத்துடன் நான் அரசியல் பேசும் நண்பர்களை சந்திப்பதையும் கூட மிகவும் கவனமாக தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனாலும் என் விருப்பு வெருப்புகளுக்கு அடங்காமல் புற உலகில் நிகழும் விசயங்கள் குறிப்பாக ஈழத்தில் நடக்கும் இன அழிப்பு மற்றும் அதனால் இங்கு உருவாகும் எதிர்வினைகளை பாசிச கரம் கொண்டு அரசு அடக்க முயல்வதும் என் மந்தமான வாழ்க்கையை குலைப்பதாக உள்ளது. எனவே எனது இந்த வாழ்வை விட்டுகொடுக்க மனமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் என் எதிர் வினையை எழுத்து மூலம் பதிவு செய்யதே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்தேன். இல்லையென்றால் ஒருநாள் சோம்பேறிகளுக்கு உறுதுணையாக இருக்கும் புத்தகங்களையும் கூட எங்கள் கைகளிலிருந்து பிடுங்க இந்த பாசிச அரசியல்வாதிகள் தயங்கமாட்டார்கள்.

இதுவரை சூழலுக்கு வெளியேருந்துவிட்டு சூழல் உருவாக்கிய கட்டாயத்தால் எழுத வேண்டும் என முடிவு செய்த நான், ஈழத்தில் சிங்கள இனவெறியர்களால் உயிரிழந்தவர்கள், கையிழந்தவர்கள், காலிழந்தவர்கள், கண்ணிழந்தவர்கள், கற்பிழந்தவர்கள் பற்றி அன்றாடம் வந்துகொண்டிருக்கும் செய்திகள் மனதிரையில் என் கட்டுப்பாட்டையும் மீறி படங்களாக ஓடும் போது நிலைகுலைந்து போகிறேன். இந்த விபரங்களெல்லம் மிகவும் துயரளிப்பதால் கணினியிடமே அந்த கணக்கை ஒப்படைத்துவிட்டு. (மென் பொறியாளர்கள் இப்படி கை, கால், உயிர், கற்பு இழந்தவர்களை அன்றாட முறையில் தினமும் பட்டியலிடுவதற்கு ஏதுவாக ஒரு கணினி கட்டளை அமைப்பை உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் வந்துகொண்டிருக்கும் தகவல்களின் எண்ணிக்கை அந்த அளவு அதிகமாக இருக்கிறது. இது வேதனையான இந்த கொடுமைகளை வெறும் புள்ளி விபரங்களாக மாற்றிவிடும்.) வேட்டையர்களால் துரத்தப்பட்டு மேலும் ஓடமுடியாமல் ஓய்ந்து போன முயல் எவ்வாறு பொந்துக்குள் தன் தலையை புதைத்துவிட்டு கண்களை மூடிக்கொள்ளுமோ அவ்வாறே நானும் இந்த கொடூர நிகழ்வுகளை பற்றிய விபரங்களை என் மனத்திரையிலிருந்து அப்புறபடுத்த முயற்சித்தவண்ணம் ஸ்டெல்லா என்ற 13 வயது சிறுமியின் துயரக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு (நன்றி டெகல்கா) இந்த கட்டுரையை தொடங்குகிறேன். இனவெறிபிடித்த இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலால் ஒரு காலை இழந்த அவள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தன் உயிரை பாதுகாத்து கொள்ளுவதற்காக கவைக்கோலுடன் ஓடிக்கொண்டே இருக்கிறாள். இல்லையென்றால் எப்பொழுதோ அவளும் பல்வேறு கனவுகளோடு இறந்து போன பல்லாயிர கணக்கான ஈழ தமிழர்களில் ஒருவளாகியிருப்பாள். போர் விமானக்களின் சப்தத்தையோ, பீரங்கி வெடி அல்லது துப்பாக்கி எழுப்பும் சப்தத்தையோ கேட்கும் ஒவ்வொறு முறையும் இவள் நடுநடுங்கி போகிறாள். ஓட ஆரம்பிக்கிறாள். பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொள்கிறாள். அவள் கண்கள் முன்னாலேயே உடல்கள் சின்னாப்பின்னமாக்கப்படுவதை காண்கிறாள். அவள் இன்னும் வேகமாக ஓட வேண்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ள.

இந்த துயரச் சம்பவங்களையெல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் கவனத்துக்கு கொண்டுவருவதற்கு பயங்கர பிரயத்தனங்களை தமிழகத்து ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கின்றனர். சாகும் போதும் கூட நரியின் கண்கள் கோழிக்கூட்டின் பக்கம்தான் இருக்குமாம். இவர்களால் தங்கள் பார்வையை நார்க்காலிகளின் பக்கம் இருந்து அகற்ற முடியவில்லை. இந்திய ஆட்சியாளர்களோ திருட்டுப் பூனையைப் போல கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் அப்படிதான் செய்வார்கள். ஏனென்றால் இந்த இனப்படுகொலையை இலங்கை இனவெறி அரசுடன் நின்று நடத்துவதே இந்திய அரசுதான்.

இந்திய அளவிலோ விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் அன்றாடம் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அவல குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் மக்களுக்காக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றோ, அல்லது இந்தியா இந்த போரில் சிங்கள இனவெறி அரசுடன் சேர்ந்து போரிட கூடாது என்றோ பேச்சுக்கேனும் வற்புறுத்தவில்லை. பொதுவுடமை கட்சியின் 22 காரட் தங்கத்திற்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு நடத்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என பேசமுடிகிறது, ஆனால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்காகா இந்திய அரசு போரை நிறுத்த வேண்டும் என கோர முடியவில்லை. இவருக்கு தூரப் பார்வை மிகவும் அதிகமாம். (நன்றாக காரட் சாப்பிட்டால் கண்ணில் உள்ள இந்த குறைபாடு நீங்கலாம்.) தன் கணவனுக்காக தன்னுடைய நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்கொள்ளும் ப்ரிந்தாவுக்கோ அண்டார்டிக்காவில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எல்லாம் பேசமுடிகிறது. ஆனால் பக்கத்திலேயே இலங்கை ராணுவத்தினரால் மானபங்கம் படுத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, பிறப்புறுப்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு பூவும் பொட்டும் இழந்து நிற்கும் ஈழத்துப் பெண்களின் துயரைப் பற்றி பேசமுடியவில்லை. ‘பலா பழத்திற்கேற்ற கூடை.’

கோடநாடு சன்னியாசினியோ தன்னை சுற்றி கறுப்பு பூனைக்குட்டிகளை பகட்டுக்காக வைத்துக்கொள்வதற்காக ‘புலி வருது, புலி வருது’ என கொக்கரித்து ஈழத்தமிழர்களின் சிலுவை பாரத்தை அதிகமாக்கியுள்ளார். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததற்காக ஜெயிலுக்குப் போய் பின்னாளில் குற்றவாளியென்று நிருபிக்கப்பட்ட காரணத்தால் நீதிமன்றத்தினாலேயே முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட இந்த சன்நியாசினிக்கு பல நூறு காலணிகளாம். இந்த சன்நியாசினியால் எப்படி ஒற்றைக் காலில் தன் உயிரை காப்பாத்திக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டெல்லாவின் துயரத்தை உணரமுடியம்? ஆனால் ஒன்று இந்த சன்நியாசினி ஓடுவதற்காக பிரத்யேக காலணிகளை இப்போதே வாங்கி வைத்துகொள்வது நல்லது. ஏனென்றால் தியாகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களும் இளைஞர்களும் இந்த ஒற்றை ரூபாய் சன்நியாசினியை வெளியே துரத்த வேண்டுமென கோசங்களை தொடர்ந்து எழுப்பிய வண்ணமிருந்தனர். இது வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு ஆருடம் கூறியது போல் இருந்தது.

கோபாலபுரத்துக்காரர் முதுகுவலி தாளமுடியாமல் மருத்துவமனையில் படுத்திருக்கிறார். உடம்பு நோகு உள்ள இவருக்காவது ஸ்டெல்லாவின் வேதனை புரியும் என எதிர்பார்த்தோம்தான். ஆனால் மருத்துவமனையில் படுத்திருக்கும் இவருடைய கரங்களானது உடன்பிறப்புகளையும், தொப்புள்கொடி உறவுகளையும் தாண்டி கோட்டையில் இருக்கும் நாற்காலியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன. ‘அண்ணனும் சாகமாட்டான் திண்ணையும் ஓயாது.’ நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதனூடாக இன்னொன்றையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். ஈழமே அழிந்தாலும் ‘அண்ணலும் அண்ணல் குடும்பமும் விடத்தயாரில்லை இந்த நாற்காலிகளை.’ என்று. ஆனால் இங்குள்ள உடன் பிறப்புகள் தொப்புள் கொடி உறவுகளுக்கு துரோகம் இழைத்தவர்களிடமிருந்து நாற்காலிகளை பிடுங்கிவிடுவார்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். மத்திய அரசுதான் போரை நடத்துகிறது. அது உலகத்துக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும். அந்த அரசின் ஈழக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் நீங்கள். அப்புறம் ஏன் இந்த பேரணி நாடகம்? யாருக்கு எதிராக இவையெல்லாம்? ஒருவேளை, ‘கடமையை செய்து கொண்டிரு, பலனை எதிர்பார்க்காதே’ என்பதன் முழுபொருள் இதுதானோ? முதுகு தண்டுவட அறுவை சிகிட்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். நன்றாக நிமிர்ந்து எழுந்து நிற்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

மருத்துவரோ ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கத் தவறிவிட்டதென்று மாநில அரசின் தவறை சுட்டிக்காட்டுகிறார். சரியான விசயம். மிகவும் சரியான விசயம். ஆனால் தன் புதல்வன் டெல்லியில் நாற்காலியின் மீதேறி நர்த்தனங்கள் ஆடுவதை ஆனந்தக் கண்ணீரோடு பார்க்கும் இவரால், கண்ணீர் விடும் ஈழத்தமிழருக்காக நாற்காலியிலிருந்து இறங்கும்படித் தன் அருமை புதல்வனை கேட்க முடியவில்லை. முதலில் முன்னுதாரணமானால் நீங்கள் கூறுவதை கோபாலபுரத்துக்காரரும் கேட்கக்கூடும். ஏற்கனவே ஈழத்தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்தான் அவர். அதனால் அவருடைய கைகளை அறுவை சிகிட்சை செய்துதான் நாற்காலியிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற நிலையில்லை.

வெள்ளையனுக்கு எதிரான உணர்வை மழுங்கடிப்பதற்காக வெள்ளை அதிகார வர்க்கத்தால் எடுப்புக் கட்சியாக உருவாக்கப்பட்டதுதான் காங்கிரஸ் என்றாலும் சுதந்திர போராட்ட காலத்தில் சில சமயங்களில் முக்கிய பங்கு வகித்ததுதான். என்றாலும் பெரும்பாலான சமயங்களில் போராடும் மக்களை அது முதுகில் குத்தியிருக்கிறது.

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ஈழ வீதிகளிலே வெள்ளை நிற வேன்கள் உலாவுகிறதாம். அவைகளில் காணாமல் போய் சித்திரவதைக்குள்ளாகி இறக்கும் தமிழர்களின் ஈன குரல் ஈழமெங்கும் நிறைந்திருக்கிறதாம். அந்த சித்திரவதை வாகனக்களை ஓட்டுபவர்கள் பிட்சா மட்டுமே சாப்பிடுகின்றனராம். மேலும் அந்த சித்திரவதை நாயகர்கள் முதலில் ஒரு வெள்ளை சீமாட்டியின் திரு உருவ படத்தினை வழிபட்டபின்தான் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்களாம். ஏன் செய்யமாட்டார்கள்? இன ஒழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு அடிப்படை மருந்தான பாரசெட்டமோல் மாத்திரைகள் கிடைக்காத போது, இனபடுகொலையை நடத்தும் சிங்கள இனவெறியர்களுக்கு பெத்தடின் மருந்தினை தேவைக்கும் அதிகமாக அனுப்பி வைத்திருக்கிறார் இந்த வெள்ளை சீமாட்டி. என்னே கருணை உள்ளம்? உம்மை ‘அன்னை’ என்று உங்கள் கட்சிக்காரர்கள் ஏன் கூப்பிடுகிறார்கள் என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது.ஓ வெள்ளை சீமாட்டியே நீங்கள் இந்துத்துவா சக்திகளை தேர்தலில் தோற்கடிப்பதற்கு காரணமாயிருந்ததை பார்த்து மகிழ்ந்தவர்கள் நாங்கள். நீங்கள் பிரதமரானால் மொட்டையடிப்பேன் என்று சுஸ்மா கூறியபோது அவர் மொட்டையடித்தால் எப்படியிருப்பார் என்ற கற்பனையை கட்டவிழ்த்துவிட்டு மகிழ்ந்தோம். இன்றோ நீங்கள் இரத்த வெறி பிடித்த சூனியக்காரியைப் போல ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதற்கு காரணமாயிருக்கிறீர்கள். நீங்கள் விதவையானதற்காக தமிழ்ப் பெண்களெல்லாம் விதவையாக வேண்டுமா? மானபங்கப் படுத்தபட வேண்டுமா? கற்பழிக்கப்பட வேண்டுமா? ஸ்டெல்லாவைப் போல் தொடர்ந்து குண்டுகளால் துரத்தப்பட வேண்டுமா? உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தினாலும் நீங்கள் ஏன் போரை நிறுத்த தயாரில்லை? இரத்த சுவையறிந்த நாய் கடிப்பதை நிறுத்தாது என்பார்கள். அது உண்மைதான் போலும். ஓ ரோமாபுரி சீமாட்டியே ‘வெனிஸ் நகரத்து வணிகன்’ நாடகத்தில் வரும் ஷைலாக் கேட்டது போல் உங்களுக்கு தமிழர்களின் தசைத் தேவையா? சொல்லுங்கள்; உங்களுக்கு தமிழர்களின் தசை எவ்வளவு எடை வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் எங்கள் உடல் தசையின் ஒரு பகுதியை உங்களுக்குத்துத் தருகிறோம். என்னால் சிறந்த என் தொடைக்கறியைக் கூடத் தர முடியும். தெருவிற்கு வந்து போராடாத சோம்பேறியாகிய என்னால் இதை மிகவும் சுலபமாகச் செய்யமுடியும். ஆனால் ஈழத்தமிழர்களை விட்டுவிடுங்கள்.

கெஞ்சினோம். அழுதோம் புலம்பினோம். விட்டுவிடவில்லை அவர்களை இந்த ரத்த காட்டேரிகள்.

அறுவை சிகிட்சை செய்தால் கூட கோபாலத்துகாரரின் கையை நாற்காலியிலிருந்து பிரிக்க முடியாது என்று உளவு துறை தெரிவிக்க, ரோமாபுரி சீமாட்டி தன் கோரத் தாண்டவத்தை மேலும் கட்டவிழ்த்துவிட்டாள். தேர்தலுக்கு முன்னால் பாடை கட்டவேண்டுமென்ற முடிவாம். எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. மனித உரிமைக்கான சர்வதேச விதிகள் எல்லாம் ஓநாய்களால் மீறப்பட்டு கதியில்லா ஆடுகள் போல் ஈழ மக்கள் வேட்டையாடப்பட்டார்கள்.

கட்டுரையை முடிக்கமுடியவில்லை. சோம்பல் மட்டும் காரணம் இல்லை. ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆனால் ஒரே நாளிலேயே இருபதாயிரம் பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள். இதை வெறும் புள்ளி விபரத்திலிருந்து காட்சியாக மாற்றி மனத்திரையில் ஓடவிட்டால் தூங்கமுடியவில்லை. எழுத முடியவில்லை. எல்லாம் முடிந்துபோய்விட்டது.

இப்போது புலிகள் போய்விட்டன. போனவுடன் ஓநாய்களும் குள்ளநரிகளும் தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. இனப் படுகொலையை மறைக்க புலி கடிக்கும். அன்பு செய்யாது, காதலிக்காது என்று பிரச்சாரங்கள். வரதன் என்ற பெருமாள் வரம்கொடுக்க ஜெர்மனியில் கோயபல்ஸின் நாசி பிரச்சார முறையை முறையாய் படித்த சுசீந்திரன் சிங்கள இனவெறி அரசின் ரத்த பணத்துடன் கூவுபவர்களை (கீற்று இணையதளத்தில் நண்பர்கள் மிக அழகாக நையாண்டி செய்திருக்கிறார்கள்.) பிடிப்பதற்காக உலகமெல்லாம் உலாவுகிறான். சில எழுதிகொண்டிருந்த எழுத்தாளர்களும், பாடிக்கொண்டிருந்த கவிஞர்களும் கூவுபவர்களாக மாறிவிட்டார்கள். சோபையிழந்த சக்தி, சுகன், யவன் அவன், இவன், எவன் எவனோ என்று பட்டியல் நீழுகிறது. இன்னும் நீழுமாம். பேசிக்கொள்கிறார்கள். பணம் பத்தும் செய்யுமாமே! தமிழகத்து தமிழர்களும் இனி சிங்கள தேசிய கீதத்தை பாடவேண்டும் என்று விரும்பும் அவன் கவிஞன் ஒருவனிடம் சொன்னானாம் கூவினால் காசு என்று. மறுத்துவிட்டானாம். கொஞ்சம் சந்தோசமா இருக்கு இல்லையா? யாரு கண்ணு போட்டாங்களோ. அவன் இப்போது சுற்றி சுற்றி கூவிக் கொண்டிருக்கிறான். காசு வார்த்தைகளால் இவர்கள் கருத்து களத்தையே அசுத்தபடுத்திவிடுவார்கள் போலிருக்கிறது. பயமாக இருக்கிறது.

இன்னுமொரு விசயம். இந்த பிரச்சார யூதாஸ்கள் இனவெறியாளர்களிடம் சன்மானம் குறித்து பேசும் போது விழும் பிணங்களின் எடைக்கு எடை காசு வேண்டுமென்றார்களாம். மறுத்துவிட்டார்களாம் அவர்கள். அப்படியெனில் தலைக்கு இவ்வளவென்றாவது கொடுக்குமாறு கெஞ்சினார்களாம். அதுக்கும் அவர்கள் ஒத்துவராமல் போக கூவுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் காசு என்று சமரசம் செய்துகொண்டார்களாம். இன்னும் நன்றாக கூவுவர்கள். பிணம் தின்னிகள்.

இவர்களுக்கெல்லாம் வரலாறு முன்னோக்கிதான் நகரும் என்று தெரியவில்லை. காலம் வரும். அப்போது பரிணாம வளர்ச்சி விதிக்கு இணங்க இன்னும் வீரியத்துடன் புலிகள் வரும். ஓநாய்களை வேட்டையாடும். கிழக்கு டிமோர் போல ஈழம் மலரும். அப்போது சோரம் போன எழுத்தாள நரிகள் எல்லாம் கூவுவதை விட்டுவிட்டு ஊளையிட்டுகொண்டே வெளியேறும்.

சோம்பல் முறித்து காத்திருக்கிறேன் அந்த நாளுக்காக.

=================================================