Friday, December 5, 2008

தொப்பை

ஜோஸ் அன்றாயின்உங்களுக்கு நான் சொல்ல போகிற விசயங்கள் பிடிக்காமல் போகலாம். இருந்தாலும் பரவாயில்லை. அது உங்களுடைய பிரச்சினை. சரி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன். நான் நல்ல வசீகரமானவன். அதே நேரம் அந்த வசீகரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு நான் பெரிய பிரயத்தனங்கள் எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை ஒரு நாள் உணர்ந்தேன். ஒரு நாள் அலுவலகத்திற்கு செல்வதற்காக பேண்டும், சட்டையும் போட்டுக்கொண்டு பெல்டை கட்டினேன். அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக குனிந்து பார்த்தேன். என்னால் நான் கட்டியிருந்த பெல்டை பார்க்க முடியவில்லை. நான் பார்க்க முடியாதவாறு என்னுடைய தொப்பை நான் கட்டியிருந்த பெல்டை மறைத்தது. அது என்னை எந்த அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

என்னுடைய கல்லூரி நாட்களில் மாணவர் அரசியலில் பங்குக்கொண்டு நான் பேசிய மேடை பேச்சுக்கள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தன. அப்போது நான், நாட்டில் சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டுமென்றால் முதலில் தொப்பைகளை ஒழிக்க வேண்டும். ஏனென்றால் தொப்பையானது ஊழல் பேர்வழிகள், சோம்பேறிகள், சமூகத்தைச் சுரண்டி வாழும் ஒட்டுண்ணிகள், மற்றும் இவர்களுக்கெல்லாம் கைக்கூலிகளாக விளங்கும் போலீசார் ஆகியோர்களின் முக்கிய அங்க அடையாளமாகும். ஆதலால் தொப்பைகளை ஒழிக்காமல் சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என முழங்கினேன். இப்போது என்னுடைய தொப்பை எனக்கு பூதாகரமாக தோன்றியது. நான் நொடிந்து போய் உட்கார்ந்துவிட்டேன். என் மனைவி என்ன ஆச்சு ஏதாவது பிரச்சினையா என வினவினாள். நான் ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பிவிட்டேன். ஆனால் தொடர்ந்து இந்த தொப்பை பிரச்சினை என்னை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று நாட்களாக என்னால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போனது. ஒரு வழியாக தினமும் ஓடுவதுதான் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழி என்பதை என்னுடைய நண்பர் ஒருவரிடமிருந்து அறிந்துக்கொண்டேன்.

தினமும் ஓடுவது என்று தீர்மானம் எடுத்தாலும், அதை செயல்படுத்துவது எனக்கு மிகவும் வேதனை தரும் விசயமாகிவிட்டது. நான் ஓட ஆரம்பித்தால் இந்த சமூகத்திலுள்ளோர் அனைவருக்கும் எனக்குத் தொப்பை இருப்பதை பகிரங்கபடுத்துவது போல் ஆகிவிடும். பிறகு அவர்கள் எல்லோரும் என்னை ஒரு ஒட்டுண்ணியாகத்தான் பார்ப்பார்கள். நான் ஒடாமல் விட்டுவிட்டால், இந்த தொப்பைப் பெரிதாகி, என் வீட்டு வாசலையும், அலுவலகத்தின் வாசலையும் பெரிதாக்க வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் சென்றுவிடும். அது இதைவிட அவமானகரமான விசயமாகிவிடும். அதனால் எனக்கு தினமும் ஓடுவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாமல் போனது. அரைகுறை மனதுடன் காலையில் எழுந்து ஓட ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது, நான் தனியனல்ல என்று. அந்த காலை வேளையில் அந்த நிழற் சாலையானது மனிதர்கள் யாரும் இல்லாமல் வெறும் தொப்பைகளால் நிறைந்திருந்தது. அந்த சாலை என்ன, நகரம் முழுவதுமே தொப்பைகளால்தான் நிறைந்திருந்தது. எங்கும் நிறைந்திருக்கும் இந்த தொப்பைகள் மக்களை சேரிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் விரட்டியடித்துவிட்டது போல தோன்றியது. ‘எப்படி இந்தத் தொப்பைகளால் மக்கள் எல்லோரையும் துரத்திவிட முடிந்தது?’ என மனதில் அசை போட்டவண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் போது, எல்லொரும் விரட்டியடிக்கப்படவில்லை என்பதை ஊர்ஜிதம் பண்ணுவது போல் எங்கள் பகுதிக்குப் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் கிழவித் தன்னுடைய தள்ளுவண்டியைத் தள்ளி வந்துகொண்டிருந்தாள். வெயிலானாலும், மழையானாலும், இவள் தன்னுடைய தள்ளுவண்டியில் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். மழைக்காலங்களில் சூரியன் காணாமல் போய்விடுவதுண்டு. ஆனால் இவளோ எங்கள் பகுதியெங்கும் தன்னுடைய தள்ளுவண்டியுடன் நிறைந்திருப்பாள். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் போது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவள் முகத்தில் புன்னகை பூத்தது. அவள் என்னுடையத் தொப்பையைக் குறைக்கும் முயற்சியை தன்னுடைய புன்னகையின் மூலம் ஆமோதிப்பது போல் தோன்றியது.

முதல் நாள் என்னால் நீண்ட தூரம் ஓட முடியவில்லை. கால்கள் வலிக்க ஆரம்பிக்க ஓடுவதை நிறுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் மற்ற தொப்பைகளை அவதானித்தேன். அந்தத் தொப்பைகள் தொடர்ந்து ஓடுவதற்கு அணிந்திருக்கும் விலையுயர்ந்த காலணிகள்தான் காரணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. நான் அணிந்திருக்கும் காலணிகளைப் பார்த்தேன். எனக்கே என்னைப் பற்றியக் கழிவிரக்கம் உண்டாயிற்று. நான் இப்படிப்பட்ட சாதாரண காலணிகள் அணிந்திருப்பதை மற்ற தொப்பைகள் பார்த்து நகைப்பது போல் எனக்கு தோன்றின. நான் நல்ல சம்பளம் வாங்கும் தலைமை மென்பொறியாளர் என்பதால் காசு என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக எப்போதும் இருந்ததில்லை. அதனால் அன்றைக்கே கடைக்கு சென்று விலையுயர்ந்த காலணிகளை வாங்கினேன்.

நல்ல காலணிகள் அணிந்திருந்ததனால் மறுநாள் ஓடும் போது எனக்கு கால்கள் வலிக்கவில்லை. அதனால் நான் நீண்ட தூரம் ஓடினேன். ஓடிய ஓட்டத்தில் என் உடம்பெங்கும் வியர்வை வழிந்தோடி ஆடைகளையெல்லாம் நனைத்துவிட்டது. அப்போது அந்த பால்கார கிழவி தன்னுடைய தள்ளுவண்டியுடன் எதிர் திசையிலிருந்து வெளிப்பட்டாள். அவள் என் காலணிகளையும், வியர்வையில் உடலுடன் ஒட்டிப்போன ஆடைகளையும் பார்த்தாள். பின் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். நான் இனிமேல் சமூகத்தின் ஒட்டுண்ணியல்ல என்று அவள் எனக்கு அங்கீகாரம் வழங்குவது போல் தோன்றியது. அந்த அங்கீகாரம் கிடைத்த உற்சாகத்தில் நான் இன்னும் வேகமாக ஓடினேன். ஆனால் திடீரென்று ஏதோ இனம் புரியாத உணர்வு என்னை மின்னல் போல் தாக்கியது. ஓடுவதை உடனே நிறுத்திவிட்டேன். அந்தக் கிழவி மோசமானவள். சூது நிறைந்த சூனியக்காரி. அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கவில்லை. மாறாக ஏளனமாக சிரித்திருக்கிறாள். நான் என் மனைவிக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது போன்ற சிறு உதவிகளையும் செய்யாதிருப்பது, பிஸ்கட் வாங்கப் போனால் கூட காரில் போவது, வெயிலில் காலணிகள் இல்லாமல் நடந்துபோன சிறுமிக்கு எந்த உதவியும் செய்ய முன்வராதது போன்ற விசயங்கள் எல்லாம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? எது எப்படியிருந்தாலும் இவ்வளவு தொப்பைகள் இருக்க கிழவி என்னை மட்டும் குறி வைத்து கேலிக்கணைகளால் துன்புறுத்துவது சரியல்ல. எனக்கு வந்த கோபத்தில் அவளை கொலை செய்துவிடலாமா என யோசித்தேன். ஆனால் அது முடியாதக் காரியம். ஏனென்றால் அவள் சமூகத்தின் மனசாட்சியாகவும், நீதிபதியாகவும் வலம் வந்துகொண்டிருந்தாள். என்னால் அவளுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து என்னை தூக்கிலிட்டுவிடும். என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போனேன். குனிந்து என் காலணிகளைப் பார்த்தேன். கிழவியின் ஏளனச் சிரிப்பு அந்தக் காலணிகளில் ஒட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தக் காலணிகளும் என்னைப் பார்த்து ஏளனத்துடன் சிரித்தன. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த காலணிகளைக் கழற்றி துண்டு துண்டாக கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டேன். இனி ஓடுவதை விட்டுவிட்டு, வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி புரிவது, அலுவலகத்திற்கு காரில் போகாமல் சைக்கிளில் செல்வது, அக்கம் பக்கத்து சிறுவர்களுடன் கபடி விளையாடுவது போன்றவற்றின் மூலமே தொப்பையைக் குறைக்க வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன்.

மறுநாளிலிருந்து என் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆரம்பித்தேன். கீழ் தளத்திலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். பாத்திரங்களை கழுவிச் சுத்தப்படுத்தினேன். துணிகளை துவைத்து உலர வைத்தேன். இந்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது வீட்டு வேலை எவ்வளவு சிரமமானது என்று. இதுநாள் வரையிலும் என்னுடைய மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யாமல் இருந்தது எனக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அதனால் அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வண்ணம் நானே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். என் மனைவி என்னை பாராட்டுவாள் எனும் சிறு எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததுதான். ஆனால் அவள் எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. என்னால் அதை புரிந்துக்கொள்ள முடிந்தது. பாராட்டப்படுவதற்கு அவள் செய்யாத வேலையை ஒன்றும் நான் செய்துவிடவில்லை. அதனால் பாராட்டை எதிர்பார்ப்பது அபத்தமானது என்றுணர்ந்தேன். ஆனால் சில தினங்களில் அவள் என்னுடன் பேசுவதை குறைத்து முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். ஏன் அவள் இவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கலாம் என்றிருக்கும் போது அவளே வந்து ‘எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்’ என்றாள். நான் ‘என்ன விசயம்? சொல்’ என்றேன். அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள், பின்னர் எதுவும் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டாள். நான் பதறி போய் ‘ஏய் என்ன விசயம்? சொல்லு’ என்று அவளை பிடித்து உலுக்கினேன். அதற்கு அவள் ‘அப்பாவி மாதிரி நடிக்காதீர்கள். எனக்குத் தெரியும் நீங்க எவளோ ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்று.’ என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்டது. நான் அதிர்ச்சியுடன் ‘நீ எதை வைத்து நான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறேன் என்கிறாய்?’ என்றேன். அவள் “முதலில் இரண்டு நாள்கள் இடிந்து போய் உட்கார்ந்திருந்தீர்கள். அப்புறம் உடம்பை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஓட ஆரம்பித்தீர்கள். இப்போது என்னவென்றால் என்னை ‘ஐஸ்’ வைப்பதற்காக விழுந்தடித்து வீட்டு வேலைகளை செய்கிறீர்கள். கள்ளத்தொடர்பு இல்லாமல் இருந்தால் நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்” என்றாள். நான் கலக்கத்துடன் ‘அப்படியெல்லாம் இல்லையம்மா. இதுநாள் வரை உன் மேல் எனக்குள்ள காதலை உணர முடியாதவாறு என்னுடைய தொப்பை என் அகக்கண்களை மறைத்துவிட்டது. இதை நம் பகுதிக்கு வரும் பால்கார கிழவிதான் எனக்கு புரிய வைத்தாள்.’ என்று கூறி, எவ்வாறு அந்த கிழவி என்னுடைய வாழ்க்கை முறையைத் தெரிந்து வைத்துக்கொண்டுத் தன்னுடைய கேலி கணைகளால் என்னுடையத் தவறுகளை உணர வைத்தாள் என விளக்கினேன்.

உண்மையை உணர்ந்து கொண்டதும் என் மனைவி சாந்தமடைந்தாள். எது எப்படியிருந்தாலும் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லுவது, அக்கம்பக்கத்திலுள்ள சிறுவர்களுடன் கபடி விளையாடுவது போன்ற என்னுடைய எண்ணங்களை கைவிட்டுவிட்டேன். ஏனென்றால் என்னுடைய மனைவி நான் ஒரு சைக்கிள் திருடன் எனவும், என்னுடன் விளையாடும் சிறுவர்கள் எனக்கு பிறந்த குழந்தைகள் எனவும் தவறாக நினைத்து விவாகரத்து கோர வாய்ப்பிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதனால் நான் வீட்டுவேலைகளை மட்டும் ஒழுங்காக செய்வது என தீர்மானித்தேன்.

எங்கள் இருவருக்கும் இடையிலுள்ள உறவு பலப்படுவதற்கு காரணமாக அமைந்ததால் என் மனைவி அந்த பால்கார கிழவியை தலையில் வைத்துக் கொண்டாடினாள். அவளை வீட்டுக்கு அழைத்து விருந்து படைத்தாள். ‘எங்கள் குடும்ப வாழ்க்கையை மேன்மையடையச் செய்ய வந்த தேவதை நீங்கள்.’ என்று அவளிடம் கூறினாள். உண்மையிலேயே கிழவி ஒரு அற்புதமான பிறவிதான். அல்லாவிடில் என் தனிப்பட்ட வாழ்க்கையை அவளால் இவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருக்க முடியாது. நான் அவளிடம் ‘எப்படி உங்களால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் துல்லியமாக அறிந்துக்கொள்ள முடிந்தது?’ என்று கேட்டேன். கிழவி பயந்துவிட்டாள். ‘எனக்கு உண்மையிலேயே உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.’ என்று அவள் சத்தியம் செய்தாள். கிழவியின் பயத்தை என்னால் உணர முடிந்தது. ஒருவேளை உண்மையை அறிந்துகொண்டால் நான் அவளை ரவுடிகளை வைத்து கொலைச் செய்துவிடுவேன் என அவள் பயந்திருக்க கூடும். ஆனால் எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் நான் கிழவியை எப்போதோ மன்னித்துவிட்டேன். என் மனைவி எரிச்சலுடன் ‘ஏன் தேவையில்லாத கேள்விகளை விருந்துக்கு வந்திருப்பவரிடம் கேட்கிறீர்கள்?’ என்றாள். தேவையில்லாமல் கிழவியை பயமுறுத்தியிருக்க கூடாதுதான். கிழவியின் பயத்தை போக்கும் எண்ணத்துடன் நான் அவளை பார்த்து ‘எப்படி இந்த வயதிலும் உங்களால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடிகிறது?’ என்று கேட்டேன். அவள் ‘நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட வேலை செய்யாமல் இருந்ததில்லை. அதனால்தான் நான் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்’ என்று பெருமிதத்துடன் கூறினாள். அவள் கூறியது முற்றிலும் உண்மை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் எங்கள் பகுதிக்கு தள்ளுவண்டியில் பால் விநியோகம் செய்து வந்தாள்.

நான் என் மனைவியை மிகவும் நேசிப்பவன் என்பதால் அவளும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என விரும்பினேன். அதனால் அவளுடைய பிறந்த நாளுக்கு நான் பால் விற்க கூடிய ஒரு தள்ளுவண்டியை பரிசாக அளிக்க தீர்மானித்தேன். இந்த பரிசின் மூலம் அவள் என்னுடையக் காதலின் தீவிரத்தை புரிந்துக்கொள்வாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. பிறந்தநாளன்று உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க நான் பெருமிதத்துடன் என் மனைவிக்கு ஒரு தள்ளுவண்டியை பரிசாக அளித்தேன். நான், அவள் என்னுடைய காதல் பரிசை பார்த்து சந்தோசப்படுவாள் என நினைத்தேன். ஆனாள் அவள் முகம் அவமானத்தால் கறுத்து போய்விட்டது. அழுத வண்ணம் ‘நீங்கள் என்னை அவமானபடுத்திவிட்டீர்கள்’ என்று கத்தினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘உன்னை அவமானபடுத்தும்படி நான் என்ன செய்துவிட்டேன்?’ என அவளை பார்த்து குழப்பத்துடன் கேட்டேன். அவள் அந்த தள்ளுவண்டியை சுட்டிக்காட்டி ‘என்ன இது?’ என்றாள். நான் ‘நீ நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காக நான் கொடுக்கும் காதல் பரிசு.’ என்றேன். அதற்கு அவள் ‘எனக்கு உங்கள் காதல் பரிசு தேவையில்லை. நான் உங்களை காதலிக்கவும் இல்லை.’ என்று கத்தினாள். நான் அவளை பார்த்து ‘ஏன்?’ என்றேன். அவள் ‘ஏனென்றால் உங்களுக்கு கணினியுடன் வேலை செய்து, செய்து மூளை தொப்பை வந்துவிட்டது.’ என்றாள். எனக்கு என் தவறு புரிய ஆரம்பித்தது. என் மனைவியினுடைய பிறந்தநாளுக்கு அவளுக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்வது சரியான செயலாக இருந்திருக்கும். ஆனால் நான் அவளுடைய விருப்பம் என்னவென்று கேட்காமல் பிறந்தநாள் பரிசை வாங்கிவிட்டேன். அது மிகப்பெரும் தவறுதான். நான் ஒரு குற்றவாளி போல் கூனி குறுகி போனேன். இதற்கு எல்லாம் காரணம் எனக்கு மூளை தொப்பை இருப்பதுதான். இந்த மூளை தொப்பையை போக்காவிடில் அவளுடைய காதலை என்னால் மீண்டும் பெற முடியாது என்பதை என்னால் உணரமுடிந்தது. அதனால் மூளை தொப்பையை குறைப்பதற்கு என்ன வழி என்று ஆராய ஆரம்பித்தேன்.

மூளைத் தொப்பை வருவதற்கு முதல் காரணம் என் மனைவி கூறியது போல் கணினியுடன் ஒன்றி போய்விடுவதுதான். இரண்டவது காரணம் என்று நான் உணர்ந்தது வயிற்று தொப்பை. எனவே முதலில் நான் கணினியுடன் ஒன்றி போவதை தவிர்க்க வேண்டும். பின்னர் வயிற்று தொப்பையை போக்கும் பொருட்டு உடலுழைப்பில் ஈடுபடுவதுடன், சமூகத்தின் மற்ற அங்கத்தினருடன் என்னை பிணைக்கும் செயல்களிலும் ஈடுபடவேண்டும். இவ்வாறு நான் செயல்பட்டால்தான் வயிற்று தொப்பையை போக்கி மூளை தொப்பையிலிருந்து விடுபட முடியும்.

மூளைத் தொப்பையை போக்க வேண்டும் என உறுதிபூண்ட நான் மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதும் எனக்கு கீழ் வேலை செய்யும் எல்லா மென்பொறியாளர்களுக்கும் அவரவர்கள் செய்ய வேண்டிய வேலையை கொடுத்து அந்த வேலைகளை செய்து முடிப்பதற்கான வழிமுறைகளைத் தெளிவாக விளக்கினேன். பின் அந்த மென்பொருள் கம்பெனி முதலாளிக்கு என்னுடைய பணிவிலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

கணினியிடமிருந்து விடுபட்டால் மட்டும் போதாது. தொப்பையை குறைக்க வேண்டுமென்றால் உடனடியாக உடலுழைப்பில் ஈடுபட்டாக வேண்டும். என்ன வேலை செய்யலாம் என்று யோசித்த போது தள்ளுவண்டியில் பால் வியாபாரம் செய்வது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் நான் பால்கார கிழவிக்கு போட்டியாக இருப்பதை என் மனைவி விரும்புவாளா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என் மனைவி நான் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிகொடுத்த பால் விற்கும் தள்ளுவண்டியை ஏற்றுக்கொள்ளாததன் காரணம் அவள் மிகவும் நேசிக்கும் பால்கார கிழவிக்கு தான் ஒரு போட்டியாக இருக்க விரும்பாததுவாகத்தான் இருக்கும் என எனக்குப் பட்டது. அதனால் பால் வியாபாரம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வது என முடிவெடுத்தேன். உடனடியாக ஒரு தள்ளுவண்டியை ஏற்பாடு செய்து காய்கறி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டேன். தெருக்கள் வழியாக ‘லேடிஸ் அண்ட் ஜென்டில்மென், தக்காளி, வெங்காயம், லேடிஸ் பிங்கர்...’ என்று சத்தமாக கூவிக்கொண்டு சென்றேன். வியாபாரம் நன்றாகத்தான் நடந்தது. முப்பது ரூபாய் லாபம் கிடைத்தது. வியாபாரத்தில் முன்பின் பழக்கமில்லாத எனக்கு முதல் நாளே அவ்வளவு லாபம் கிடைத்தது மிகுந்த சந்தோசத்தை அளித்தது. அதனால் உற்சாகத்துடன் தள்ளுவண்டியுடன் வீடு திரும்பினேன்.

வீட்டை நெருங்கும் போது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி மகளின் கார் வீட்டுக்கு அருகில் நிற்பதைப் பார்த்தேன். அவள் எதற்காக என்னை தேடி வந்தாள் என எனக்குத் தெரியவில்லை. என்ன விசயமாக இருக்கும் என்று யோசித்த வன்ணம் வீட்டிற்குள் நுழைந்த போது முதலாளியின் மகள் என் மனைவியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் என்னைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி திடீரென்று வேலையிலிருந்து நின்றுவிட்டீர்கள்? சம்பளம் குறைவென்று எண்ணினால் நீங்கள் அதைப்பற்றி நேரடியாகவே பேசியிருக்கலாமே!’ என்றாள். நான் பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் அவள் நான் பேசுவதை சட்டை செய்யாமலேயே தொடர்ந்து ‘உங்களுக்கு அறுபது சதவிகிதம் சம்பள உயர்வு மற்றும் கம்பெனி செலவில் வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுப்பதற்கான வசதி போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளோம்.’ என்றாள். நான் ‘நான் உடலுழைப்பில் மட்டும்தான் ஈடுபட போகிறேன். அதனால் கணினி சம்பந்தமான எந்த வேலைகளையும் நான் இனிமேல் செய்யப் போவதில்லை.’ எனத் திட்டவட்டமாக அவளிடம் தெரிவித்தேன். அவள் ‘கம்பெனிக்கு உங்களுடைய உதவி மிகவும் தேவைப்படுகிறது. அதனால் தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.’ என்று வேண்டினாள். அவள் புரியாமல் இப்படி பேசியது எனக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ‘உங்கள் அப்பா போன்ற பாஸ்டர்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மனிதர்களை மூளைத் தொப்பையுள்ளவர்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் நடத்துவது மூளைத்தொப்பை உருவாக்கும் கம்பெனிகள் அல்லாது வேறொன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை இவர்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டிய சமூக விரோதிகள்.’ என்றுக் கத்தினேன். என் மனைவி அதிர்ச்சியுடன் ‘என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்?’ என்று கேட்டாள். முதலாளியின் மகள் மீண்டும் ‘தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.’ என்று வேண்டினாள். நான் ‘முடியவே முடியாது.’ என்று உறுதியாக கூறினேன். அந்நேரம் என் மனைவி என்னுடைய கையைப் பிடித்து பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றாள். பின்னர் ‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? இதைவிட நல்ல வேலை கிடைப்பது கடினம். அதுபோக உங்களுடைய உதவி அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது போல தோன்றுகிறது. இக்கட்டான நிலையில் இப்படி வேலையை விடுவது சரியல்ல.’ என்று அழாத குறையாக கூறினாள். நான் ‘நீ நினைப்பது மாதிரி நான் ஒன்றும் அந்த அளவுக்கு கம்பெனிக்கு முக்கியமானவன் அல்ல. முதலாளியின் மகள் என்னுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் போல தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு பிடிவாதமாக வேலைக்கு வர வேண்டும் எனக் கூறுகிறாள். எது எப்படியென்றாலும் நான் அங்கு வேலைக்கு சேரப்போவதில்லை. ஏனென்றால் நான் உடலுழைப்பின் மூலம் தொப்பையைக் குறைக்கப் போகிறேன்.’ என்றேன். என் மனைவி ‘கடவுளே... உங்களுக்கு என்ன ஆச்சு?’ என்ற வண்ணம் அழ ஆரம்பித்தாள். பின்னர் ‘நீங்கள் இந்த மாதிரி நடந்து கொண்டால் நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்.’ என்றாள். நான் திடுக்கிட்டுப் போனேன். அந்தக் கம்பெனியில் வேலை செய்வதை விட்டு நின்ற காரணமே மூளைத் தொப்பையைக் குறைத்து என் மனைவியின் காதலை திரும்பப் பெறவேண்டும் எனும் எண்ணம்தான். இப்போது அவளே நான் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகாவிட்டால் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவளில்லாமல் என்னால் வாழ முடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் மீண்டும் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்வதாக அவளுக்கு உறுதியளித்தேன். பின்னர் முதலாளியின் மகள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்து, ‘நான் மீண்டும் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்ய சம்மதிக்கிறேன். ஆனால் நான் கம்பெனிக் கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் தண்ணீர் இறைப்பது போன்ற உடலுழைப்பு சம்பந்தமான வேலைகளைத்தான் செய்வேன்.’ என்றேன். அதற்கு அவள் ‘அந்த வேலைகளுடன் கூடவே தங்கள் கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்களுக்கு அவர்கள் வேலைகளிலுள்ள சந்தேகங்களை தீர்த்து அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளை கொடுக்க முடியுமா?’ என்று கேட்டாள். இது ஒரு நல்ல சமரச முயற்சியாக எனக்கு தோன்றியது. அதனால், ‘சரி... நான் இதற்கு உடன்படுகிறேன்.’ என்றேன். அவள் ‘சரி’ என்று கூறி என்னிடமும் என் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள். நான் செய்த தியாகம் என் மனைவியை நெகிழ வைத்திருக்க வேண்டும். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

என் வேண்டுகோளுக்கு இணங்க கம்பெனிக் கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் செல்லும் தண்ணீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கட்டிடத்திலுள்ள ஆறு மாடிகளுக்கும் நான்தான் தண்ணீர் இறைப்பதென்று முடிவாகியிருந்தது. உடலுழைப்பிலுள்ள மகத்துவத்தைத் தெரிந்த நான் உற்சாகத்துடன் தண்ணீர் இறைக்க ஆரம்பித்துவிட்டேன். மிகவும் சிரத்தையுடன் எந்த தளங்களிலும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டேன். நான் தண்ணீர் குடங்களை ஏந்தியவண்ணம் படிகளில் ஏறிக்கொண்டிருக்க எனக்கு கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்கள் கைகளில் லேப்டாப் கம்ப்யூட்டகளுடன் என் பின்னே வந்து தங்கள் வேலைகளில் எழும் சந்தேகங்களை கேட்டனர். நான் படிகளில் ஏறிய வண்ணமே அவர்களுடைய சந்தேகளை தீர்த்து அவர்களுடைய வேலைகளை செம்மையாகச் செய்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினேன். வேலையில் களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கும் நேரங்களில் அவர்களில் யார் யார் எந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து, அவர்கள் அந்த வேலைகளை சிறப்புடன் செய்வதற்கான வழிமுறைகளையும் விளக்கினேன்.

மூளை தொப்பையை போக்குவதற்கு வெறும் உடலுழைப்பு மட்டும் போதாது. வெளி சமூகத்துடன் இணந்து வாழ்ந்து, சமூகத்தின் ஒரு முழு அங்கத்தினனாக மாறினால்தான் மூளைத் தொப்பையை குறைக்க முடியும். அப்படி சமூகத்தின் முழு அங்கத்தினனாக மாறுவதற்கான எளிமையான வழியாக எனக்குப் பட்டது எங்கள் கம்பெனியிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள சேரியிலிருக்கும் சிறுவர்களுடன் மாலை நேரங்களில் கபடி விளையாடுவதுதான். ஆனால் நான் ஏற்கனவே கூறியதைப் போல என் மனைவிக்கு இது தெரிய வந்தால் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டு விடும். அதனால் நான் சேரியிலுள்ள சிறுவர்களுடன் கபடி விளையாடும் விசயத்தை என்னுடைய மனைவியிடமிருந்து முற்றிலுமாக மறைத்துவிட்டேன்.

எங்களுடைய கடுமையான உழைப்பால் கம்பெனி அபரிதமான வளர்ச்சியை அடைந்தது. கம்பெனியை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலமாக நடந்து கொண்டிருந்தன. நாங்கள் பணிபுரியும் கட்டிடத்தின் அருகிலேயே கம்பெனிக்கான பனிரெண்டு மாடிக் கட்டிடம் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. ஒரு நாள் கம்பெனி முதலாளி என்னை அவருடைய அறைக்கு அழைத்து ‘நீங்கள் இல்லாமல் இந்தக் கம்பெனி இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்க முடியாது. உங்களை கௌரவப் படுத்துவதற்காக நீங்கள் விரும்பும் எதையும் நான் செய்யத் தயாராயிருக்கிறேன். உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் தயங்காமல் என்னிடம் கூறுங்கள்.’ என்றார். நான் அவரைப் பார்த்து ‘தாங்கள் தற்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் புது கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் தண்ணீர் இறைக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால் நான் மிகவும் சந்தோசமடைவேன்.’ என்றேன். அதற்கு அவர், ‘தங்கள் ஒருவரால் எப்படி அந்த வேலையைச் செய்ய முடியம்.’ என கேட்டார். நான், ‘எனக்கு கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்களில் எண்பது பேர் மூளைத்தொப்பையைக் குறைக்கும் எண்ணத்துடன் தண்ணீர் இறைப்பில் எனக்கு உதவி செய்ய போவதாக உறுதியளித்துள்ளார்கள். அதனால் இந்த பொறுப்பை தாங்கள் எனக்குக் கொடுத்தால் கம்பெனி இன்னும் வேகமாக வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒத்துக்கொண்டார்.

தொடர்ந்து நான் செய்து வந்த உடலுழைப்பின் காரணமாக என்னுடைய வயிற்றுத் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. இப்போது என் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்டை என்னால் பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே எனக்குப் பெரும் சந்தோசத்தை அளித்ததுதான். ஆனால் எனக்கு மூளைத்தொப்பை குறைந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மூளைத்தொப்பை குறைந்தால்தான் என் மனைவியினுடைய காதலை என்னால் திரும்பப் பெறமுடியும். அதே நேரம் என் மனைவியினுடைய காதல் எனக்குத் திரும்பக் கிடைத்தால்தான் என் மூளைத்தொப்பை குறைந்திருக்கிறது என்று நான் அறிந்துக்கொள்ள முடியும். இதை என்னுடைய மனைவியிடம் கேட்பதற்கு பயமாக இருந்தது. ஏனென்றால் என் மனைவி எனக்கு மூளைத்தொப்பை குறையவில்லை என்று கூறி என்னைக் காதலிக்க முடியாது என்று மறுத்துவிட்டால் நான் நிலைகுலைந்து போவேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் எதுவென்றாலும் அவளாகவே கூறட்டும் என்று அது குறித்து அவளிடம் எதுவும் கேட்காமலேயே விட்டுவிட்டேன். அப்படியிருக்க ஒரு விடுமுறை நாளில் என் மனைவியினுடைய அம்மாவும் அப்பாவும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களை நன்றாக உபசரிக்கும் எண்ணத்துடன் சந்தைக்குச் சென்று காய்கறிகளையும், பழங்களையும் வாங்கிக்கொண்டு வருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டை நெருங்கும் போது வீட்டினுள் என் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவளுடையத் தாய் ‘இந்தப் புத்தி பேதலித்தவனுடன் இருந்து ஏன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறாய்? பேசாமல் எங்களுடன் வரச் சொன்னால் வரவேண்டியதுதானே?’ என்று கூறினாள். என்னுடைய மனைவி ‘எத்தனைத் தடவை நான் சொல்ல வேண்டும்? என்னால் வர முடியாது என்றால் வரமுடியாதுதான்.’ என்று கோபத்துடன் கத்தினாள். அவளின் அப்பா ‘அதான் ஏனென்று கேட்கிறேன்.’ என்று திருப்பிக் கத்தினார். என்னுடைய மனைவி ‘ஏனென்றால் அவரில்லாமல் என்னால் வாழ முடியாது.’ என்று கூறி பலமாக அழ ஆரம்பித்துவிட்டாள். எனக்கு மூளைத்தொப்பை குறைந்துவிட்டது என்பதை அந்த கணமே நான் உணர்ந்தேன். அவளுடைய அப்பா ‘உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.’ என்று கூறி அவருடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் நின்றிருந்த என்னை பார்த்ததும் அவர்கள் எரிச்சலுடன் முகத்தை திருப்பிக்கொண்டு படிகட்டுகளில் இறங்கினர். நானோ வேகமாக வீட்டினுள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் என் மனைவி அழுகையை நிறுத்தி ஒரு தேவதை, குழந்தையை பார்த்துப் புன்னகைப்பது போல் புன்னகைத்தாள்.

===================================================
புது எழுத்து (ஆடி 2007)

No comments: