Tuesday, September 22, 2009

இலங்கை இனப்பிரச்சினை ஒரு சோம்பேறியின் கண்ணோட்டத்தில்


ஜோஸ் அன்றாயின்



இந்த கட்டுரைக்குள் போகு முன்பாக நீங்கள் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தேயாக வேண்டும். நான் மிகப்பெரும் சோம்பேறி. இந்தக் கட்டுரை எழுதுவதற்கு தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது மட்டுமல்ல, என்னுடைய சோம்பேறி வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கமும் கூடத்தான் காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக சோம்பேறிகள் கோழைகளாகவும் இருக்கிறார்கள் என் போல. நான் படிப்பதாலும், கேட்பதாலும், பார்ப்பதாலும் தெரிந்துகொண்ட சமூக அவலங்களை எதிர்ப்பது என்பதை என் மனதிற்குள்ளேயே முடித்துவிட்டு அவைகள் செயல் வடிவம் பெறாத வண்ணம் பார்த்துக்கொள்வது வழக்கம். அந்த வேலைகளைச் செய்யத்தான் செயல் வீரர்கள் வெளியுலகில் நிறைய பேர் இருக்கிறார்களே! என் இந்த மத்தியத்தர வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளும் எண்ணத்துடன் நான் அரசியல் பேசும் நண்பர்களை சந்திப்பதையும் கூட மிகவும் கவனமாக தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனாலும் என் விருப்பு வெருப்புகளுக்கு அடங்காமல் புற உலகில் நிகழும் விசயங்கள் குறிப்பாக ஈழத்தில் நடக்கும் இன அழிப்பு மற்றும் அதனால் இங்கு உருவாகும் எதிர்வினைகளை பாசிச கரம் கொண்டு அரசு அடக்க முயல்வதும் என் மந்தமான வாழ்க்கையை குலைப்பதாக உள்ளது. எனவே எனது இந்த வாழ்வை விட்டுகொடுக்க மனமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் என் எதிர் வினையை எழுத்து மூலம் பதிவு செய்யதே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்தேன். இல்லையென்றால் ஒருநாள் சோம்பேறிகளுக்கு உறுதுணையாக இருக்கும் புத்தகங்களையும் கூட எங்கள் கைகளிலிருந்து பிடுங்க இந்த பாசிச அரசியல்வாதிகள் தயங்கமாட்டார்கள்.

இதுவரை சூழலுக்கு வெளியேருந்துவிட்டு சூழல் உருவாக்கிய கட்டாயத்தால் எழுத வேண்டும் என முடிவு செய்த நான், ஈழத்தில் சிங்கள இனவெறியர்களால் உயிரிழந்தவர்கள், கையிழந்தவர்கள், காலிழந்தவர்கள், கண்ணிழந்தவர்கள், கற்பிழந்தவர்கள் பற்றி அன்றாடம் வந்துகொண்டிருக்கும் செய்திகள் மனதிரையில் என் கட்டுப்பாட்டையும் மீறி படங்களாக ஓடும் போது நிலைகுலைந்து போகிறேன். இந்த விபரங்களெல்லம் மிகவும் துயரளிப்பதால் கணினியிடமே அந்த கணக்கை ஒப்படைத்துவிட்டு. (மென் பொறியாளர்கள் இப்படி கை, கால், உயிர், கற்பு இழந்தவர்களை அன்றாட முறையில் தினமும் பட்டியலிடுவதற்கு ஏதுவாக ஒரு கணினி கட்டளை அமைப்பை உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் வந்துகொண்டிருக்கும் தகவல்களின் எண்ணிக்கை அந்த அளவு அதிகமாக இருக்கிறது. இது வேதனையான இந்த கொடுமைகளை வெறும் புள்ளி விபரங்களாக மாற்றிவிடும்.) வேட்டையர்களால் துரத்தப்பட்டு மேலும் ஓடமுடியாமல் ஓய்ந்து போன முயல் எவ்வாறு பொந்துக்குள் தன் தலையை புதைத்துவிட்டு கண்களை மூடிக்கொள்ளுமோ அவ்வாறே நானும் இந்த கொடூர நிகழ்வுகளை பற்றிய விபரங்களை என் மனத்திரையிலிருந்து அப்புறபடுத்த முயற்சித்தவண்ணம் ஸ்டெல்லா என்ற 13 வயது சிறுமியின் துயரக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு (நன்றி டெகல்கா) இந்த கட்டுரையை தொடங்குகிறேன். இனவெறிபிடித்த இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலால் ஒரு காலை இழந்த அவள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தன் உயிரை பாதுகாத்து கொள்ளுவதற்காக கவைக்கோலுடன் ஓடிக்கொண்டே இருக்கிறாள். இல்லையென்றால் எப்பொழுதோ அவளும் பல்வேறு கனவுகளோடு இறந்து போன பல்லாயிர கணக்கான ஈழ தமிழர்களில் ஒருவளாகியிருப்பாள். போர் விமானக்களின் சப்தத்தையோ, பீரங்கி வெடி அல்லது துப்பாக்கி எழுப்பும் சப்தத்தையோ கேட்கும் ஒவ்வொறு முறையும் இவள் நடுநடுங்கி போகிறாள். ஓட ஆரம்பிக்கிறாள். பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொள்கிறாள். அவள் கண்கள் முன்னாலேயே உடல்கள் சின்னாப்பின்னமாக்கப்படுவதை காண்கிறாள். அவள் இன்னும் வேகமாக ஓட வேண்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ள.

இந்த துயரச் சம்பவங்களையெல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் கவனத்துக்கு கொண்டுவருவதற்கு பயங்கர பிரயத்தனங்களை தமிழகத்து ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கின்றனர். சாகும் போதும் கூட நரியின் கண்கள் கோழிக்கூட்டின் பக்கம்தான் இருக்குமாம். இவர்களால் தங்கள் பார்வையை நார்க்காலிகளின் பக்கம் இருந்து அகற்ற முடியவில்லை. இந்திய ஆட்சியாளர்களோ திருட்டுப் பூனையைப் போல கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் அப்படிதான் செய்வார்கள். ஏனென்றால் இந்த இனப்படுகொலையை இலங்கை இனவெறி அரசுடன் நின்று நடத்துவதே இந்திய அரசுதான்.

இந்திய அளவிலோ விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் அன்றாடம் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அவல குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் மக்களுக்காக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றோ, அல்லது இந்தியா இந்த போரில் சிங்கள இனவெறி அரசுடன் சேர்ந்து போரிட கூடாது என்றோ பேச்சுக்கேனும் வற்புறுத்தவில்லை. பொதுவுடமை கட்சியின் 22 காரட் தங்கத்திற்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு நடத்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என பேசமுடிகிறது, ஆனால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்காகா இந்திய அரசு போரை நிறுத்த வேண்டும் என கோர முடியவில்லை. இவருக்கு தூரப் பார்வை மிகவும் அதிகமாம். (நன்றாக காரட் சாப்பிட்டால் கண்ணில் உள்ள இந்த குறைபாடு நீங்கலாம்.) தன் கணவனுக்காக தன்னுடைய நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்கொள்ளும் ப்ரிந்தாவுக்கோ அண்டார்டிக்காவில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எல்லாம் பேசமுடிகிறது. ஆனால் பக்கத்திலேயே இலங்கை ராணுவத்தினரால் மானபங்கம் படுத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, பிறப்புறுப்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு பூவும் பொட்டும் இழந்து நிற்கும் ஈழத்துப் பெண்களின் துயரைப் பற்றி பேசமுடியவில்லை. ‘பலா பழத்திற்கேற்ற கூடை.’

கோடநாடு சன்னியாசினியோ தன்னை சுற்றி கறுப்பு பூனைக்குட்டிகளை பகட்டுக்காக வைத்துக்கொள்வதற்காக ‘புலி வருது, புலி வருது’ என கொக்கரித்து ஈழத்தமிழர்களின் சிலுவை பாரத்தை அதிகமாக்கியுள்ளார். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததற்காக ஜெயிலுக்குப் போய் பின்னாளில் குற்றவாளியென்று நிருபிக்கப்பட்ட காரணத்தால் நீதிமன்றத்தினாலேயே முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட இந்த சன்நியாசினிக்கு பல நூறு காலணிகளாம். இந்த சன்நியாசினியால் எப்படி ஒற்றைக் காலில் தன் உயிரை காப்பாத்திக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டெல்லாவின் துயரத்தை உணரமுடியம்? ஆனால் ஒன்று இந்த சன்நியாசினி ஓடுவதற்காக பிரத்யேக காலணிகளை இப்போதே வாங்கி வைத்துகொள்வது நல்லது. ஏனென்றால் தியாகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் மாணவர்களும் இளைஞர்களும் இந்த ஒற்றை ரூபாய் சன்நியாசினியை வெளியே துரத்த வேண்டுமென கோசங்களை தொடர்ந்து எழுப்பிய வண்ணமிருந்தனர். இது வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு ஆருடம் கூறியது போல் இருந்தது.

கோபாலபுரத்துக்காரர் முதுகுவலி தாளமுடியாமல் மருத்துவமனையில் படுத்திருக்கிறார். உடம்பு நோகு உள்ள இவருக்காவது ஸ்டெல்லாவின் வேதனை புரியும் என எதிர்பார்த்தோம்தான். ஆனால் மருத்துவமனையில் படுத்திருக்கும் இவருடைய கரங்களானது உடன்பிறப்புகளையும், தொப்புள்கொடி உறவுகளையும் தாண்டி கோட்டையில் இருக்கும் நாற்காலியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன. ‘அண்ணனும் சாகமாட்டான் திண்ணையும் ஓயாது.’ நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதனூடாக இன்னொன்றையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். ஈழமே அழிந்தாலும் ‘அண்ணலும் அண்ணல் குடும்பமும் விடத்தயாரில்லை இந்த நாற்காலிகளை.’ என்று. ஆனால் இங்குள்ள உடன் பிறப்புகள் தொப்புள் கொடி உறவுகளுக்கு துரோகம் இழைத்தவர்களிடமிருந்து நாற்காலிகளை பிடுங்கிவிடுவார்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். மத்திய அரசுதான் போரை நடத்துகிறது. அது உலகத்துக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும். அந்த அரசின் ஈழக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் நீங்கள். அப்புறம் ஏன் இந்த பேரணி நாடகம்? யாருக்கு எதிராக இவையெல்லாம்? ஒருவேளை, ‘கடமையை செய்து கொண்டிரு, பலனை எதிர்பார்க்காதே’ என்பதன் முழுபொருள் இதுதானோ? முதுகு தண்டுவட அறுவை சிகிட்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். நன்றாக நிமிர்ந்து எழுந்து நிற்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

மருத்துவரோ ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கத் தவறிவிட்டதென்று மாநில அரசின் தவறை சுட்டிக்காட்டுகிறார். சரியான விசயம். மிகவும் சரியான விசயம். ஆனால் தன் புதல்வன் டெல்லியில் நாற்காலியின் மீதேறி நர்த்தனங்கள் ஆடுவதை ஆனந்தக் கண்ணீரோடு பார்க்கும் இவரால், கண்ணீர் விடும் ஈழத்தமிழருக்காக நாற்காலியிலிருந்து இறங்கும்படித் தன் அருமை புதல்வனை கேட்க முடியவில்லை. முதலில் முன்னுதாரணமானால் நீங்கள் கூறுவதை கோபாலபுரத்துக்காரரும் கேட்கக்கூடும். ஏற்கனவே ஈழத்தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்தான் அவர். அதனால் அவருடைய கைகளை அறுவை சிகிட்சை செய்துதான் நாற்காலியிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற நிலையில்லை.

வெள்ளையனுக்கு எதிரான உணர்வை மழுங்கடிப்பதற்காக வெள்ளை அதிகார வர்க்கத்தால் எடுப்புக் கட்சியாக உருவாக்கப்பட்டதுதான் காங்கிரஸ் என்றாலும் சுதந்திர போராட்ட காலத்தில் சில சமயங்களில் முக்கிய பங்கு வகித்ததுதான். என்றாலும் பெரும்பாலான சமயங்களில் போராடும் மக்களை அது முதுகில் குத்தியிருக்கிறது.

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ஈழ வீதிகளிலே வெள்ளை நிற வேன்கள் உலாவுகிறதாம். அவைகளில் காணாமல் போய் சித்திரவதைக்குள்ளாகி இறக்கும் தமிழர்களின் ஈன குரல் ஈழமெங்கும் நிறைந்திருக்கிறதாம். அந்த சித்திரவதை வாகனக்களை ஓட்டுபவர்கள் பிட்சா மட்டுமே சாப்பிடுகின்றனராம். மேலும் அந்த சித்திரவதை நாயகர்கள் முதலில் ஒரு வெள்ளை சீமாட்டியின் திரு உருவ படத்தினை வழிபட்டபின்தான் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்களாம். ஏன் செய்யமாட்டார்கள்? இன ஒழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு அடிப்படை மருந்தான பாரசெட்டமோல் மாத்திரைகள் கிடைக்காத போது, இனபடுகொலையை நடத்தும் சிங்கள இனவெறியர்களுக்கு பெத்தடின் மருந்தினை தேவைக்கும் அதிகமாக அனுப்பி வைத்திருக்கிறார் இந்த வெள்ளை சீமாட்டி. என்னே கருணை உள்ளம்? உம்மை ‘அன்னை’ என்று உங்கள் கட்சிக்காரர்கள் ஏன் கூப்பிடுகிறார்கள் என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது.ஓ வெள்ளை சீமாட்டியே நீங்கள் இந்துத்துவா சக்திகளை தேர்தலில் தோற்கடிப்பதற்கு காரணமாயிருந்ததை பார்த்து மகிழ்ந்தவர்கள் நாங்கள். நீங்கள் பிரதமரானால் மொட்டையடிப்பேன் என்று சுஸ்மா கூறியபோது அவர் மொட்டையடித்தால் எப்படியிருப்பார் என்ற கற்பனையை கட்டவிழ்த்துவிட்டு மகிழ்ந்தோம். இன்றோ நீங்கள் இரத்த வெறி பிடித்த சூனியக்காரியைப் போல ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதற்கு காரணமாயிருக்கிறீர்கள். நீங்கள் விதவையானதற்காக தமிழ்ப் பெண்களெல்லாம் விதவையாக வேண்டுமா? மானபங்கப் படுத்தபட வேண்டுமா? கற்பழிக்கப்பட வேண்டுமா? ஸ்டெல்லாவைப் போல் தொடர்ந்து குண்டுகளால் துரத்தப்பட வேண்டுமா? உலக நாடுகள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தினாலும் நீங்கள் ஏன் போரை நிறுத்த தயாரில்லை? இரத்த சுவையறிந்த நாய் கடிப்பதை நிறுத்தாது என்பார்கள். அது உண்மைதான் போலும். ஓ ரோமாபுரி சீமாட்டியே ‘வெனிஸ் நகரத்து வணிகன்’ நாடகத்தில் வரும் ஷைலாக் கேட்டது போல் உங்களுக்கு தமிழர்களின் தசைத் தேவையா? சொல்லுங்கள்; உங்களுக்கு தமிழர்களின் தசை எவ்வளவு எடை வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் எங்கள் உடல் தசையின் ஒரு பகுதியை உங்களுக்குத்துத் தருகிறோம். என்னால் சிறந்த என் தொடைக்கறியைக் கூடத் தர முடியும். தெருவிற்கு வந்து போராடாத சோம்பேறியாகிய என்னால் இதை மிகவும் சுலபமாகச் செய்யமுடியும். ஆனால் ஈழத்தமிழர்களை விட்டுவிடுங்கள்.

கெஞ்சினோம். அழுதோம் புலம்பினோம். விட்டுவிடவில்லை அவர்களை இந்த ரத்த காட்டேரிகள்.

அறுவை சிகிட்சை செய்தால் கூட கோபாலத்துகாரரின் கையை நாற்காலியிலிருந்து பிரிக்க முடியாது என்று உளவு துறை தெரிவிக்க, ரோமாபுரி சீமாட்டி தன் கோரத் தாண்டவத்தை மேலும் கட்டவிழ்த்துவிட்டாள். தேர்தலுக்கு முன்னால் பாடை கட்டவேண்டுமென்ற முடிவாம். எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. மனித உரிமைக்கான சர்வதேச விதிகள் எல்லாம் ஓநாய்களால் மீறப்பட்டு கதியில்லா ஆடுகள் போல் ஈழ மக்கள் வேட்டையாடப்பட்டார்கள்.

கட்டுரையை முடிக்கமுடியவில்லை. சோம்பல் மட்டும் காரணம் இல்லை. ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதிவிட்டேன். ஆனால் ஒரே நாளிலேயே இருபதாயிரம் பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள். இதை வெறும் புள்ளி விபரத்திலிருந்து காட்சியாக மாற்றி மனத்திரையில் ஓடவிட்டால் தூங்கமுடியவில்லை. எழுத முடியவில்லை. எல்லாம் முடிந்துபோய்விட்டது.

இப்போது புலிகள் போய்விட்டன. போனவுடன் ஓநாய்களும் குள்ளநரிகளும் தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. இனப் படுகொலையை மறைக்க புலி கடிக்கும். அன்பு செய்யாது, காதலிக்காது என்று பிரச்சாரங்கள். வரதன் என்ற பெருமாள் வரம்கொடுக்க ஜெர்மனியில் கோயபல்ஸின் நாசி பிரச்சார முறையை முறையாய் படித்த சுசீந்திரன் சிங்கள இனவெறி அரசின் ரத்த பணத்துடன் கூவுபவர்களை (கீற்று இணையதளத்தில் நண்பர்கள் மிக அழகாக நையாண்டி செய்திருக்கிறார்கள்.) பிடிப்பதற்காக உலகமெல்லாம் உலாவுகிறான். சில எழுதிகொண்டிருந்த எழுத்தாளர்களும், பாடிக்கொண்டிருந்த கவிஞர்களும் கூவுபவர்களாக மாறிவிட்டார்கள். சோபையிழந்த சக்தி, சுகன், யவன் அவன், இவன், எவன் எவனோ என்று பட்டியல் நீழுகிறது. இன்னும் நீழுமாம். பேசிக்கொள்கிறார்கள். பணம் பத்தும் செய்யுமாமே! தமிழகத்து தமிழர்களும் இனி சிங்கள தேசிய கீதத்தை பாடவேண்டும் என்று விரும்பும் அவன் கவிஞன் ஒருவனிடம் சொன்னானாம் கூவினால் காசு என்று. மறுத்துவிட்டானாம். கொஞ்சம் சந்தோசமா இருக்கு இல்லையா? யாரு கண்ணு போட்டாங்களோ. அவன் இப்போது சுற்றி சுற்றி கூவிக் கொண்டிருக்கிறான். காசு வார்த்தைகளால் இவர்கள் கருத்து களத்தையே அசுத்தபடுத்திவிடுவார்கள் போலிருக்கிறது. பயமாக இருக்கிறது.

இன்னுமொரு விசயம். இந்த பிரச்சார யூதாஸ்கள் இனவெறியாளர்களிடம் சன்மானம் குறித்து பேசும் போது விழும் பிணங்களின் எடைக்கு எடை காசு வேண்டுமென்றார்களாம். மறுத்துவிட்டார்களாம் அவர்கள். அப்படியெனில் தலைக்கு இவ்வளவென்றாவது கொடுக்குமாறு கெஞ்சினார்களாம். அதுக்கும் அவர்கள் ஒத்துவராமல் போக கூவுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் காசு என்று சமரசம் செய்துகொண்டார்களாம். இன்னும் நன்றாக கூவுவர்கள். பிணம் தின்னிகள்.

இவர்களுக்கெல்லாம் வரலாறு முன்னோக்கிதான் நகரும் என்று தெரியவில்லை. காலம் வரும். அப்போது பரிணாம வளர்ச்சி விதிக்கு இணங்க இன்னும் வீரியத்துடன் புலிகள் வரும். ஓநாய்களை வேட்டையாடும். கிழக்கு டிமோர் போல ஈழம் மலரும். அப்போது சோரம் போன எழுத்தாள நரிகள் எல்லாம் கூவுவதை விட்டுவிட்டு ஊளையிட்டுகொண்டே வெளியேறும்.

சோம்பல் முறித்து காத்திருக்கிறேன் அந்த நாளுக்காக.

=================================================




1 comment:

Unknown said...

ஜோஸ் சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் சொல்ல விழையயவில்லை.. நானும் உணர்வுகளால் பாதிக்கப்பட்டவன். என்னை உங்களுள் காண்கிறேன். நன்றி.